திங்கள், 7 மார்ச், 2016

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 11

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : ஏழாம் திருமுறை 71 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம் பேணில் 
தாழைப்பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து 
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
யாழின் இசையைப் பழித்த அத்தன்மையையுடைய சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும், பேழை போலும் சடைமுடியில் பிறையைச் சூடினவனும் ஆகிய இறைவனது இடத்தை அறிந்து வழிபடவேண்டின், அது, எளிய குரங்குகள் தாழம் புதரூடே புகுந்து, சிறிய புழைகளில் நுழைந்து, வாழைப்பழத்தைப் பறித்து உண்கின்ற திருமறைக்காடேயாகும்.


பாடல் எண் : 02
சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான் இடம் தெரியில் 
முகரத்திடை முத்தின் ஒளி பவளத்திரள் ஓதம்
தகரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே. 

பாடல் விளக்கம்‬:
தலையில் இளமையான பிறையைச் சூடின இறைவனது இடத்தை அறிய வேண்டின், சங்கினிடத்தில் தோன்றிய முத்துக்களினிடையே மறைகின்ற பவளக்கூட்டத்தை உடைய அலைகள், தகர மரங்களின் அடியிலும், தாழைமரம், குங்கும மரம் இவைகளின் நிழலிலும் மகர மீனையும், சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காடேயாகும்.


பாடல் எண் : 03
அங்கங்களும் மறைநான்குடன் விரித்தானிடம் அறிந்தோம் 
தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணல் படப்பை
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
வேதங்கள் நான்கினோடு, அவற்றின் அங்கங்களையும் விரித்தவனாகிய இறைவனது இடத்தை யாம் அறிந்தோம்; அஃது எதுவெனின், தென்னை மரங்களும், நீண்ட பனை மரங்களும் தம் தம் பழங்கள் விழநிற்கின்ற மணலையுடைய தோட்டத்தில், சங்குகளும், விளங்குகின்ற இப்பிகளும், வலம்புரிச் சங்குகளும் அலைகளால் எறியப் பட, மரக்கலங்களும் உயர்ந்த பாய்மரங்களாகிய கூப்பிய கைகளுடன் வந்து வணங்குகின்ற திருமறைக்காடேயாகும்.


பாடல் எண் : 04
நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்சவடி மார்பன்
உரை விரவிய உத்தமனிடம் உணரல்லுறு மனமே 
குரை விரவிய குலசேகரக் கொண்டல் தலை விண்ட  
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
நரைபொருந்திய மயிரால் இயன்ற பஞ்சவடியை அணிந்த மார்பை உடையவனும், அதனால், புகழ் பொருந்திய மேலானவனும் ஆகிய சிவபெருமானது இடம் யாது என்று உணரப் புக்க மனமே, அது, ஒலி பொருந்திய கரைக்கண் உள்ள மாமரத்தினது, மேகங்கள் தவழ்கின்ற தலையில், உடைந்த மலைபோல்வனவாகிய அலைகள்மோதி மீள்கின்ற திருமறைக்காடேயாகும்.


பாடல் எண் : 05
சங்கைப்பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த
கங்கைச் சடைமுடி உடையவர்க்கு இடமாவது பரவை 
அங்கைக்கடல் அருமாமணி உந்திக் கரைக்கு ஏற்ற 
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
மனமே, கங்கையைத் தாங்கிய சடைமுடியை யுடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாவது, கடலினது கைகள் ஆகிய அலைகள் அக்கடலின்கண் உள்ள அரிய, சிறந்த மணிகளைத் தள்ளிக்கொண்டு, கரைக்கு ஏற்புடைய மரக்கலத்தோடு சுறா மீனையும் கொணர்ந்து சேர்க்கின்ற திருமறைக்காடேயாகும் அது பற்றி ஐயமாக நினையாது, அங்குச் சென்று அவனை வணங்கித் துதித்தற்கு ஒருப்படு.


