செவ்வாய், 26 மே, 2015

வடதிருமுல்லைவாயில் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர் : கொடியிடை நாயகி அம்மன்

திருமுறை : ஏழாம் திருமுறை 69 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை திக்விஜயம் மேற் கொண்ட போது, எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல் கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். (இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள் பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும்). 

போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து இரத்தம் வருவதைக் கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். 

இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். (இந்த தல வரலாற்றை சுந்தரர் தனது பதிகத்தில் 10வது பாடலில் குறிப்பிட்டுள்ளார். பாடல் கீழே தரப்பட்டுள்ளது.) இறைவன் அவன் முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் அசுரர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றி கொண்டான். 

தனக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். அசுரர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அதுவே இந்த மாசிலாமனி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை இன்றும் காணலாம்.

தெற்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி நம்மை வரவேற்கிறார். அவருக்குப் பின்னால் மதில் மீது தல வரலாற்றுச் சிற்பம் - யானை மீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம் - தன் கழுத்தை அரிவது - காட்சி தருவது ஆகியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. 

தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் மற்றும் இறைவி சந்நிதிகள் இரண்டும் கிழக்கு நோக்கி இருப்பதும், இறைவி கொடியிடை நாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலப்புறம் இருப்பதும் இக்கோவிலின் ஒரு சிறப்பம்சமாகும். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. ஆலய தீர்த்தமான கல்யாண தீர்த்தம் கோவிலுக்கு வெளியே தெற்கு கோபுரத்திறகு வலதுபுறம் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.

தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நாலவர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. 

கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவார பாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் பிற்காலப் பிரதிஷ்டையான ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது. இத்தலத்து இறைவி கொடியிடை அம்மனை பௌர்ணமி நாளில் மாலை வேளையில் வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

திருப்புகழ் தலம்: இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன.

கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

சுந்தரர், இத்தலத்துப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் "அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே " என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பாடுந்திறம் நெஞ்சை நெகிழ வைக்கவல்லன.

சென்னை - பொன்னேரி பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்து கொடியிடை அம்மை - ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.

சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. 


பாடல் எண் : 01
திருவும் மெய்ப் பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ் திரு முல்லை வாயிலாய் வாயினால் உன்னைப் 
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, வீட்டின்பமும், அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும், இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக நினையாது, அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும், அவர்கள் என்னைப் பற்ற வரின், பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரிவேன்; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை, நீ நீக்கியருளாய்.


பாடல் எண் : 02
கூடிய இலயம் சதி பிழையாமை கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்குற்றாய் என்று 
தேடிய வானோர் சேர் திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் 
பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
உன் தேவியாகிய கொடிபோலும் இடையினையுடைய உமையவள் கண்டு மகிழுமாறு, பல திறங்களும் கூடிய கூத்தினை, தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே, அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே, கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே, "இறைவனே நீ எங்குள்ளாய்?" என்று தேடிய தேவர்கள், நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன், மேலும் அங்ஙனமே பாடுதற்கு, யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய்.


பாடல் எண் : 03
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய்
செண்பகச் சோலை சூழ் திரு முல்லை வாயிலாய் தேவர் தம் அரசே 
தண் பொழில் ஒற்றி மாநகருடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட 
பண்ப நின் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே, மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே, சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே, சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்ட செப்பமுடையவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உன் அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 04
பொன் நலம் கழனிப் புதுவிரை மருவிப் பொறி வரிவண்டு இசை பாட
அம் நலம் கமலத் தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் 
செந்நெலங் கழனி சூழ் திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் 
பன்னலந் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
பொன்போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில், புள்ளிகளையும், கீற்றுக்களையும் உடைய வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட, அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின்மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு, அந்த இசை நின்ற பொழுது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழை விருப்பத்தோடு, பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய்.


பாடல் எண் : 05
சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் 
தந்தமும் தரளக் குவைகளும் பவளக் கொடிகளும் சுமந்து கொண்டு உந்தி 
வந்திழி பாலி வடகரை முல்லை வாயிலாய் மாசிலா மணியே.
பந்தனை கெடுத்து என் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
சந்தன மரத்தின் வேரையும், கரிய அகிலினது கட்டையினையும், மென்மையான மயில் இறகினையும், யானையின் தந்தத்தையும், முத்துக் குவியல்களையும், பவளக் கொடிகளையும் மேல் இட்டுக்கொண்டும், பக்கங்களில் தள்ளியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, மாசில்லாத மணி போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 06
மற்று நான் பெற்றதார் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசிக் 
குற்றமே செயினும் குணம் எனக் கொள்ளும் கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் அடியேன் 
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
மாற்றாது வழங்கும் வள்ளலே, வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே, திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, யான் பொய்யையே பேசி, குற்றங்களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின், யான் பெற்ற பேறு, மற்று யார் பெற வல்லார்! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன்; அது, தவறுடைத்தே. ஆயினும், அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின், அடியேன் வேறொரு துணை இல்லேன்; ஆதலின், அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய்.


பாடல் எண் : 07
மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயில் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் அருநடம் ஆடல் அறாத 
திணிபொழில் தழுவு திரு முல்லை வாயில் செல்வனே எல்லியும் பகலும் 
பணியது செய்வேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
அழகு பொருந்திய சிவந்த வாயினையும், வெள்ளிய பற்களையும், கரிய நீண்ட கூந்தலையும், சிறந்த மயில் போலும் சாயலையும், அணிகலங்கள் பொருந்திய கொங்கைகளையும், அழகிய கயல் போலும் கண்களையுமுடைய ஆடல் மகளிர் அரிய நடனங்களை ஆடுதல் நீங்காததும், செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 08
நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட 
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட 
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
யாவராலும் விரும்பத் தக்கவனே, அன்று திருவெண்ணெய்நல்லூரில் வந்து, நாய் போன்றவனாகிய என்னை ஆட்கொண்ட சம்புவே, வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற, பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனே, உன்னைத் தேடித் திரிவேனாகிய யான், செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட, பசிய பொன் போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 09
மட்டுலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி தன்மேல் மதியாதே 
கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த 
சிட்டனே செல்வத் திரு முல்லை வாயில் செல்வனே செழுமறை பகர்ந்த 
பட்டனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல், அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை, அவன் இறக்கும் படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே, செல்வத்தையுடைய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே, சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 10
சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும் 
நல்லவர் பரவும் திரு முல்லை வாயில் நாதனே நரை விடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

பாடல் விளக்கம்‬:
சொல்லுதற்கரிய புகழையுடையவனாகிய, `"தொண்டைமான்" என்னும் அரசன், எல்லையில்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு அவனது யானையை, படர்ந்து கிடந்த முல்லைக் கொடியால் தடுத்து, பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே, எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, வெள்ளை விடையை ஏறுபவனே, பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


பாடல் எண் : 11
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை
திரைதரு புனல்சூழ் திரு முல்லை வாயில் செல்வனை நாவல் ஆரூரன் 
உரைதரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் 
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே.

பாடல் விளக்கம்‬:
நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும், திருமாலும் அச்சங் கொள்ளும்படி, அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய, அலைகளை வீசுகின்ற கடல் நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும், மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள், நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி, தேவர்களுக்கு அரசராகும் நிலையை அடைவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- வடதிருமுல்லைவாயில் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

திங்கள், 25 மே, 2015

தென்திருமுல்லைவாயில் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : முல்லைவன நாதர், யூதிகாபரமேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி

திருமுறை : இரண்டாம் திருமுறை 88 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- தலமரம் முல்லையாதலால் இப்பெயர். திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாசல் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

முதலாம் கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூற, அதன் படி இத்தலத்தற்கு அருகிலுள்ள கடலில் நோய் தீருவதற்காக தன் பரிவாரங்களுடன் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. 

அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளி வளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த மன்னன் ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. மன்னன் தன் தவறுணர்ந்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயல்கையில் இறைவன் ரிஷபாரூடராய்க் காடசி தந்ததாகத் தல வரலாறு கூறுகிறது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.

திருமுல்லைவாசல் ஒரு கடற்கரைத் தலம். உப்பனாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபத்தைக் காணலாம். ஒரு பிராகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்தின் இறைவன் முல்லைவன நாதர் மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மாணிலாமணி ஈஸ்வரர், யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. 


உள் பிராகரத்தில் வரசக்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஷண்முக சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், திருஞானசம்பந்தர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிக அழகாக உள்ளது. ஆலயத்தின் தலவிருட்சம் முல்லை. தீர்த்தம் பிரம்ம, சந்திர தீர்த்தங்கள். பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். 


உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால் இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம். இத்தலத்தில் வாயு திசையிலுள்ள கிணற்றில் கங்கை நித்திய வாசம் செய்கிறாள். அக்னி திசையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சந்திரன் தனக்கிருந்த் நோயைப் போக்கிக் கொண்ட தலம் இதுவாகும்.

சீர்காழியில் இருந்து 14 கி. மி. தொலைவில் வங்கக் கடலோரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.


பாடல் எண் : 01
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன்
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன் எங்கள் அரனூர்
களி மண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் 
தெளி மண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம் பெற்ற கண்டத்தினனும், நடனமாடும் ஒளி பொருந்திய வடிவினனும் பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில் மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தெளிவை வயிறார உண்டு சிறை வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலம் ஆகும்.


பாடல் எண் : 02
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழு முத்து அலைக் கொள் திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன் அருளவல்ல பண்பினனும், அயனைப்படைத்த பரமனும், பாம்பினை உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப் படுவோனுமாகிய அரனது ஊர், உருவத்தால் பெரிய சங்குகளும் சிப்பிகளும் ஓத நீர் மோதுவதைக் கண்டுவெருவித் தெருவில் வந்து செழுமையான முத்துக்களைப்பல இடங்களிலும் ஈனும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமாகும்.


பாடல் எண் : 03
வாராத நாடன் வருவார் தம் வில்லின் உருமெல்கி நாளும் உருகில் 
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் 
பேராத சோதி பிரியாத மார்பின் அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன், உலகிற் பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும். இவ்வுடல் மெலியுமாறு உருகி வழிபடில் ஆராத இன்பம் அருள்பவன். அகலாத அன்புடையவன். அத்தகைய அரன் அருள் செய்ய எழுந்தருளியுள்ள ஊர், நீங்கா ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப் பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 04
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய்
அன்று இன்றொடு என்றும் அறிவு ஆனவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் 
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமிச் 
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கு. புருடதத்துவம் இருபத்தைந்தாவது தத்துவம். இவ்விருபத்தைந்து தத்துவங்கட்கும் வேறாய் நிற்பவன் இறைவன். இதனை அறியாதார் இருபத்தைந்தாவதாய் உள்ள உயிரையே பதி என மயங்குவர். இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர், குன்றுகள் ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும், குலைகளும் கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 05
கொம்பன்ன மின்னின் இடையாள் ஒர் கூறன் விடை நாளும் ஏறு குழகன்
நம்பன் எம் அன்பன் மறைநாவன் வானின் மதியேறு சென்னி அரனூர் 
அம்பன்ன ஒண்கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகார் 
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும் இடையினளும் ஆகிய உமையம்மையை ஓரு கூற்றாகக் கொண்டவன். நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன். நம்மேல் அன்புடையோன். மறையோதும் நாவினன். வானில் செல்லும் மதி பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர், அம்பு போன்ற ஒளி பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர் ஆடும் அரங்குகளும், அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம்பொன்னின் அழகைத்தரும் மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 06
ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளியேறு கொண்ட ஒருவன்
ஆனேறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவேறு பூணும் அரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவித்
தேனேறு மாவின் வளமேறியாடு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய உமையம்மையின் கருநிற ஒளியைப் பெற்றவன். ஆனேற்றின் மிசை ஏறி, அழகு தரும் திருநீற்றை அணிந்தவன். பாம்பினை அணி கலனாகப் பூண்டவன். அவ்வரனது ஊர், மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும், மயிலும் குயிலும் வாழும் சோலைகளையும், தேனைப் பொருந்திய வண்டுகளைக் கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 07
நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடும் மேனி அரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் உளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக்கொள் திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கியருள்பவன். ஆனைந்தாடுபவன். அரவு ஆடும் கையன். அனல் போன்ற மேனியன். அவ் அரனது ஊர், மேகங்கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சையேற்க யார்வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 08
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடிபத்தும் இற்று நெரிய 
உரை வந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன் எங்கள் அரனூர் 
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரை வந்து வந்து செறிதேறலாடு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும், உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனியனாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும் பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள் ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 09
மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரனூர் 
காலாடு நீல மலர் துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலில் 
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
திருமேனிமேல் நீண்டு ஓடிவிளையாடலைப் பொருந்திய முப்புரிநூலை உடையவன். வேதமுதல்வன். பிரமனும் திருமாலும் தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன். அவனது ஊர், காற்றில் அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய், கதிர் மிகுந்த செந்நெல் வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 10
பனைமல்கு திண்கை மதமா உரித்த பரமன்ன நம்பன் அடியே 
நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரியச்
சினைமல்கு புன்னை திகழ் வாசம் நாறு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய மதயானையை உரித்த பரமன். நம்பால் அன்புடையவன். தன் திருவடியை நினையாத சமணர் தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன். அப்பெருமானது ஊர், வனங்களில் தாழை மரங்கள், மகிழ மரங்கள் ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும், அரும்புகளை உடைய புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 11
அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள் செய்த எந்தை மருவார் 
திணி கொண்ட மூன்று புரமெய்த வில்லி திருமுல்லைவாயில் இதன் மேல்
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் 
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே.

பாடல் விளக்கம்‬:
அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள்செய்த எந்தையாவர், பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவர். அப்பெருமான் எழுந்தருளிய திருமுல்லை வாயிலாகிய இத்தலத்தின் மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில் தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப் பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- தென்திருமுல்லைவாயில் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

ஞாயிறு, 24 மே, 2015

திருமயிலாப்பூர் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : கபாலீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : கற்பகவல்லியம்மை

திருமுறை : இரண்டாம் திருமுறை 47 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பூம்பாவைத் திருப்பதிகம்


பாடல் எண் : 01
மட்டிட்ட புன்னை அம்கானல் மடமயிலைக் 
கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு 
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 02
மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் 
கைப் பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் 
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளி நிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன் தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவ முனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 03
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் 
துளக்கில் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் 
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின் போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ.


பாடல் எண் : 04
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக் 
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்
கார் தரு சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றி காணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 05
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் 
கைப் பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் 
தைப்பூசும் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 06
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் 
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமக நாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 07
மலி விழா வீதி மடநல்லார் மாமயிலைக் 
கலி விழாக் கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள்
ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 08
தண்ணார் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
பண்ணார் பதினெண்கணங்கள் தம் அட்டமி நாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 09
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் 
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக் 
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய, மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ?.


பாடல் எண் : 10
உரிஞ்சாய வாழ்க்கை அமண் உடையைப் போர்க்கும் 
இருஞ் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில் 
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான் 
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 11
கானமர் சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
தேன்மர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் 
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் 
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.

பாடல் விளக்கம்‬:
மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன் மீது, தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது நலம் புகழ்ந்து பாடிய இப்பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருமயிலாப்பூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

சனி, 23 மே, 2015

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் திருமயிலாப்பூர்

இறைவர் திருப்பெயர் : கபாலீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : கற்பகாம்பாள்

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1


தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்ட இவ்வாலயம் சென்னை நகரின் மையப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது. கிழக்கில் உள்ள கோபுரமே இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது. ஒரு விசாலமான வெளிப் பிரகாரமும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. 


கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன. 


மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இதைக் கடந்தவுடன் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடது புறம் தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன் இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.

தலப் பெயர் வரலாறு:-  சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும் போது அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும் போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப்படுவார். 


ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.

மேற்கு வேளிப் பிரகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வடக்கு வேளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவன நாதர் சந்நிதியும் உள்ளது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். 


புன்னைவன நாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. வடக்கு வேளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார். தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் 6 திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் உள்ளது.

தல வரலாறு:- பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும் படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். 


அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டு வர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.

திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். 

அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை" என்று தொடங்கும் பதிகம் பாடினார். 

பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும் படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள்.

இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் அஸ்திக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அறுபது, எண்பதாம் திருமணம் செய்ய ஏற்ற தலம் இது.

பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, இக்கோயிலில் நடக்கும் பன்னிரு திருமுறை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் 8ம் நாளில், 63 நாயன்மார்களும் வீதியுலா செல்கின்றனர். இதே போல் மாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் கடலாட்டு விழாவும் பிரசித்தி பெற்றது. அப்போது சிவன் கடலுக்குச் சென்று தீர்த்த நீராடி வருகிறார். 

சம்பந்தர் தனது பதிகத்தில் 6-வது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும், பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்த படி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரிய வருகிறது. "பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னை மரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசி மகநாளில் பக்தர்கள் கடலில் புனித நீராடிவதைக் கண்டு களிப்போடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ" என்று தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில், சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது. ஆனால், இத்தலம் வந்த சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புக்களை குறிப்பிட்டு 11 பதிகங்கள் பாடினார். 

சம்பந்தர் பாடிய பதிகத்தில் திருமயிலை கோவிலைப் பற்றியும், இங்கு சிறப்பாக நடக்கும் விழாக்களைப் பற்றியும் குறிப்பிட்டு இவைகளை எல்லாம் பார்த்து அனுபவிக்காமல் நீ இறந்து போகலாமா பூம்பாவை என்று தன் பதிகத்தில் பாடுகிறார். இவ்வாறு திருவிழா குறித்து பதிகம் பெற்ற பெருமையுடைய தலம் இது.

இராம பிரான், வழிபட்டு, ஐப்பசி ஓணநாளில், பிரமோற்சவம் நடத்துவித்தார்.

வாயிலார் நாயனார் அவதாரம் செய்தத் திருப்பதி; "துறைக்கொண்ட செம்பவள இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்" என்று பணிவார் சுந்தரமூர்த்தி நாயனார். வாயிலார் சந்நிதி கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வடக்குப் பார்த்த தனி ஆலயமாக உள்ளது.


பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. "கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.

இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது. ("ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" - சம்பந்தர், "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" - திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது.

சென்னை நகரின் மத்தியில் மைலாப்பூரில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருமயிலை புறநகர் ரயில் நிலையம் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''