இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி
திருமுறை : மூன்றாம் திருமுறை 76 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பாடல் எண் : 01
கற்பொலி சுரத்தினெரி கானினிடை மாநடம் அது ஆடி மடவார்
இற்பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடமென்பர் புவிமேல்
மற்பொலி கலிக்கடன் மலைக்குவடு எனத்திரை கொழித்த மணியை
விற்பொலி நுதற் கொடியிடைக் கனிகைமார் கவரும் வேதவனமே.
பாடல் விளக்கம்:
பருக்கைக் கற்கள் மிகுந்த, பாலைவனம் போன்ற வெப்பம் உடைய சுடுகாட்டில் சிவபெருமான் நடனமாடுகின்றார். அவர் மகளிர்களின் இல்லந்தோறும் புகுந்து பிச்சை ஏற்பவர். எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூமியில், ஒலிக்கின்ற கடலலைகள் மலைச்சிகரங்களைப் போல உயர்ந்து ஓடிவந்து கரையிலே ஒதுக்குகின்ற இரத்தினங்களை வில்லைப் போன்ற வளைந்த நெற்றியும், பூங்கொடி போன்ற மெல்லிய, குறுகிய இடையும் உடைய உருத்திரகணிகையர்கள் வாரிக் கொள்கின்ற வளமிக்க திருவேதவனமாகும்.
பாடல் எண் : 02
பண்டிரை பயப்புணரியில் கனகமால் வரையை நட்டு அரவினைக்
கொண்டு கயிறிற் கடைய வந்த விடம் உண்ட குழகன் தன் இடமாம்
வண்டிரை நிழல் பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல் வெறியார்
வெண்டிரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே.
பாடல் விளக்கம்:
முற்காலத்தில் ஒலிக்கின்ற அலைகளையுடைய பாற்கடலில், பொன்மயமான மந்தரமலையை மத்தாக ஊன்றி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் கடைய எழுந்த ஆலகால விடத்தை, அமுது போன்று உண்டருளிய அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நிழல்தரும் சோலைகளில் வண்டுகள் ஆரவாரிப்பதாய், மாதவி முதலிய மரங்களின் மீது தவழும் தென்றற் காற்றின் நறுமணமுடையதாய்க் கடலின் வெண்ணிற அலைகள் செம்பவளங்களை உந்தித் தள்ளும், புகழுடைய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
பாடல் எண் : 03
காரியன் மெல்லோதி நதிமாதை முடி வார்சடையில் வைத்து மலையார்
நாரியொருபால் மகிழும் நம்பருறை என்பர் நெடுமாடம் மறுகில்
தேரியல் விழாவினொலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால்
வேரிமலி வார்குழனன் மாதரிசை பாடலொலி வேதவனமே.
பாடல் விளக்கம்:
மேகத்தையொத்த மெல்லிய கூந்தலையுடைய, கங்காதேவியை நீண்ட சடைமுடியில் தாங்கி, மலைமகளைத் தன் திருமேனியின் பாதிப்பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, நீண்ட மாடங்களையுடைய வீதிகளில் தேர் ஓடும் திருவிழாக்களின் ஒலியும், திண்ணிய சங்குகளின் ஒலியும், ஒளி பொருந்திய பேரி அல்லது தம்பட்டம் என்னும் வாத்தியத்தின் ஒலியும், நாடோறும் ஒலிக்க, நறுமணம் கமழும் தொங்கும் கூந்தலையுடைய பெண்கள் இசைக்கருவிகளோடு பாடுகின்ற பாட்டினிசையும் ஒலிக்கின்ற திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
பாடல் எண் : 04
நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி வந்திடபமே
ஏறி உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதியாம்
ஊறு பொருளின் தமிழியல் கிளவி தேரும் மடமாதர் உடனார்
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான் தம் திருமேனியிலே திருநீற்றை ஒளி பொருந்தப் பூசியவர். இடப வாகனத்தில் ஏறியவர். ஊர்கள்தொறும் சென்று பிச்சை எடுத்து உண்பதில் இச்சையுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, இனிய தமிழ்மொழியில் இயற் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் இளம்பெண்களுடன், வாணிகத்தின் பொருட்டு வேற்றுத் திசைகளிலிருந்து கப்பலில் வந்த ஆண்கள் பேசுவதற்குச் சொற்களைத் தெரிந்து கொள்ளும் அழகிய திருவேதவனம் ஆகும்.
பாடல் எண் : 05
கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம்
எத்தனை உலப்பில் கருவித்திரள் அலம்ப இமையோர்கள் பரச
ஒத்தற மிதித்து நடமிட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே.
பாடல் விளக்கம்:
கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை, படகம் என்னும் இசைக்கருவிகள் ஒலிக்க, தேவர்கள் துதிக்க, தாளத்திற்கேற்பத் திருத்தாளையூன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்து வல்லவர்களும் நெருங்கி மகிழ்ச்சி மீதூரத் துள்ளிக் குதிக்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
பாடல் எண் : 06
மாலைமதி வாளரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழலக்
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனலாடும் அரனூர்
சோலையின் மரங்கள்தொறும் மிண்டி இனவண்டு மது உண்டு இசைசெய
வேலையொலி சங்குதிரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே.
பாடல் விளக்கம்:
மாலையில் தோன்றும் சந்திரனும், ஒளிபொருந்திய பாம்பும், கொன்றை மலரும் நெருங்கிய சடையில் தங்கிச் சுழன்று புரள, காலையில் தோன்றிய கதிரவன் ஒளியும் விண்மீன்களின் ஒளியும், திருமேனியின் ஒளியும், திருநீற்றுப் பூச்சின் ஒளியும் கண்டு அடங்குமாறு, நெருப்பேந்தி நடனமாடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சோலைகளிலுள்ள மரங்களில் வண்டினங்கள் தேனைக்குடித்து ஒலி செய்ய, கடலினின்றும் ஒலிக்கும் சங்குகளையும், கப்பல்களையுடைக்கும் சுறா மீன்களையும் அலைகள் கரைக்குக் கொணரும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
பாடல் எண் : 07
வஞ்சக மனத்து அவுணர் வல்லரணம் அன்று அவிய வார்சிலை வளைத்து
அஞ்சகம் அவித்த அமரர்க்கு அமரன் ஆதி பெருமானது இடமாம்
கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில
விஞ்சுக இயக்கர் முனிவக்கணம் நிறைந்துமிடை வேதவனமே.
பாடல் விளக்கம்:
வஞ்சகம் பொருந்திய மனத்தையுடைய அசுரர்களின் மூன்று மதில்களையும் பெரிய மேருமலையை வில்லாக வளைத்து அழகிய உலகில் ஒழித்த தேவதேவனாம், முழுமுதற் கடவுளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, முள் முருக்கம் பூவையொத்த உதடுகளால், கனிபோன்று இனிய மொழிகளைப் பேசும் சிவந்த வாயையுடைய பெண்கள் பாட, வியக்கும் மனத்தையுடைய இயக்கர்களும், முனிவர் கூட்டங்களும் நிறைந்து போற்ற விளங்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
பாடல் எண் : 08
முடித்தலைகள் பத்துடை முருட்டுரு அரக்கனை நெருக்கி விரலால்
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பலதுயர்
கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே.
பாடல் விளக்கம்:
கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையுடையனாய், முரட்டுத் தன்மையுடைய அரக்கனான இராவணனைத் தன் காற் பெருவிரலை ஊன்றி மலையின்கீழ் நெருக்கிப் பின் அவனுக்குக் கருணை புரிந்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், பலவிதத் துன்பங்களும் கெடும்படி அறம் இயற்றும் முயற்சியுடையவர்களாய், புலவர்களின் வறுமையை நீக்கக் கருதித் திரவியங்களைக் கொடுக்கும் கொடையாளிகள் நிறைந்த திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
பாடல் எண் : 09
வாசமலர் மேவி உறைவானும் நெடுமாலும் அறியாத நெறியைக்
கூசுதல் செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரனூர்
காசு மணி வார் கனகம் நீடு கடலோடு திரைவார் துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே.
பாடல் விளக்கம்:
நறுமணம் கமழும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியாத சிவன் பெருமையைப் பழிப்பதற்குக் கூசாத பயனிலிகளாகிய சமணர்களுடன், பௌத்தர்களும் அடையாத சிவபெருமான் வீற்றிருக்கும் தலமாவது செம்படவர்கள் பெரிய கடலலைகள் ஓடிவரும்போது வலையை வீசி, அவை கொணர்கின்ற இரத்தினங்களையும், மணிகளையும் சிறந்த பொன்னையும் வாரி விலை பேசும் அழகிய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
பாடல் எண் : 10
(இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.)
பாடல் எண் : 11
மந்த முரவம் கடல் வளங்கெழுவு காழிபதி மன்னு கவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால்
சந்தமிவை தண் தமிழின் இன்னிசை எனப் பரவு பாடலுலகில்
பந்தனுரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வானுலகமே.
பாடல் விளக்கம்:
மந்தமான ஓசையுடைய கடல் வளமிக்க சீகாழிப் பதியில் விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் அவதரித்த ஞானசம்பந்தன், திருவேதவனத்தில் வீற்றிருந்தருளும் திருவெண்ணீறு அணிந்த சிவபெருமானின் இன்னருளால் அவனைப் போற்றிச் சந்தம் விளங்கும் இன்னிசையால் அருளிய இத்திருப்பதிகத்தைப் பாடுபவர்கள் உயர்ந்த சிவலோகத்தில் வாழ்வர்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக