திங்கள், 11 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 19

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஆறாம் திருமுறை 26 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பாதித் தன் திரு உருவில் பெண் கொண்டானை
பண்டொருகால் தசமுகனை அழுவித்தானை 
வாதித்துத் தட மலரான் சிரம் கொண்டானை
வன்கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை 
சோதிச் சந்திரன் மேனி மறுச் செய்தானை
சுடரங்கி தேவனையோர் கை கொண்டானை
ஆதித்தன் பல் கொண்ட அம்மான் தன்னை 
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
பார்வதி பாகனாய்ப் பண்டு இராவணனை வருத்தியவனாய், வருத்திப் பிரமன் தலை ஒன்றை நீக்கியவனாய், வலிய கரும்பு வில்லை உடைய மன்மதன் உடலை எரித்தவனாய், ஒளி பொருந்திய சந்திரனுடைய உடலில் களங்கத்தை உண்டாக்கியவனாய், ஒளி வீசும் அக்கினி தேவனுடைய கை ஒன்றனைப் போக்கிச் சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய அப்பெருமானைத் திருவாரூரில் அடியேன் தரிசித்து அவனைத் தவிர ஏனையவற்றை எல்லாம் மறந்தேன்.


பாடல் எண் : 02
வெற்புறுத்த திருவடியால் கூற்று அட்டானை
விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திரு உருவத்து ஒருவன் தன்னை
ஓதாதே வேதம் உணர்ந்தான் தன்னை
அப்புறுத்த கடல் நஞ்சம் உண்டான் தன்னை
அமுது உண்டார் உலந்தாலும் உலவா தானை 
அப்புறுத்த நீர் அகத்தே அழலானானை
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
இராவணன் பொருட்டு மலையை அழுத்திய திருவடியால் கூற்றுவனை உதைத்தவனாய், விளக்கு மின்னல் முத்து இவற்றை ஒத்த திருமேனி ஒளியினனாய், வேதங்களை ஓதாது உணர்ந்தவனாய், நீரை மிகுதியாக நிறைத்த கடலில் தோன்றிய விடத்தை உண்டு அமுதமுண்ட தேவர் இறந்த போதும் தான் இறவாதவனாய், கடல் நீரினுள் இருக்கும் பெண் குதிரை முக வடிவினதாகிய தீயாகவும் உள்ள பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.


பாடல் எண் : 03
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை
ஊழிதோறு ஊழி உயர்ந்தான் தன்னை
வருகாலம் செல்காலம் ஆயினானை 
வன்கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை
பொருவேழக் களிற்று உரிவைப் போர்வை யானைப்
புள் அரையன் உடல் தன்னைப் பொடி செய்தானை
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
தக்கன் வேள்வி செய்த காலத்தில் சூரியன் ஒருவனுடைய கண்களை நீக்கியவனாய், ஊழிகள் தோறும் மேம் பட்டுத் தோன்றுபவனாய், எதிர் காலமும் இறந்த காலமும் ஆயினவனாய், வலிய கரும்பு வில்லை ஏந்திய மன்மதனுடைய உடலை நலிவித்தவனாய், தன்னோடு பொரவந்த யானையை உரித்துப் போர்த்தவனாய், செருக்கொடு வந்த கருடன் உடலைப் பொடி செய்தவனாய், அரிய வேள்வியை அழித்து வேள்வித் தேவனின் தலையை நீக்கிய பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.


பாடல் எண் : 04
மெய்ப் பால் வெண்நீறு அணிந்த மேனியானை
வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் தன்னை
உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் 
வைப்பானைக் களைவானை வருவிப்பானை
வல்வினையேன் மனத்து அகத்தே மன்னினானை
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
திருநீறணிந்த மேனியனாய்ப் பளிங்கினுள் பதித்தாற் போன்ற செஞ்சோதியனாய்த் தன்னொப்பார் பிறர் இல்லாதானாய், உத்தமனாய், முத்துப் போன்று இயற்கை ஒளி உடையவனாய், உலகங்களை எல்லாம் காத்து அழித்துப் படைப்பவனாய்த் தீவினையை உடைய அடியேன் மனத்தில் நிலைபெற்றவனாய், மாயைக்கு அப்பாற்பட்ட உயிருக்கு அப்பாற்பட்டவனை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.


பாடல் எண் : 05
பிண்டத்தில் பிறந்தது ஒரு பொருளை மற்றைப்
பிண்டத்தைப் படைத்தானை பெரிய வேதத்
துண்டத்தில் துணி பொருளைச் சுடுதீ ஆகி 
சுழல்காலாய், நீராகிப் பார் ஆய் இற்றைக் 
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுது செய்து
கண்மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை
அண்டத்துக்கு அப் புறத்தார் தமக்கு வித்தை
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
மனித உடலில் பிறந்த உயிர் கொண்டு உணரும் உணர்விற்குத் தோன்றுபவனாய், அவ்வுடலையும் படைத்தவனாய்ப் பெரிய வேதங்களின் யாப்பினுள் துணியப்படும் பரம்பொருளாகக் கூறப்படுபவனாய்ச் சுடு தீயாகியும் சுழன்றடிக்கும் காற்றாகியும் நீராகியும் மண்ணாகியும் இருப்பவனாய்த் தீமைக்கு இருப்பிடமாகிய நஞ்சினை உண்டு அதனைக் கழுத்தளவில் இருத்தியவனாய், முக் கண்ணனாய்க் கரும்பும் பாலும் போல இனியனாய், முத்தர்களுக்குப் பயன் தரும் பொருளாய் உள்ள பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.


பாடல் எண் : 06
நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
நிறைகாலாய் இவையிற்றின் நியமமாகிப்
பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்ப்
பரமாணு வாய்ப்பழுத்த பண்களாகிச்
சோதியாய் இருளாகிச் சுவைகளாகிச் 
சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் 
ஆதியாய் அந்தமாய் நின்றான் தன்னை
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
ஒழுங்குக்கு ஓர் உறைவிடமாய், நிலம் நெருப்பு நீர் எங்கும் நிறைந்த காற்று என்ற இவற்றின் ஒழுங்குகளையும் பண்புகளையும் நிருவகிப்பவனாய், எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடாய்ப் பரசிவமாகிய ஒன்றாய்ச் சிவமும் சத்தியும் என இரண்டாய், அயன் மால் அரன் என்ற மும்மூர்த்திகளாய், அணுவுக்கும் அணுவாய் நிறைந்திருப்பவனாய், செவ்வனம் நிரம்பிய ஏழிசை வடிவினனாய்ச் சோதியாகியும் இருளாகியும் பொருள்களின் சுவைகளாகியும் அடியார்களுக்கு எத்திறத்தினும் சுவைக்கும் திறம் கலந்த பகுதியனாய், வீட்டுலகம் அருளுபவனாய், வீட்டிற்கு வாயிலாகிய ஞானமும் அந்த ஞானத்தால் அடையத்தக்க பயனுமாய், அடியார்க்குத் தன்னை அடையத்தானே ஆறும் பேறுமாக (உபாயமும் உபமேயமும்) இருக்கும் பெருமானைத் திருவாரூரில் அடியேன் கண்டு அவனைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் மறந்தேன்.


இப்பதிகத்தில் 7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.


நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

1 கருத்து:

  1. "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது

    வேத நான்கினு மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே''

    பதிலளிநீக்கு