இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வைத்திய நாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ தையல் நாயகி
திருமுறை : இரண்டாம் திருமுறை 43 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
தேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீஸ்வரன் கோவில் என்றும் விளங்கும் இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சடாயு என்னும் புள் (பறவை), ரிக்வேதம், முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்திய நாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்திய நாதரையும் இறைவி தையல் நாயகியையும் வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.
கோவில் அமைப்பு: நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் ராஜ கோபுரங்களுடனும், ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்ப மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்திய நாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி. அடுத்து இடப்பால் சித்தாமிர்தகுளம் உள்ளது. மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்திய நாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். சுவாமி சந்நிதிக்கு நேரில் இரு கொடிமரங்கள் உள்ளன. சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள் வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்டு வணங்கி அவரின் பேரருளைப் பெற நாம் வாழ்வில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இறைவி தையல் நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமார சுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அசுரன் சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற தலம் இதுவாகும். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமரா சுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும். அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும்.
கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.
வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சினாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையாரும் உள்ளனர். ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும், சஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன.
சடாயு, வேதம், முருகன், சூரியன், அங்காரகன், பாரம்மா, இராமர், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, பராசர முனிவர், துர்வாச முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
இத்தலம் நவக்கிரக ஸ்தலங்களில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க் கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரக மூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர்.
இத்தலம் ஒரு கோளிலித் தலம். இத்தலத்தில் நவகிரங்களுக்கு வலிமை இல்லை. நவகிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர். இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். தினந்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஆட்டு வாகனத்தில் அங்காரக மூர்த்தி எழுந்தருளுவார்.
சிதம்பரம் - மயிலாடுதுறை இரயில் பாதையில் உள்ள நிலையம். இரயில் நிலையத்திலிருந்து 1கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது. சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை ஆகிய இடங்களிருந்து பேருந்து வசதி உள்ளது.
நன்றி shivatemples இணையதளத்திற்கு
பாடல் எண் : 01
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையுமிடம்
தள்ளாய சம்பாதி சடாயு என்பார்தாம் இருவர்
புள்ளானார்க்கு அரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
பாடல் விளக்கம்:
தேன் நிறைந்த அழகிய கொன்றை மலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தை மலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
பாடல் எண் : 02
தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையுமிடம்
மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.
பாடல் விளக்கம்:
ஒருபாகத்தே விளங்கும் தையல் நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.
பாடல் எண் : 03
வாச நலம் செய்து இமையோர் நாள்தோறும் மலர்தூவ
ஈசன் எம்பெருமானார் இனிதாக உறையுமிடம்
யோசனை போய்ப் பூக்கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்கு வேளூரே.
பாடல் விளக்கம்:
தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறுமலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும் யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
பாடல் எண் : 04
மாகாயம் பெரியதொரு மானுரி தோலுடையாடை
ஏகாயம் இட்டு உகந்த எரியாடி உறையுமிடம்
ஆகாயம் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
பாடல் விளக்கம்:
பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன் தோலை உடை வகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்கு வேளூர்.
பாடல் எண் : 05
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
பாடல் விளக்கம்:
வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளிவடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.
பாடல் எண் : 06
திறங்கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமருமிடம்
மறங்கொண்டு அங்கு இராவணன் தன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாய் என்பான் புள்ளிருக்கு வேளூரே.
பாடல் விளக்கம்:
சைவத்திறம் மேற்கொண்ட அடியவர் மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
பாடல் எண் : 07
அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனலேந்திப்
பித்தரைப் போல் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டு பலகாலம் தவஞ்செய்து
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்கு வேளூரே.
பாடல் விளக்கம்:
யானையை உரித்த தோலால் உடலை மூடிக் கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப்பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சம்பாதியால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
பாடல் எண் : 08
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடிவாணாள் அது உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
பாடல் விளக்கம்:
பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ்நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
பாடல் எண் : 09
வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன அகன் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்கு வேளூரே.
பாடல் விளக்கம்:
தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக் கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவை வடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
பாடல் எண் : 10
கடுத்து வரும் கங்கைதனைக் கமழ்சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையுமிடம்
விடைத்து வரும் இலங்கைக்கோன் மலங்கச்சென்று இராமற்காப்
புடைத்து அவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
பாடல் விளக்கம்:
சினந்து வேகமாக வருகின்ற கங்கையைத்தனது மணம் கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப் புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்கு வேளூர்.
பாடல் எண் : 11
செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக்கு அடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரை
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே.
பாடல் விளக்கம்:
குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபடவல்லவர்கட்கு மறு பிறப்பு இல்லை.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
Hai
பதிலளிநீக்கு