சனி, 5 மார்ச், 2016

திருமுதுகுன்றம் திருமுறை திருப்பதிகம் 11

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை

திருமுறை : ஏழாம் திருமுறை 63 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
மெய்யை முற்றப் பொடிப் பூசியொர் நம்பி 
வேதம் நான்கும் விரித்து ஓதியொர் நம்பி
கையில் ஒர் வெண்மழு ஏந்தியொர் நம்பி 
கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி 
செய்ய நம்பி சிறு செஞ்சடை நம்பி 
திரிபுரம் தீயெழச் செற்றதோர் வில்லால் 
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி 
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.

பாடல் விளக்கம்‬:
திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே, வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய ஒப்பற்ற நம்பியே, கையில் ஒரு வெள்ளிய மழுவை ஏந்திய ஒப்பற்ற நம்பியே, கண்கள் மூன்றை உடையவனாகிய நம்பியே, செம்மை நிறம் உடைய நம்பியே, புல்லிய சிவந்த சடையை உடைய நம்பியே, முப்புரங்களை நெருப்பு எழுமாறு வளைக்கப்பட்டதொரு வில்லால் எய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.


பாடல் எண் : 02
திங்கள் நம்பி முடிமேல் அடியார்பாற் 
சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் 
அங்கண் நம்பி அருள் மால் விசும்பாளும் 
அமரர் நம்பி குமரன் முதல் தேவர்
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி 
தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் 
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி 
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.

பாடல் விளக்கம்‬:
திருமுடியில் பிறையை அணிந்த நம்பியே, அடியாரிடத்து இனிது விளங்கி நிற்கும் நம்பியே, பிறப்பினை எடுத்த உயிர்களுக்கெல்லாம் அவ்விடத்து மறைந்து நின்று அருள்செய்யும் நம்பியே, மயக்கத்தைத் தரும் வானுலகத்தை ஆள்கின்ற, தேவர்கட்குத் தலைவனாகிய நம்பியே, முருகன் முதலிய முத்தர்கட்குத் தலைவனாகிய நம்பியே, வழிபடப்படுதற்கு ஒப்பற்ற நம்பியே, "நீயே உலகிற்குத் தந்தை" என்று தெளிந்து உன் திருவடிகளைப் பணிந்து துதிக்கின்ற எங்களுக்குச் சிறந்து நிற்கின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.


பாடல் எண் : 03
வருந்த அன்று மதயானை உரித்த 
வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் 
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த 
அருளென் நம்பி பொருளால் வரு நட்டம் 
புரிந்த நம்பி புரிநூலுடை நம்பி 
பொழுதும் விண்ணும் முழுதும் பலவாகி
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி 
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.

பாடல் விளக்கம்‬:
அன்று, மதத்தையுடைய யானையை அது வருந்துமாறு உரித்த நீதியை உடைய நம்பியே, ஓசையைச் செய்கின்ற கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட நம்பியே, அதன்கண் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்த அருளுடைய நம்பியே, அவ்வருளாகிய பொருள் காரணமாக அரிய நடனத்தைச் செய்கின்ற நம்பியே, முப்புரி நூலையுடைய நம்பியே, காலமும் வானமும் முதலிய எல்லாப் பொருள்களுமாய்ப் பலவாகி நிற்கின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.


பாடல் எண் : 04
ஊறு நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் 
உரிய நம்பி தெரியம் மறை அங்கம்
கூறு நம்பி முனிவர்க்கு அருங்கூற்றைக் 
குமைத்த நம்பி குமையாப் புலன் ஐந்தும் 
சீறு நம்பி திருவெள்ளடை நம்பி 
செங்கண் வெள்ளைச் செழுங்கோட்டு எருது என்றும் 
ஏறு நம்பி என்னை ஆளுடை நம்பி 
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.

பாடல் விளக்கம்‬:
உள்ளத்தில், அமுதம்போல ஊற்றெழுகின்ற நம்பியே, எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய நம்பியே, முனிவர்கட்கு, வேதத்தையும், அதன் அங்கத்தையும் அறியக் கூறிய நம்பியே, அழித்தற்கரிய கூற்றுவனை அழித்த நம்பியே, அடக்குதற்கு அரிய ஐம்புல ஆசைகளையும் கடிந்தொதுக்கிய நம்பியே, திருவெள்ளடைக் கோயிலில் வாழும் நம்பியே, சிவந்த கண்களையும், செழுமையான கொம்புகளையும் உடைய, வெண்மையான எருதையே எந்நாளும் ஏறுகின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.


பாடல் எண் : 05
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றைக் 
குலைத்த நம்பி சிலையா வரை கையில் 
பற்று நம்பி பரமானந்த வெள்ளம் 
பணிக்கும் நம்பி எனப் பாடுதல் அல்லால் 
மற்று நம்பி உனக்கு என்செய வல்லேன் 
மதியிலேன் படு வெந்துயர் எல்லாம் 
எற்று நம்பி என்னை ஆளுடை நம்பி 
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.

பாடல் விளக்கம்‬:
அறிவிலேனாகிய யான் படுகின்ற கொடிய துன்பங்களை எல்லாம் ஓட்டுகின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, உன்னை, "மலையை வில்லாக வளைத்த நம்பியே, பின்பு அதனைக் கையிற்பிடித்து நின்ற நம்பியே, பின்பு அதனால் பகைவரது மதில்கள் மூன்றை அழித்த நம்பியே, அடியார்களுக்குப் பேரின்ப வெள்ளத்தை அளித்தருளுகின்ற நம்பியே" எனப் பாடுவதையன்றி ஒப்பற்ற பெரிய நம்பியாகிய உனக்கு யான் வேறு என் செய்ய வல்லேன்! நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.