பாடல் எண் : 06
அடல் விடையினன் மழுவாளினன் அலராலணி கொன்றைப் 
படரும் சடைமுடி உடையவர்க்கு இடமாவது பரவைக்
கடலிடையிடை கழியருகினில் கடிநாறு தண் கைதை 
மடலிடையிடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்து கிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும்.


பாடல் எண் : 07
முளை வளர் இளமதி உடையவன் முன்செய்த வல்வினைகள்
களை களைந்து எனை ஆளல்லுறு கண்டன் இடம் செந்நெல் 
வளை விளைவயல் கயல் பாய்தரு குணவார் மணல் கடல் வாய் 
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
புதுவதாகத் தோன்றிய, வளர்தற்குரிய, இளமையான பிறையை உடையவனும், யான் முன்னே செய்த வலிய வினைகளை, களைmகளைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது, செந்நெற் கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற, மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும், ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற் கரைக்கண் அக்கடல், வளைந்த சங்குகளோடு, சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக் காடேயாகும்.


பாடல் எண் : 08
நலம் பெரியன சுரும்பார்ந்தன நங்கோனிடம் அறிந்தோம்
கலம் பெரியன சாரும் கடல் கரைபொருதிழி கங்கைச்
சலம் புரி சடைமுடி உடையவர்க்கு இடமாவது பரவை 
வலம் புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
கங்கை நீரோடு திரித்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாய் நிற்பது, நற்பொருள்கள் மிக்கனவும், வண்டுகள் நிறைந்தனவும், பெரியனவுமாகிய மரக்கலங்கள் பொருந்திய கடலினது கரையைமோதி மீள்கின்ற அலைகள், வலம்புரிச் சங்குகளையும், சலஞ்சலச் சங்குகளையும் கொணர்ந்து வீசுகின்ற திருமறைக்காடேயாகும். இதனை அறிந்தோமாகலின், நாம் நம் பெருமானது இடத்தை அறிந்தோமாயினோம்.


பாடல் எண் : 09
குண்டாடியும் சமணாடியும் குற்று உடுக்கையர் தாமும் 
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழுமின்
எண் தோளினன் முக்கண்ணினன் ஏழிசையினன் அறுகால்
வண்டாடு தண்பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், சிறிய உடையை உடைய சிலர் தாமும், மூர்க்கத் தன்மை பேசியும், சமண சமயக் கொள்கைகளை உரைத்தும் சில பொருள்களை, தம் குறையறிவாற் கண்டார்; எனினும், அவைகளைப் பொருளாக நினையாது, எட்டுத் தோள்களை உடையவனும், மூன்று கண்களையுடையவனும், ஏழிசைகளையுடையவனும் ஆகிய சிவபெருமானது, ஆறு கால்களையுடைய வண்டுகள் சூழ்கின்ற குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஓங்கும் நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காட்டைக் கைகூப்பித் தொழுமின்கள்.


பாடல் எண் : 10
பாரூர்பல புடைசூழ் வளவயல் நாவலர் வேந்தன் 
வாரூர்வன முலையாள் உமை பங்கன் மறைக்காட்டை 
ஆரூரன தமிழ்மாலைகள் பாடும் அடித்தொண்டர் 
நீரூர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே.

பாடல் விளக்கம்‬:
கச்சின்மேல் எழுகின்ற அழகிய தனங்களை யுடையவளாகிய உமாதேவி பங்கினனாகிய சிவபெருமானது திருமறைக்காட்டை, நிலத்தில் உள்ள ஊர்கள் பல சூழ்ந்துள்ளனவாகத் தலைமை பெற்று விளங்கும், வளவிய வயல்கள் சூழ்ந்த திருநாவலூரார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரனது தமிழ்ப்பாடல்களால் பாடுகின்ற, அப்பெருமானது திருவடித் தொண்டர்கள், நீர் சூழ்ந்த நிலத்தொடு உயர்ந்து விளங்கும் புகழ் மிகப்பெறுவார்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| --- திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக