வியாழன், 14 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 28

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஏழாம் திருமுறை 37 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள்


சங்கிலி நாச்சியாரை மணந்த சுந்தரர், திருவொற்றியூரை நீங்கியதால் இழந்த கண்களில் காஞ்சியில் ஒரு கண்ணைப் பெற்று, திருத்துருத்தியில் பிணி நீங்கப் பெற்று. பல தலங்களையும் வணங்கிக் கொண்டு திருவாரூர் அடைந்து, முதலில் பரவையுண்மண்டளிப் பெருமானை, ''தூவாயா' என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித்தொழுதார். பின்னர், திருமூலட்டானரை வழிபட அர்த்தயாம வழிபாட்டிற்குச் செல்லும் பொழுது அன்பர்கள் எதிரணையக் கண்டு அயலார் வினவுவதுபோல. ''கைக்கிளை'' என்னும் அகப்பொருள் துறையமையப் பாடியருளியது இத் திருப்பதிகம். 

இத்திருப்பதிகம், திருவாரூர்ப் பெருமானிடத்துக் காதல் கொண்டாள் ஒருத்தி, அக்காதல் மிகுதியால் பறவைகளையும், வண்டுகளையும் நோக்கிச் சில கூறுங் கூற்றாக அருளிச்செய்தது. சுவாமிகள், திருவாரூர்ப் பெருமான் தமக்கு அருளாமையால் வருந்திய வருத்தத்தினை அடியவரிடம் தெரிவித்துக் கொள்ளுதல் குறிப்பினால் தோன்ற, இவ்வாறு பிறிதோராற்றாற் புலப்படுத்தியருளினார்.

பாடல் எண் : 01
குருகு பாய கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு
அருகு பாயும் வயல் அந்தண் ஆரூரரைப்
பருகுமாறும் பணிந்து ஏத்துமாறும் நினைந்து
உருகும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே.

பாடல் விளக்கம்‬:
குருகுகளே, நீங்கள் பறந்து உலாவுவதனால் செழுமையான கரும்புகள் நெரிந்து பெருகிய சாறு, அருகாகச் சென்று பாய்கின்ற வயல்களையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை, யான் உள்ளத்தால் திளைக்கின்றவாறும், திசைநோக்கி வணங்கித் துதிக்கின்றவாறும், நினைந்து நெஞ்சு உருகுகின்றவாறும் ஆகிய இவைகளை என் பொருட்டு அவர்க்குத் தெரிவிக்க வல்லீர்களோ?.


பாடல் எண் : 02
பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்
அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை
மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும்
உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே.

பாடல் விளக்கம்‬:
பறக்கும் இயல்புடைய எங்கள் கிளிகளே, பாடும் இயல்புடைய எங்கள் நாகணவாய்ப் புட்களே, அறத்திற்குக் கண் என்று சொல்லத் தக்க தலைவராகிய திருவாரூர் இறைவரை, யான் ஒரு ஞான்றும் மறக்க இயலாமையையும், அது காரணமாக எனது கைவளைகள் நில்லாது கழன்று வீழ்தலையும், கண்கள் உறங்குதல் இல்லாமையையும், என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ?.


பாடல் எண் : 03
சூழும் ஓடிச் சுழன்று உழலும் வெண் நாரைகாள்
ஆளும் அம் பொற்கழல் அடிகள் ஆரூரர்க்கு
வாழுமாறும் வளை கழலுமாறும் எனக்கு
ஊழுமாறும் இவை உணர்த்த வல்லீர்களே.

பாடல் விளக்கம்‬:
சுற்றிலும் ஓடிச் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே, அடியவர்களை ஆளுகின்ற அழகிய பொன் போலும் திருவடிகளை யுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, யான் இவ் வுடம்பின் நீங்காது வாழுமாறும், என்வளைகள் கழலுமாறும், மாறாத முறையும் என்னிடத்து மாறி நிகழுமாறும் ஆகிய இவைகளை என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?.


பாடல் எண் : 04
சக்கிரவாளத்து இளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு
வக்கிரம் இல்லாமையும் வளைகள் நில்லாமையும்
உக்கிரம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே.

பாடல் விளக்கம்‬:
"சக்கிரவாகம்" என்னும் இனத்து, இளைய பேடைகளே, சேவல்களே, முறையல்லாதவற்றைச் செய்கின்ற தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, யான் மனம் மாறுபடாமையையும், எனது வளைகள் நில்லாது கழலுதலையும், அவர் மீது புலவி தோன்றாமையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?.


பாடல் எண் : 05
இலைகொள் சோலைத்தலை இருக்கும் வெண் நாரைகாள்
அலைகொள் சூலப்படை அடிகள் ஆரூரர்க்கு
கலைகள் சோர்கின்றதும் கனவளை கழன்றதும்
முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே.

பாடல் விளக்கம்‬:
இலைகளைக் கொண்ட சோலையிடத்து இருக்கின்ற வெள்ளிய நாரைகளே, அழித்தல் தொழிலைக் கொண்ட சூலப் படையையுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, எனது உடை நெகிழ்கின்றதையும், உயர்ந்த வளைகள் கழன்றொழிந்ததையும், கொங்கைகள் பசலை அடைந்ததையும் என்பொருட்டுச் சொல்ல வல்லீர்களோ?.


பாடல் எண் : 06
வண்டுகாள் கொண்டல்காள் வார் மணல் குருகுகாள்
அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரைக்
கண்டவாறும் காமத்தீக் கனன்று எரிந்து மெய்
உண்டவாறும் இவை உணர்த்த வல்லீர்களே.

பாடல் விளக்கம்‬:
வண்டுகளே, மேகங்களே, நுண்ணிய மணல் மேல் இருக்கின்ற குருகுகளே, வானத்தில் வாழ்வோராகிய தேவர்கள் வணங்குகின்ற தலைவராகிய திருவாரூர் இறைவரை ஒரு நாள் யான் கண்டவாறும், அன்றுமுதல் காமத் தீ, கனன்று எரிந்து என் உடம்பை உண்டு விட்ட வாறும் ஆகிய இவைகளை என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ?.


பாடல் எண் : 07
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள்
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்குப்
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன்
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே.

பாடல் விளக்கம்‬:
தேனினது இன்பத்தை நுகர்ந்த தேன்களே, வண்டுகளே, மேகங்களே, பசுவினது பயனாகிய பால் முதலியவற்றை உவந்து கொண்ட எம் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, பாலாகிய நற்பொருளைக் கொண்ட எனது பருத்த கொங்கைகள் பசப் பெய்தி, பொன்போலும் பசலை என் மேனியினது அழகையெல்லாம் கொள்ளை கொண்டமையை. என் பொருட்டுத் தெரிவிக்கவும் வல்லீர்களோ?.


பாடல் எண் : 08
சுற்று முற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள்
அற்றம் முற்றப் பகர்ந்து அடிகள் ஆரூரர்க்குப்
பற்று மற்று இன்மையும் பாடு மற்று இன்மையும்
உற்றும் மற்று இன்மையும் மொழிய வல்லீர்களே.

பாடல் விளக்கம்‬:
சுற்றியுள்ள இடம் முழுவதும் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே, யாவர்க்கும் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, எனது துன்பத்தை முடியச் சொல்லி, எனக்கு வேறு பற்றுக் கோடு இன்மையையும், யான் பலராலும் அலர் தூற்றப்படுதலையும், எனக்கு உறவாவார் வேறு இன்மையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?.


பாடல் எண் : 09
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று
அரவம் ஆடும் பொழில் அந்தண் ஆரூரரைப்
பரவி நாடும் மதும் பாடி நாடும் மதும்
உருகி நாடும் மதும் உணர்த்த வல்லீர்களே.

பாடல் விளக்கம்‬:
குரா மரங்கள் தமது மலர் மணத்தை வீச, குயில்களும் வண்டுக் கூட்டமும் பாட, பாம்புகள் படமெடுத்து நின்று ஆடுகின்ற சோலைகளையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை யான் தொழுது தேடுகின்ற வகையையும், துதித்துத் தேடுகின்ற வகையையும், நெஞ்சுருகித் தேடுகின்ற வகையையும், என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ?.


பாடல் எண் : 10
கூடும் அன்னப் பெடைகாள் குயில் வண்டுகாள்
ஆடும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரரைப்
பாடுமாறும் பணிந்து ஏத்துமாறும் கூடி
ஊடுமாறும் இவை உணர்த்த வல்லீர்களே.

பாடல் விளக்கம்‬:
நும் சேவலொடு கூடுகின்ற அன்னப் பெடைகளே, குயில்களே, வண்டுகளே, நடனம் ஆடுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய திருவாரூர் இறைவரை அடையப் பெற்ற பின்பு யான் அவரைப் பாடும் முறையையும், பணிந்து புகழும் முறையையும், அவரொடு கூடுதலும் ஊடுதலும் செய்யும் முறையையும் இவை என்று அவருக்கு என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?.


பாடல் எண் : 11
நித்தம் ஆக(ந்) நினைந்து உள்ளம் ஏத்தித் தொழும்
அத்தன் அம் பொன்கழல் அடிகள் ஆரூரரைச்
சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடி அப்பன் மெய்ப்
பத்தன் ஊரன் சொன்ன பாடுமின் பத்தரே.

பாடல் விளக்கம்‬:
அடியவராய் உள்ளவர்களே. மெய்யுணர்ந்தோர் எல்லாம் உள்ளத்தால் நிலையாக நினைந்து, வாயால் துதித்து, கையால் தொழுகின்ற தந்தையாரும், அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய தலைவரும் ஆகிய திருவாரூர் இறைவரை, அவரையே எப்பொழுதும் சித்தத்தில் வைத்ததனால் வந்த புகழையுடையவனும், சிங்கடிக்குத் தந்தையும், உண்மையான திருத்தொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடுமின்.

நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக