வியாழன், 21 மே, 2015

திருமணஞ்சேரி திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : அருள்வள்ளல் நாயகர், உத்வாக நாதசுவாமி, கல்யாண சுந்தரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : கோகிலாம்பாள், யாழின் மென்மொழியம்மை

திருமுறை : ஐந்தாம் திருமுறை 87 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

கோகிலாம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர்


பாடல் எண் : 01
பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாள்தொறும் 
சிட்டர் வாழ் திருவார் மணஞ்சேரி எம் 
வட்ட வார்சடையார் வண்ணம் வாழ்த்துமே.

பாடல் விளக்கம்‬:
பட்டமணிந்த நெற்றியினரும், பாயும் புலியின் தோலை உடுத்தவரும், நாள்தொறும் நட்டமாடி நின்று பாடுவோரும், உயர்ந்தவர் வாழ்கின்ற திருவுடைய மணஞ்சேரியில் வட்டமாகிய வார்சடை உடைய எமது பெருமானுமாகிய இறைவர் வண்ணத்தை வாழ்த்துவீராக.


பாடல் எண் : 02
துன்னு வார்குழலாள் உமையாளொடும் 
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை
உன்னுவார் வினையாயின ஓயுமே.

பாடல் விளக்கம்‬:
நெருங்கிய நீண்ட கூந்தலை உடைய உமா தேவியோடு கூடியவரும், பின்னிய நீண்ட சடைமேற் பிறையை வைத்தவரும் ஆகிய நிலைபெற்ற நீண்ட புகழை உடைய திருமணஞ் சேரியில் மருந்தாம் பெருமானை உள்ளத்தே உன்னுவார்களின் வினைகள் ஓயும்.


பாடல் எண் : 03
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார் 
தெற்றினார் புரம் தீ எழச் செற்றவர்
சுற்றினார் மதில் சூழ் மணஞ்சேரியார் 
பற்றினார் அவர் பற்றவர் காண்மினே.

பாடல் விளக்கம்‬:
புற்றிற் பொருந்திய அரவினை ஆட்டும் புனிதரும், எல்லை மீறிய முப்புராதிகளின் கோட்டைகளைத் தீயெழச் சினந்தவரும், சுற்றிலும் நெருங்கிய மதில் சூழ்ந்த மணஞ்சேரி உறைபவருமாகிய இறைவரைப் பற்றினார்க்கு அவர் பற்றாவர் காண்பீராக.


பாடல் எண் : 04
மத்தமும் மதியும் வளர் செஞ்சடை 
முத்தர் முக்கணர் மூசு அரவம் அணி 
சித்தர் தீவணர் சீர் மணஞ்சேரி எம் 
வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே.

பாடல் விளக்கம்‬:
ஊமத்தமலரும், பிறையும் வளருஞ் சிவந்த சடையை உடைய முத்தி நாயகரும், முக்குணங்களை உடையவரும், ஒலிக்கும் அரவம் அணிந்த சித்தரும், தீயின்வண்ணம் உடையவரும், பெருமைமிக்க மணஞ்சேரியில் வித்தாயிருப்பாருமாகிய இறைவர் தம்மை விரும்பியவரைத் தாம் விரும்புபவர் ஆவர்.


பாடல் எண் : 05
துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர் கரந்தார் சடைமேல் அவர் 
அள்ளலார் வயல் சூழ் மணஞ்சேரி எம் 
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே.

பாடல் விளக்கம்‬:
துள்ளும் மான் குட்டியையும், தூய மழு வாளினையும் உடையவரும், சடைமேற் கங்கையை மறைத்தவரும் ஆகிய சேறு நிறைந்த வயல் சூழ்ந்த மணஞ்சேரியில் உறையும் வள்ளலார் கழல்களை வாழ்த்தலே வாழ்வாவது.


பாடல் எண் : 06
நீர் பரந்த நிமிர் புன்சடையின்மேல் 
ஊர் பரந்த உரகம் அணிபவர்
சீர் பரந்த திரு மணஞ்சேரியார்
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே.

பாடல் விளக்கம்‬:
கங்கை நீர் பரவி நிமிர்ந்து விளங்கும் சடையின் மேல் ஊர்ந்து பரவுகின்ற பாம்பினை அணிந்தவராகிய பெருமை பரவிய திருமணஞ்சேரி இறைவர் எழில் பெருகி விளங்கும் சூலப் படையினை உடையவர்.


பாடல் எண் : 07
சுண்ணத்தர் சுடுநீறு உகந்து ஆடலார்
விண்ணத்தம் மதி சூடிய வேதியர்
மண்ணத்தம் முழவுவார் மணஞ்சேரியார்
வண்ணத்தம் முலையாள் உமை வண்ணரே.

பாடல் விளக்கம்‬:
சுண்ணம் பூசியவரும், சுட்ட வெண்ணீற்றினை உகந்து ஆடுபவரும், விண்ணின் மதியைச் சூடிய வேதியரும் ஆகிய மார்ச்சனை பொருந்திய முழவு ஆர்க்கும் மணஞ்சேரி உறையும் இறைவர், நிறம் உடைய முலையாளாகிய உமையின் வண்ணம் உடையவர் ஆவர்.


பாடல் எண் : 08
துன்ன ஆடையர் தூமழு வாளினர்
பின்னும் செஞ்சடை மேற்பிறை வைத்தவர் 
மன்னுவார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் 
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே.

பாடல் விளக்கம்‬:
பின்னிய நூலாடையினரும், தூயமழு வாளினரும், பின்னிய சிவந்த சடையின் மேல்பிறை வைத்தவரும் ஆகிய, நிலை பெற்ற நீண்ட பொழில்கள் சூழும் மணஞ்சேரி உறையும் மன்னனார் கழலே தொழ வாய்ப்பாவது.


பாடல் எண் : 09
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் 
புத்தர் தேர் அமண்கையர் புகழவே
மத்தர் தாமறியார் மணஞ்சேரி எம் 
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
சித்தர்களும், தேவர்களும், திருமாலும், நான்முகனும், புத்தரும், உடையற்றவராய சமண ஒழுக்கத்தினரும் புகழ, உலக மையலிற்பட்டவர் அறியாத மணஞ்சேரி மேவிய எம் தலைவரது அடியார்க்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 10
கடுத்த மேனி அரக்கன் கயிலையை 
எடுத்தவன் நெடு நீள் முடிபத்து இறப் 
படுத்தலும் மணஞ்சேரி அருள் எனக் 
கொடுத்தனன் கொற்றவாளொடு நாமமே.

பாடல் விளக்கம்‬:
ஆற்றல் மிகுந்த இராவணன் திருக்கயிலையை எடுத்த போது அவன் நீண்ட முடிகள் பத்தும் இற்று விழச்செய்தலும், "மணஞ்சேரி இறைவா! அருள்வாயாக" என்று அவன் கூவ அவனுக்கு வெற்றிதரும் வாளையும், நாமத்தையும் கொடுத்தனன் பெருமான்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருமணஞ்சேரி திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக