திங்கள், 18 மே, 2015

திருக்கடம்பூர் திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : அமிர்தகடேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : சோதி மின்னம்மை, வித்யுஜோதி நாயகி

திருமுறை : இரண்டாம் திருமுறை 68 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
வானமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானைத் 
தேனமர் கொன்றையினானைத் தேவர் தொழப்படுவானைக்
கானமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில் 
தானமர் கொள்கையினானைத் தாள்தொழ வீடு எளிதாமே.

பாடல் விளக்கம்‬:
வானிற் பொருந்திய திங்களும் கங்கையும் மருவிய நீண்ட சடையை உடையவனும், தேன் பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவனும், தேவர்களால் தொழப்படுபவனும், காடுகளில் பெண் மானைத் தழுவி ஆண் மான்கள் மகிழும் கடம்பூரில் எழுந்தருளிய இயல்பினனும் ஆகிய பெருமான் திருவடிகளைத் தொழின் வீடு எளிதாகும்.


பாடல் எண் : 02
அரவினொடு ஆமையும் பூண்டு வந்துகில் வேங்கை அதளும்
விரவும் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பிப் 
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் 
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அதுவாமே.

பாடல் விளக்கம்‬:
பாம்பு, ஆமையோடு, ஆகியவற்றைப் பூண்டு, அழகிய ஆடையாகப் புலித்தோலை உடுத்து அழகிய முடிமீது பொருந்திய வெண்பிறையைச் சூடிப் பலராலும் விரும்பிப்பரவப் பெறும் சிறந்த கடம்பூரில் எழுந்தருளிய பசிய கண்களை உடைய வெள்ளேற்று அண்ணலின் திருவடிகளை இரவும் பகலும் பணிய நமக்கு இன்பம் உளதாம்.


பாடல் எண் : 03
இளிபடும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து ஏற
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழிலார் கடம்பூரில் 
ஒளிதரு வெண்பிறை சூடி ஒண்ணுதலோடு உடனாகிப் 
புலியதளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுது நாமே.

பாடல் விளக்கம்‬:
இளி என்னும் இசை இனிமையும் சொல்லினிமையும் உடைய மகளிர் தம் கரிய கூந்தலில் புகை படியுமாறு அந்தணர் ஆகுதி வேட்கும் கடம்பூரில் ஒளி பொருந்திய வெண்பிறை சூடி உமையம்மையோடு உடனாய்ப் புலித்தோலுடுத்து எழுந்தருளியுள்ள இறைவனின் பொற்கழலை நாம் போற்றுவோம்.


பாடல் எண் : 04
பறையொடு சங்கம் இயம்ப பல்கொடி சேர் நெடுமாடம் 
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர் கடம்பூரில் 
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் 
பிறையுடை வார்சடையானைப் பேண வல்லார் பெரியோரே.

பாடல் விளக்கம்‬:
பறை சங்கம் முதலியன ஒலிக்கப் பலவகையான கொடிகள் கட்டிய மாட வீடுகளில் மகளிர் ஆடும் ஒலி நிறைந்த கடம்பூரில் வேத ஒலியோடு கூடிய பாடல்கள் பாடி ஆடி மகிழும் பிறை சூடிய நீண்ட சடையை உடைய பெருமானைப் பேணவல்லவர் பெரியோர் ஆவர்.


பாடல் எண் : 05
தீ விரியக் கழலார்ப்பச் சேயெரி கொண்டு இடுகாட்டில்
நாவிரி கூந்தல் நல்பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் 
காவிரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில் 
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

பாடல் விளக்கம்‬:
தீப்போலும் சடைவிரியக் கழல்கள் ஆர்க்கக் கையில் அனல் ஏந்திச் சுடுகாட்டில் பேய்க்கணம் நகைக்க நடனம் ஆடுபவனும் கொன்றை மாலை அணிந்த நுதல்விழியானும் ஆகிய சிவபெருமானது கடம்பூரை அடைந்து ஓசையின்பம் உடைய பாடல்களைப் பாடிப் போற்றுவார் பழிபாவங்கள் இலராவர்.


பாடல் எண் : 06
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைகக்
கண்புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில்
பெண்புனை கூறுடையானைப் பின்னுசடைப் பெருமானை
பண்புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.

பாடல் விளக்கம்‬:
குளிர்ந்த நீர் நிறைந்த வயல்களில் முளைத்த தாமரைகள் தோறும் அன்னங்கள் வைகி மகிழவும், கண்கவரும் சோலைகளில் வண்டுகள் மொய்க்க மலர்கள் தேன்பிலிற்றவும் அமைந்த கடம்பூரில் மாதொருபாகனாய்ப் பின்னிய சடையினனாய் விளங்கும் பெருமானைப் பண்ணமைந்த பாடல்கள் பாடிப்பரவுவார் பாவம் இல்லாதவராவர்.


பாடல் எண் : 07
பலிகெழு செம்மலர் சார பாடலொடு ஆடல் அறாத
கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ் கடம்பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண் நுதலாள் உமை கேள்வன்
புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல் பொருளே.

பாடல் விளக்கம்‬:
சிவபூசகர்கள் பூசைக்கு வேண்டும் செம்மையான மலர்களைக் கொய்து, பாடியும் ஆடியும் மகிழும் ஒலி நிறைந்த வீதிகளையும் நீர் நிரம்பிய வயல்களையும் உடைய கடம்பூரில் கங்கையை முடியில் மறைத்தவனாய், உமைபாகனாய், புலித்தோல் உடுத்தவனாய் விளங்கும் பெருமான் புகழைப் போற்றுதலே பொருள் உடைய செயலாகும்.


பாடல் எண் : 08
பூம் படுகில் கயல் பாயப் புள்ளிரியப் புறங்காட்டில் 
காம்படு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே.

பாடல் விளக்கம்‬:
அழகிய நீர் நிலைகளில் கயல்கள் பாய, அதனால் பறவை இரிந்தோட விளங்கும் கடம்பூரில் மூங்கில் போன்ற தோள்களை உடைய மகளிர் மனங்கவரும் இயல்பினனாய் விளங்குவோனும் புறங்காட்டில் ஆடுபவனுமாகிய பெருமானது கடம்பூரை அடைந்து மாதொருபாகனே! எம்மானே! எனக்கூறி மலர் தூவித் தொழத் தீயனகெடும்.


பாடல் எண் : 09
திருமரு மார்பில் அவனும் திகழ்தரு மாமலரோனும்
இருவருமாய அறிவு ஒண்ணா எரி உருவாகிய ஈசன் 
கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில் 
மருவிய பாடல் பயில்வார் வானுலகம் பெறுவாரே.

பாடல் விளக்கம்‬:
திருமகள் மருவிய மார்பினனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் ஆகிய இருவரும் அறிய முடியாதவாறு எரியுருவான ஈசனும் கரியமலை போன்ற இராவணனைக் காலால் அடர்த்தவனும் ஆகிய பெருமானது கடம்பூரை அடைந்து, பொருந்திய பாடல்களைப் பாடிப்போற்றுவார் வானுலகம் பெறுவர்.


பாடல் எண் : 10
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடைச் 
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அலகண்டீர்
வேடம் பல பல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன்
காடு அதனில் நடம் ஆடும் கண்ணுதலான் கடம்பூரே.

பாடல் விளக்கம்‬:
ஆடையின்றி அறங்கூறும் அமணர்களும், துவராடை உடுத்து அறநெறி போதிக்கும் பதர்களாகிய புத்தர்களும் நன்னெறி கூறிச் சொன்னாலும் அவை மெய்ச்சொற்களல்ல. பலவேறு வடிவங்களைக் கொண்டருளும் சிவபிரானும், நம் வேத முதல்வனும் சுடுகாட்டுள் நடனமாடும் கண்ணுதலோனுமாகிய பெருமான் எழுந்தருளியிருப்பது கடம்பூராகும்.


பாடல் எண் : 11
விடை நவிலும் கொடியானை வெண்கொடி சேர் நெடுமாடம் 
கடை நவிலும் கடம்பூரில் காதலனை கடல் காழி 
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும் 
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

பாடல் விளக்கம்‬:
விடைச்சின்னத்தை அறிவிக்கும் கொடியை உடையவனை, வெண்கொடிகள் சேர்ந்த உயரிய வாயில்களைக் கொண்ட மாட வீடுகளை உடைய கடம்பூரில் விருப்புடையவனை, கடலை அடுத்துள்ள காழி மாநகரில் தோன்றிய நன்னடை உடைய ஞானசம்பந்தன் நன்மை அருளுமாறு வேண்டிப் பாடிய சாதனமாகிய பாடல்களை ஓதுவார் பழிபாவம் இலாராவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக