செவ்வாய், 12 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 22

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஆறாம் திருமுறை 29 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
திருமணியைத் தித்திக்கும் தேனைப் பாலைத்
தீம்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறல் 
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
பருப்பதத்தில் அருங்கலத்தைப் பாவம் தீர்க்கும் 
அருமணியை ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
செல்வம் தரும் சிந்தாமணியாய், இனிக்கும் தேன், பால், கருப்பஞ்சாறு, தெளிவாகிய அமுதம் போன்றவனாய்ச் சிறந்த ஆசிரியனாய், குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரை சச்சரி இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய், எங்கும் கிட்டுதற்கு அரிய பெரிய இரத்தினம் பவளம் முத்து கிளிச்சிறை என்ற பொன் போன்றவனாய்ச் சீசைலத்தின் விலை மிக்க அணிகலனாய், பாவத்தைப் போக்கும் அரிய மாணிக்கமாய் உள்ள ஆரூர்ப் பெருமானை இதுகாறும் அறியாது நாய் போன்ற, அவன் அடியேன் மறந்திருந்தவாறு கொடியது.


பாடல் எண் : 02
பொன்னே போல் திருமேனி உடையான் தன்னைப்
பொங்கு வெண்ணூலானைப் புனிதன் தன்னை
மின்னானை மின்னிடையாள் பாகன் தன்னை
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான் தன்னை
தன்னானைத் தன் ஒப்பார் இல்லாதானை
தத்துவனை உத்தமனை தழல்போல் மேனி 
அன்னானை ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
பொன்னார் மேனியனை, வெண்ணூல் அணிந்த புனிதனாய் ஒளி வீசுவானை, பார்வதிபாகனை, யானைத்தோல் போர்வையனைத், தன்வயம் உடையவனைத் தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனை, மெய்ப்பயனை, மேம்பட்டவனை, தழல் போன்ற செந்நிற மேனியனை - இவ்வாறெல்லாம் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்கும் ஆரூர்த் தலைவனை இதுகாறும் அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.


பாடல் எண் : 03
ஏற்றானை ஏழ் உலகும் ஆனான் தன்னை
ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான் தன்னைக்
கூற்றானைக் கூற்றம் உதைத்தான் தன்னைக்
கொடுமழுவாள் கொண்டதோர் கையான் தன்னைக்
காற்றானைத் தீயானை நீருமாகிக் 
கடி கமழும் புன்சடைமேல் கங்கை வெள்ள
ஆற்றானை, ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
இடபவாகனனாய், ஏழ்கடலும் ஏழ்மலையும் ஏழுலகும் ஆகிப் பரந்திருப்பவனாய்க் கூற்றுவனாய்த் தருமராசருடைய ஏவலனான கூற்றை உதைத்தவனாய், மழுப்படை ஏந்திய கையனாய், காற்றும் தீயும் நீருமாகி நறுமணம் கமழும் செஞ்சடை மேல் கங்கையைத் தரித்தவனாய் உள்ள, ஆரூரிலுள்ள, அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.


பாடல் எண் : 04
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை
மூவாத மேனி முக்கண்ணினானைச் 
சந்திரனும் வெங்கதிரும் ஆயினானை
சங்கரனை சங்கக் குழையான் தன்னை
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான் தன்னை
மறுமையும் இம்மையும் ஆனான் தன்னை
அந்திரனை ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட கொடிய வினைகளைத் தீர்ப்பவனாய், மூப்படையாத் திருமேனியில் மூன்று கண்கள் உடையவனாய்ச் சந்திரனும் சூரியனும் ஆகியவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், சங்கினாலாகிய காதணியை உடையவனாய், மந்திரமும் வேதத்தின் பொருளும் மறுமையும் இம்மையுமாய் அழகுநிலை பெற்றிருக்கும் ஆரூரிலுள்ள அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.


பாடல் எண் : 05
பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞகனுமாய்ப்
பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே 
உறநெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில்
ஓரிபல விட நட்டம் ஆடினானைத்
துறநெறியாய்த் தூபமாய்த் தோற்றமாகி
நாற்றமாய் நன்மலர் மேல் உறையா நின்ற 
அறநெறியை ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
பிறக்கும் வழிகளாகவும், பெருமையாகவும், தலைக்கோலம் அணிந்தவனாகவும், பித்தனாகவும், அடியவர்கள் உள்ளத்தில் உறவுதரும் வழியாகவும், வேள்வியாகவும் அமைந்து, சுடுகாட்டிலுள்ள நரிகள் அஞ்சி ஓடக் கூத்தாடுபவனாய்த் துறவு நெறியாகவும் புகையாகவும் காட்சி வழங்கிப் பூவில் நறுமணம் போல உலகெங்கும் பரந்துள்ளவனாய் உள்ள அறநெறியை அறிவித்த ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.


பாடல் எண் : 06
பழகிய வல்வினைகள் பாற்று வானைப் 
பசுபதியைப் பாவகனைப் பாவம் தீர்க்கும் 
குழகனைக் கோள் அரவு ஒன்று ஆட்டுவானைக்
கொடுகொட்டி கொண்டதோர் கையான் தன்னை
விழவனை வீரட்டம் மேவினானை
விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை, 
அழகனை ஆரூரில் அம்மான் தன்னை 
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
பழக்கத்தினால் ஏற்படும் வருவினையை அழிப்பவனாய், ஆன்மாக்களுக்குத் தலைவனாய், அக்கினித் தேவனாய்ப் பாவங்கள் போக்கும் இளையவனாய், பாம்பினை ஆட்டுபவனாய்க் கொடுகொட்டிப்பறையைக் கையில் கொண்டவனாய், விழாக்களில் மேவி இருப்பவனாய், வீரட்டத்தில் உறைபவனாய்த் தேவர்கள் துதித்து விரும்பும் அழகனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்த வாறே.


பாடல் எண் : 07
சூளா மணிசேர் முடியான் தன்னை
சுண்ண வெண்நீறு அணிந்த சோதியானைக்
கோள் வாய் அரவம் அசைத்தான் தன்னைக்
கொல் புலித் தோல் ஆடைக் குழகன் தன்னை
நாள் வாயும் பத்தர் மனத்து உளானை
நம்பனை நக்கனை முக்கணானை
ஆள்வானை ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
சூளாமணியை அணிந்த முடியை உடையவனாய், திருநீறு தரித்த ஒளியினனாய், கொடிய பாம்பினை, இடையில் இறுக்கிக் கட்டியவனாய்ப் புலித்தோல் ஆடையை அணிந்த இளையவனாய், எப்பொழுதும் அடியவர் உள்ளத்தில் இருந்து அவரால் விரும்பப்படுபவனாய், ஆடை அற்றவனாய், முக்கண்ணனாய், எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.


பாடல் எண் : 08
முத்தினை மணிதன்னை மாணிக்கத்தைத் 
மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து
கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன் தன்னைப்
பத்தனை பத்தர் மனத்து உளானைப் 
பரிதிபோல் திருமேனி உடையான் தன்னை
அத்தனை ஆரூரில் அம்மான் தன்னை 
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
முத்து, மணி, மாணிக்கம், என்றும் மூப்படையாத கற்பகத்தின் கொழுந்து, வயிரம் இவற்றை வைத்துக் கோத்த மாலை போல்வானாய்க் காளையை இவர்ந்து பாம்பாட்டும் இளையவனாய், எல்லோரிடத்தும் அன்புடையவனாய், பக்தர்கள் மனத்தில் நிலைத்து இருப்பவனாய், சூரியனைப் போல ஒளி வீசும் திருமேனியை உடையவனாய், எல்லோருக்கும் தலைவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.


பாடல் எண் : 09
பை ஆடு அரவம் கை ஏந்தினானைப் 
பரிதிபோல் திருமேனிப் பால் நீற்றானை
நெய்யாடு திருமேனி நிமலன் தன்னை
நெற்றிமேல் மற்றொரு கண் நிறைவித்தானைச்
செய்யானைச் செழும் பவளத்திரள் ஒப்பானைச்
செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை 
ஐயாறு மேயானை ஆரூரானை 
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
படமெடுத்தாடும் பாம்பைக் கையில் ஏந்தியவனாய்ச் சூரியனைப் போலச் சிவந்த மேனியில் பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவனாய், நெய் அபிடேகம் செய்த திருமேனியை உடைய தூயவனாய், நெற்றியில் மூன்றாவது கண் உடையவனாய்ச் செழும்பவளத்திரள் போன்ற செந்நிறத்தினனாய்ச் செஞ்சடையில் வெண்பிறை சூடியவனாய்த் திருவையாற்றை உகந்தருளியிருப்பவனான ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே.


பாடல் எண் : 10
சீரார் முடிபத்து உடையான்தன்னைத் 
தேசு அழியத் திருவிரலால் சிதைய நூக்கிப் 
பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப்
பெண்ணிரண்டும் ஆணுமாய் நின்றான் தன்னைப் 
போரார் புரங்கள் புரள நூறும் 
புண்ணியனை வெண்நீறு அணிந்தான் தன்னை
ஆரானை ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே.

பாடல் விளக்கம்:
அழகிய பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் புகழ் அழியுமாறு கால் விரலால் உடல் சிதைய வருத்திப் பிறகு அவனுக்கு அந்தப் பெயருக்கு ஏற்ப எல்லாரையும் அழச்செய்பவன் என்ற பெருமையைக் கொடுத்தானாய்ப் பார்வதி கங்கை என்ற பெண்பாலர் இருவரைக் கொண்ட ஆண்வடிவு உடையவனாய்ப் போரிட்ட திரிபுரங்கள் அழியுமாறு சாம்பலாக்கிய புண்ணியனாய், வெண்ணீறு அணிந்தானாய், அடியவர்களுக்குத் தெவிட்டாதவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்த வாறே.


நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக