திங்கள், 11 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 17

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஆறாம் திருமுறை 24 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
கைம்மான மதகளிற்றின் உரிவை யான்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
அம்மான்காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண்
அனல் ஆடிகாண் அயில்வாய்ச் சூலத்தான் காண்
எம்மான்காண் ஏழ் உலகும் ஆயினான் காண்
எரிசுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் 
செம்மானத்து ஒளி அன்ன மேனியான் காண்
திருவாரூரான் காண் என் சிந்தையானே.

பாடல் விளக்கம்:
துதிக்கையையும், பெருமையையும் மதத்தையும் உடைய யானைத் தோலைப் போர்த்தியவனாய் நீலகண்டனாய், கண் பொருந்திய நெற்றியை உடையவனாய், எல்லாருக்கும் தலைவனாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பு ஒன்றினை ஆட்டியவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய்க் கூரிய சூலத்தை ஏந்தியவனாய், எங்களுக்குத் தலைவனாய், ஏழுலகும் பரந்தவனாய், எரிகின்ற விளக்குப் போல்பவனாய், விளங்கும் மழுப்படையை ஏந்தியவனாய்ச் செந்நிற வானம் போன்ற மேனியனாய்த் திருவாரூரில் உறைபவனாய், என் மனக் கண்ணிற்குச் சிவபெருமான் காட்சி வழங்குகின்றான்.


பாடல் எண் : 02
ஊனேறு படுதலையில் உண்டி யான்காண்
ஓங்காரன் காண் ஊழி முதலானான் காண்
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறான் காண்
அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண்
மானேறு கரதலத்து எம் மணிகண்டன் காண் 
மாதவன் காண் மாதவத்தின் விளைவு ஆனான் காண்
தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணியான் காண் 
திருவாரூரான் காண் என் சிந்தையானே.

பாடல் விளக்கம்:
புலால் மணம் தங்கிய மண்டையோட்டில் உணவைப் பெற்று உண்பவனாய், ஓங்கார வடிவினனாய், ஊழிகளுக்குத் தலைவனாய்க் காளையை இவர்பவனாய், திருவையாற்றில் உறைபவனாய், எல்லா உலகங்களும் பரவினவனாய், அண்டங்களுக்கு அப்பாலும் பரவியவனாய், கையில் மானை ஏந்திய நீலகண்டனாய்ப் பெருந்தவத்தினனாய்த் திருவாரூர்ப் பெருமான் என் மனக் கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான்.


பாடல் எண் : 03
ஏவணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண்
இறையவன் காண் மறையவன் காண் ஈசன் தான் காண்
தூவணத்த சுடர்ச் சூலப்படையினான் காண்
சுடர்மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் தான் காண்
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண்
அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண்
தீவணத்த திரு உருவின் கரி உருவன் காண்
திருவாரூரான் காண் என் சிந்தையானே.

பாடல் விளக்கம்:
திருவாரூரில் உள்ள பெருமான் அம்பைச் செலுத்தும் வில்லால் முப்புரத்தையும் அழித்தவன். அவன் இறைவனாய், மறை ஓதுபவனாய், நிர்விக்கினனாய்ப் பாவத்தை அழிக்கும் தூய ஒளியுடைய சூலப்படையினனாய், சூரியன் சந்திரன் அக்கினி என்பவரைத் தன் மூன்று கண்களாக உடையவனாய், ஏற்ற முறையால் என்னை அடிமை கொண்டவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய், அடியார்க்கு அமுதமாயினவன். தீப்போன்ற தன்னுடைய திருவுருவில் கழுத்தில் விடத்தாலாய கருமையை உடையவனாவான். அவன் என் சிந்தையான்.


பாடல் எண் : 04
கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றாலன் காண்
கொடுமழுவன் காண் கொல்லைவெள் ஏற்றான் காண்
எங்கள்பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண்
ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண்
பொங்குமா கருங்கடல் நஞ்சு உண்டான் தான் காண்
பொன் தூண் காண் செம்பவளத்திரள் போல்வான் காண்
செங்கண் வாளரா மதியோடு உடன் வைத்தான் காண் 
திருவாரூரான் காண் என் சிந்தையானே.

பாடல் விளக்கம்:
திருவாரூரில் உள்ள பெருமான் தேன் ஒழுகும் மலராலான முடி மாலையைச் சூடி குற்றாலத்தும் உறைபவன். கொடிய மழுப்படையும் வெண்ணிறக் காளை வாகனமும் உடையவன். எங்கள் துயரைப் போக்கும் தலைவன். ஏழ் கடல்களும் ஏழு மலைகளும் ஆகியவன். அலைகள் உயர்ந்த பெரும்பரப்புடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன். பொன்னால் ஆகிய தூணையும் பவளத் திரளையும் நிகர்ப்பவன். பிறையோடு சிவந்த கண்களை உடைய ஒளி வீசும் பாம்பினையும் உடன் வைத்தவன். அவன் என் சிந்தையான்.


பாடல் எண் : 05
காரேறு நெடுங்குடுமிக் கயிலாயன் காண்
கறைக்கண்டன் காண் கண்ணா நெற்றியான் காண்
போரேறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான் காண்
புண்ணியன் காண் எண்ணரும்பல் குணத்தினான் காண்
நீரேறு சுடர்ச் சூலப்படையினான் காண்
நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண்
சீரேறு திருமால் ஓர்பாகத்தான் காண் 
திருவாரூரான் காண் என் சிந்தையானே.

பாடல் விளக்கம்:
திருவாரூர்ப் பெருமான் மேகங்கள் தவழும் பெரிய உச்சியை உடைய கயிலாய மலையிலும் இருப்பவன். நீல கண்டன். நெற்றிக் கண்ணன். காளை எழுதிய நீண்ட கொடியை மேல் உயர்த்தியவன். புண்ணியன், குணபூரணன். நீர் சுவறுதலுக்குக் காரணமான தீப்போன்ற அழிக்கும் சூலப்படையவன். மாசற்றவன். தன் நிகர் இல்லாதவன். சிறப்பு மிக்க திருமாலைத் தன் உடம்பின் ஒரு பாகமாக உடையவன். அவன் என் சிந்தையான்.


பாடல் எண் : 06
பிறை அரவக் குறுங்கண்ணிச் சடையினான் காண்
பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண்
கறை உருவ மணிமிடற்று வெண் நீற்றான் காண்
கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண்
இறை உருவக் கனவளையாள் இடப்பாகன் காண் 
இருநிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண்
சிறை உருவக் களிவண்டார் செம்மையான் காண் 
திருவாரூரான் காண் என் சிந்தையானே.

பாடல் விளக்கம்:
திருவாரூர்ப் பெருமான் பிறையையும் பாம்பாகிய முடிமாலையையும் சடையில் உடையவன். பிறப்பற்றவன். ஆண், பெண் என்ற இருபகுப்பினை உடைய உருவத்தன். நீலகண்டன். வெண்ணீற்றன். தன் திருவடிகளை வழிபடுபவர்களுடைய பிறவிப் பிணியைப் போக்கும் காபாலக் கூத்தாடுபவன். கைகளில் பெரிய வளையல்களை அணிந்த பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவன். பெரிய நிலமாகவும் அதனைத் தாங்கிப் பாதுகாப்பவனுமாக உள்ளவன். சிறகுகளை உடைய அழகிய களிப்புடைய வண்டுகள் பொருந்திய செம்மைப் பகுதியை உடையவன். அவன் என் சிந்தையுளான்.


பாடல் எண் : 07
தலை உருவச் சிரமாலை சூடினான் காண் 
தமர் உலகம் தலை கலனாப் பலி கொள்வான் காண் 
அலையுருவச் சுடராழி ஆக்கினான் காண் 
அவ்வாழி நெடுமாலுக்கு அருளினான் காண்
கொலை உருவக் கூற்று உதைத்த கொள்கையான் காண்
கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண்
சிலை உருவச் சரம் துரந்த திறத்தினான் காண் 
திருவாரூரான் காண் என் சிந்தையானே.