பாடல் எண் : 06
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் 
ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் 
தெரித்த நம்பி ஒரு சேவுடை நம்பி 
சில்பலிக்கு என்று அகந்தோறும் மெய்வேடம் 
தரித்த நம்பி சமயங்களின் நம்பி 
தக்கன் தன் வேள்வி புக்கு அன்று இமையோரை 
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி 
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.

பாடல் விளக்கம்‬:
உனது திருவடியைக் கைகளால் தொழுகின்றவரது துன்பங்களை அரித்தொழிக்கின்ற நம்பியே, நெருங்கிய உலகங்கள் பலவற்றையும் முன்பு ஆக்கிய நம்பியே, பின்பு அவைகளைக் காக்கின்ற நம்பியே, ஒற்றை எருதையுடைய நம்பியே, இல்லந்தோறும் சென்று ஏற்கும் சில பிச்சைக்கென்று, திருமேனியில் அதற்குரிய வேடத்தைப் பூண்ட நம்பியே, சமயங்கள் பலவற்றிற்கும் தலைவனாகிய நம்பியே, அன்று தக்கன் வேள்விச்சாலையிற் புகுந்து, ஆங்கிருந்த தேவரை எல்லாம் அஞ்சியோடச் செய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.


பாடல் எண் : 07
பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும் 
பிரமனும் என்று இவர் நாடியும் காணா 
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தலாமே 
உலகு நம்பி உரை செய்யுமது அல்லால் 
முன்னை நம்பி பின்னும் வார்சடை நம்பி 
முழுதிவை இத்தனையும் தொகுத்து ஆண்டது 
என்னை நம்பி எம்பிரானாய நம்பி 
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.

பாடல் விளக்கம்‬:
"நப்பின்னை" என்பவள் விரும்புகின்ற தோள்களையுடையவனாகிய நீண்ட உருவத்தையுடைய திருமாலும், பிரமனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் தேடியும் காணமாட்டாத நம்பியே, உலகிற்கு ஒருவனாய நம்பியே, உன்னை வாழ்த்துதலாகிய அதுவன்றி, அணுகுதல் ஒருவர்க்கு இயல்வதோ! எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள நம்பியே, பின்னிய நீண்ட சடையையுடைய நம்பியே, உன் இயல்பெல்லாம் இவை போல்வனவே; ஆயினும், இத்தனையையும் தோன்றாவாறு அடக்கி, பெருநம்பியாகிய நீ எளிவந்து என்னை ஆண்டது என்னையோ? எமக்குப் பெருமானாகிய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.


பாடல் எண் : 08
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி 
தோற்றம் ஈறு முதலாகிய நம்பி
வல்லை நம்பி அடியார்க்கு அருள் செய்ய 
வருந்தி நம்பி உனக்கு ஆட்செய கில்லார் 
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி 
அணங்கொரு பாகம் வைத்து எண் கணம் போற்ற
இல்லம் நம்பி இடு பிச்சைகொள் நம்பி 
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.

பாடல் விளக்கம்‬:
சொற்களாய் நிற்கும் நம்பியே, அச்சொற்களின் பொருள்களாய் நிற்கும் நம்பியே, எப்பொருளின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் முதல்வனாகிய நம்பியே, அடியார்க்கு அருள்செய்ய வல்லையாகிய நம்பியே, உனக்கு ஆட்செய்ய மாட்டாதார், உலகில் வருத்தத்தை அடைந்து அல்லல் படுதற்குக் காரணம் என் நம்பி நம்பீ? பதினெண் கணங்களும் போற்ற, உமையை ஒருபாகத்தில் வைத்திருந்தும், இல்லங்களை நாடிச்சென்று அங்கு உள்ளவர் இடுகின்ற பிச்சையை ஏற்கின்ற நம்பி. நம்பீ, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.


பாடல் எண் : 09
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து 
உனைக் காதலித்து ஆட் செய்கிற்பாரை 
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர 
அருளும் நம்பி குரு மாப்பிறை பாம்பைத் 
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்கத் 
திருத்தும் நம்பி பொய்ச் சமண் பொருளாகி 
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி 
எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.

பாடல் விளக்கம்‬:
நம்பியாகிய உனது கழல் அணிந்த திருவடியைக் காண்போம் என்னும் உறுதியோடும் மனம் பற்றி உன்னை விரும்பி உனக்கு ஆட்செய்கின்றவரை, நீ ஆட்கொண்டு அவர் விரைந்து உயர்கதி அடையுமாறு அருள்செய்கின்ற நம்பி! நம்பீ, ஒளியையுடைய சிறந்த பிறை பாம்பைப் பொருந்துகின்ற முடியில், "கங்கை" என்னும் நங்கை தங்கும்படி இனிது வைத்துள்ள நம்பி! நம்பீ, சமணர்க்குப் பொய்ப்பொருளாய் மறைந்து நின்று, எங்கட்கு மெய்ப்பொருளாய் வெளிநிற்கின்ற நம்பியே, தேவர்கள் வணங்குகின்ற நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.


பாடல் எண் : 10
கரக்கும் நம்பி கசியாதவர் தம்மை 
கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் 
பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா....
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று.

பாடல் விளக்கம்‬:
உன்னிடத்து மனம் உருகாதவருக்கு உன்னை மறைத்துக்கொள்கின்ற நம்பியே, அன்பு செய்பவர்க்கு இப்பிறப்பிலும், வரும் பிறப்பிலும் இன்பத்தை மிகத் தருகின்ற நம்பியே.......

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| --------- திருமுதுகுன்றம் திருமுறை பதிகம் முற்றிற்று --------- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக