வியாழன், 7 மே, 2015

பாவநாச திருப்பதிகம்

திருமுறை நான்காம் திருமுறை 15 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்

அப்பர் பிரான் தான் எவ்வாறு சிவபிரானை வழிபட்டார் என்பதை இந்த பதிகத்தின் பாடல்களில் எடுத்துக் கூறி, நம்மையும் அவ்வாறே இறைவனை வழிபடத் தூண்டுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலை பாவனாசமே என்று முடித்து, சிவபிரானை வழிபடுவது, நமது பாவங்களை நாசம் செய்யும் என்று நமக்கு உணர்த்துவதால், பாவநாசத் திருப்பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பதிகம் திருப்புகலூரில் தங்கி தொண்டுகள் புரிந்த சமயத்தில் அருளப்பட்டது.


பாடல் எண் : 01
பற்றற்றார் சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம்பலத்து எம் திகழ்கனியைத் தீண்டற்கு அரிய திருவுருவை
வெற்றியூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே.

பாடல் விளக்கம்:
உலகப்பற்றுகளை விட்டொழித்தாலும் சிவபிரானின் மீது தொடர்ந்து பற்று கொண்டிருக்கும் சான்றோர்கள், சென்று சேரும் பழமையான பதியாகிய புனவாயிலில் உறையும் பழம்பதி நாதரை, பாசூர் தலத்தில் உறையும் பெருமானை, கற்றவர்கள் அறிந்து உண்ணும் கனியாக சிற்றம்பலத்தில் உறைபவரை, திருமாற்பேறு, திருவொற்றியூர், ஊறல், தக்கோலம், விற்கோலம், பாசூர், இலம்பையங்கோட்டூர் ஆகிய பல தலங்களில் தீண்டாத் திருமேனியாக காட்சி அளிப்பவரை, வெற்றியூரில் விரிந்த சுடராக காணப்படுபவரை, ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்களைக் களைந்த தூயோர்களின் தலைவராக விளங்குபவரை, கடலால் சூழப்பட்ட திருவொற்றியூரின் உத்தமனை, அடியேன் உள்ளத்தில் நிலையாக நிறுத்தி வைத்துள்ளேன்.


பாடல் எண் : 02
ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்
கானப்பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.

பாடல் விளக்கம்:
ஆனைக்காவில் அணங்கு வழிபட்ட அண்ணலை, ஆரூரில் நிலைத்து நிற்கும் அம்மானை, கானப்பேரூரில் உறையும் கரும்புக் கட்டி போன்று இனிப்பவனை, கானூரில் சுயம்புவாக முளைத்தவனை, வானவர்களால் புகழப்பட்டு தூய்மையாகவும் வெண்மையாகவும் இருக்கும் வாய்மூர் வாழும் வலம்புரியை, பெருமை மிக்க கயிலை மலையில் வாழும் இளைய யானை போன்றவனை, சூரியனாகவும் சந்திரனாகவும் இருப்பவனை, நான் என்றும் மறக்காமல் இருப்பேன்.


பாடல் எண் : 03
மதியம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயாறமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே.

பாடல் விளக்கம்:
சந்திரனை தலையில் மாலையாக அணிந்து, சூரியன் போன்று மிகுந்த பிரகாசத்துடன் விளங்குபவனை, அறியாமையால் மயங்கிக் கிடக்கும் உயிர்களின் மயக்கத்தைத் தீர்ப்பவனை, தொன்மை வாய்ந்த அதிகை நகரத்தின் அரசனை, திருவையாற்றில் அமர்ந்து இருக்கும் இறைவனை, பெரும் புகழினை உடையவனை, ஊழ்வினைக்கு ஏற்றவாறு உயிர்களை உடல்களுடன் பொருத்துவதால் ஊழ்வினையாக கருதப் படுவானை, வானோர்கள் வேண்டித் தேடும் சோதியை, அனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையானை, ஞானக் கொழுந்தினை, அடியேன் நினைந்த போது எனது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது.


பாடல் எண் : 04
புறம்பயத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை
அறஞ் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே.

பாடல் விளக்கம்:
புறம்பயத்தில் மிகவும் அரிதாக காணப்படும் முத்து போன்று இருப்பவனும், புகலூர் தலத்தில் பொன் போன்று ஒளி வீசுபவனாக இருப்பவனும், சிராப்பள்ளி எனும் நகரில் உறந்தை என்று அழைக்கப்படும் பகுதியில் உலகுக்கெல்லாம் விளக்காகத் திகழும் ஞாயிறு போன்றவனும், அருவிகள் சூழ்ந்த கழுக்குன்றத்தில் அன்புடன் அவனை வழிபடுவோர்கள் தங்களது கண்ணாக கருதி பற்றுக்கோடாகக் கொள்ளப்படுபவனும், அறங்கள் நிறைந்த அதிகை வீரட்டத்தில் ஆண் சிங்கம் போன்று வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை அடியேன் சென்றடைந்தேன்.


பாடல் எண் : 05
கோலக்காவில் குருமணியைக் குடமூக்கு உறையும் விடமுணியை
ஆலங்காட்டில் அந்தேனை அமரர் சென்னியாய் மலரைப்
பாலில் திகழும் பைங்கனியைப் பராய்த்துறையெம் பசும்பொன்னைச்
சூலத்தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.

பாடல் விளக்கம்:
கோலக்காவில் உள்ள நல்ல நிறமுடைய மாணிக்கம், குடமூக்கில் உறையும் விடமுண்டபெருமான், ஆலங்காட்டில் உறையும் அழகிய தேன், தேவர்கள் தலைகளுக்குச் சூட்டப்படும் அழகிய மலர், பால் போல் இனிக்கும் புதுமை மாறாத பழம், பராய்த்துறையில் உள்ள பசிய பொன், சூலம் ஏந்தியவன், ஒப்பற்றவன் ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பி வணங்கினேன்.


பாடல் எண் : 06
மருகலுறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையைக்
கருகாவூரில் கற்பகத்தைக் காண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூரெம் பிறப்பிலியைப் பேணுவார்கள் பிரிவரிய
திருவாஞ்சியத்தெம் செல்வனைச் சிந்தையுள்ளே வைத்தேனே.

பாடல் விளக்கம்:
மருகலில் தங்கும் மாணிக்கம், வலஞ்சுழியில் உள்ள தமிழ்ப்பாமாலை, கருகாவூரில் உள்ள கற்பகம், காண்பதற்கு எளிதில் இயலாத கதிரவன் ஒளி, பெருவேளூரில் உள்ள பிறவாயாக்கைப் பெரியோன், விரும்பித் தொழுபவர்கள் பின் பிரிந்து செல்ல மனம் கொள்ளாதவகையில் உள்ள திருவாஞ்சியத்தில் உறையும் எம் செல்வன் ஆகிய பெருமானை அடியேன் மனத்தில் நிலையாக இருத்தினேன்.


பாடல் எண் : 07
எழிலார் இராசசிங்கத்தை இராமேச்சுரத்தெம் எழிலேற்றைக்
குழலார் கோதை வரை மார்பில் குற்றாலத்தெம் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே.

பாடல் விளக்கம்:
அழகு மிக்க அரச சிங்கம், இராமேச்சுரத்தில் உறையும் அழகிய காளை, குழல்வாய் மொழியம்மையைத் தன் மலை போன்ற மார்பில் கொண்ட குற்றாலத்தில் உறையும் எங்கள் கூத்தன். நிழல் மிகுந்த சோலைகளையுடைய நெடுங்களத்தில் உறையும் நித்தியகலியாணன், தீ நிறத்தலைவன் ஆகிய பெருமானை அடியேன் அன்பினால் அடியேனோடு இணைத்து வைத்துக்கொண்டேன்.


பாடல் எண் : 08
மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட்டுறையும் மணாளனை
ஆலைக் கரும்பின் இன்சாற்றை அண்ணாமலையெம் அண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய சுடரில் திகழும் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி இட்டேனே.

பாடல் விளக்கம்:
மாலை நேரத்தில் தோன்றும் வளர்மதி போன்று உயிர்களுக்கு இன்பம் அளிக்கும் இறைவனை, திருமறைக்காடு தலத்தில் உறையும் மணாளனை, ஆலையில் பிழியப்படும் கரும்பின் சாறு போன்று இனிப்பவனை, அண்ணாமலையில் உள்ள எமது தலைவனை, சோலைகள் நிறைந்த துருத்தி நகரில் உறையும் சூரியனைப் போன்று ஒளி வீசும் அசைவற்ற சுடராக விளங்கும் பேராற்றல் உடையவனை, மேலுலகத்தில் வாழும் வானோர்கள் தலைவனை, அவன் மீது கொண்ட விருப்பினால் அவனை விழுங்கி எனது மனதினில் இருத்தியுள்ளேன்.


பாடல் எண் : 09
சோற்றுத் துறையெம் சோதியைத் துருத்தி மேய தூமணியை
ஆற்றில் பழனத்தம்மானை ஆலவாயெம் அருமணியை 
நீற்றில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்தெம் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.

பாடல் விளக்கம்:
சோற்றுத்துறையில் உறையும் ஞானஒளி, துருத்தியில் விரும்பி உறையும் தூயமணி, ஆற்றின்வளம் மிக்க திருப்பழனத் தலைவன். ஆலவாயிலுள்ள சிந்தாமணி, திருநீற்றால் விளங்கும் திண்ணிய தோள்களை உடைய, நெய்த்தானத்தில் உறையும் எம் நிலவொளி, பிறவிக்கடலை அழிக்கும் ஆற்றல் மிக்க காளை ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பித் தொழுதேன்.


பாடல் எண் : 10
புத்தூர் உறையும் புனிதனைப் பூவணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன்று எரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தேன் எந்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.

பாடல் விளக்கம்:
திருப்புத்தூரில் உறையும் புனிதனை, பூவணத்தில் இருக்கும் போரிடும் காளை போன்றவனை, அனைத்து உயிர்களுக்கும் உயிராக இருக்கும் மிழலைத் தலத்து இறைவனை, வேள்விக்குடி வேதியனை, வைதீக நெறியிலிருந்து வழுவிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்தவனை, பொதிகையில் உறையும் புராணனை, பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருத்துவனாக மாத்தூர் தலத்தில் உறைபவனை, அடியேன் எனது மனதினில் நிலையாக நிறுத்தியுள்ளேன்.


பாடல் எண் : 11
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளேறு ஊர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிச்சேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவநாசமே.

பாடல் விளக்கம்:
அனைத்துப் பொருட்களுக்கும் முன்னமே, தானாகவே தோன்றியவனை, வெண்மை நிறம் கொண்ட மூத்த காளையினை வாகனமாகக் கொண்டவனை, மாலை நேரத்து செம்மை படர்ந்த வானத்தின் வண்ணத்தானை, அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கியவனை, தங்களது சிந்தையில் இருத்தித் தங்களது எண்ணங்களால் அவனை நீராட்டி, அவனது புகழைக் குறிக்கும் பாடல்கள் பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து, இறைவனே எங்கள் தலைவனே என்று வழிபடும் அடியார்களின் தீவினைகள் முற்றிலும் அழிந்துவிடும்.

தினமும் ஓதவேண்டிய பதிகங்களில் ஒன்றாக பெரியோர்களால் கருதப்படும் பதிகம். இந்த பதிகத்தில் 45 வேறுவேறு தலங்கள் குறிப்பிடப்படுகின்றன.

நன்றி: திரு என். வெங்கடேஸ்வரன் மற்றும் திரு ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

3 கருத்துகள்:

  1. அய்யா..திருவடி பணிகின்றேன்..தங்கள் இடுகைகளை..காண..கொடுத்து வைத்திருக்கிறேன்..மேலான நன்றிகள்..எனது இறைவனுக்கும் சேர்த்து....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயனே...!
      "சிவாய நம ஓம்...! திருச்சிற்றம்பலம்''

      நீக்கு
  2. அய்யா மிக்க நன்றி,அருமையான பதிவுகள்.
    எங்கள் பாக்கியம் !

    பதிலளிநீக்கு