பாடல் விளக்கம்:
திருவாரூர்ப் பெருமான் தலையில் பொருந்துமாறு தலை மாலையைச் சூடியவன். மக்களும் தேவரும் உள்ள உலகின் மண்டையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை வாங்குபவன். பகைவர்களைத் துன்புறுத்தும் அஞ்சத்தக்க ஒளியை உடைய சக்கரத்தைப் படைத்தவன். சலந்தரனை அழித்த பிறகு அச்சக்கரத்தைத் திருமாலுக்கு வழங்கியவன். கொலைத் தொழிலைச் செய்யும் அஞ்சத்தக்க கூற்றுவனை உதைத்தவன். ஐம்பூதங்களும் ஆகியவன். வில்லிலிருந்து புறப்படும் அம்பினைச் செலுத்திய செயலை உடையவன். அவன் என் சிந்தையானே.


பாடல் எண் : 08
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் 
அடல் மழுவாள் தான் ஒன்று  பியன் மேலேந்து
கையன் காண் கடல் பூதப் படையினான் காண் 
கண்ணெரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண்
வெய்யன் காண் தண்புனல் சூழ் செஞ்சடையான் காண்
வெண் நீற்றான் காண் விசயற்கு அருள் செய்தான் காண் 
செய்யன் காண் கரியன் காண் வெளியோன் தான் காண்
திருவாரூரான் காண் என் சிந்தையானே.

பாடல் விளக்கம்:
திருவாரூர்ப் பெருமான் தலைவனாய், என்றும் இளையவனாய், எல்லோருக்கும் ஆதியாய், மழுப்படையைத் தோளில் சுமந்த கையனாய்க் கடல் போன்ற பூதப்படையனாய்க் கண் எரியால் மன்மதன் உடலை எரித்தவனாய், வெப்பம் உடையவனாய்க் கங்கை சூழ்ந்த செஞ்சடையனாய், வெண்ணீறு அணிந்தவனாய், அருச்சுனனுக்கு அருள் செய்தவனாய், வெண்மை, செம்மை, கருமை என்ற எல்லா நிறங்களையும் உடையவனாய் என் சிந்தையில் உள்ளான்.


பாடல் எண் : 09
மலை வளர்த்த மடமங்கை பாகத்தான் காண்
மயானத்தான் காண் மதியம் சூடினான் காண்
இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான் காண்
இறையவன் காண் எறிதிரை நீர்நஞ்சு உண்டான் காண்
கொலை வளர்த்த மூவிலைய சூலத்தான் காண்
கொடுங்குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண் 
சிலை வளர்த்த சரந்துரந்த திறத்தினான் காண் 
திருவாரூரான் காண் என் சிந்தையானே.

பாடல் விளக்கம்:
திருவாரூர்ப் பெருமான் பார்வதி பாகனாய்ச் சுடுகாட்டில் இருப்பவனாய்ப் பிறை சூடியவனாய், இலைகளிடையே வளர்ந்த கொன்றை மலர் மாலையைச் சூடியவனாய், எல்லோருக்கும் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன். முல்லை நிலத் தலைவனான திருமாலை இடபமாக உடைய அப்பெருமான் கொடுங்குன்றத்தும் உறைபவன். கொல்லும் முத்தலைச் சூலத்தை உடைய அப்பெருமான் வில்லில் பூட்டிய அம்பினைச் செலுத்தும் ஆற்றலுடையவன். அவன் என் சிந்தையான்.


பாடல் எண் : 10
பொற்றாது மலர்க்கொன்றை சூடினான் காண்
புரிநூலன் காண் பொடியார் மேனியான் காண்
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண்
மறை ஓதி காண் எறிநீர் நஞ்சு உண்டான் காண் 
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண்
இறையவன் காண் மறையவன் காண் ஈசன் தான் காண்
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தான் காண் 
திருவாரூரான் காண் என் சிந்தையானே.

பாடல் விளக்கம்:
திருவாரூர்ப் பெருமான் தன்னை ஒப்பார் இல்லாதவன். பூணூல் அணிந்து நீறு பூசி வேதம் ஓதி, பொன் போன்ற மகரந்தம் உடைய கொன்றைப் பூச்சூடி, ஒன்றாலும் குறைவில்லாத் தலைவனாகிய அப்பெருமான் கடல் நஞ்சு உண்டு வேதவடிவினனாய் எல்லாரையும் நிருவகிப்பவனாய்ப் பகைவர் மும்மதில்களையும் அழித்தவன். அவன் என் சிந்தையான்.

நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக