திங்கள், 11 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 16

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஐந்தாம் திருமுறை 07 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி, 
பக்கமே பகுவாயன பூதங்கள் 
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய் 
அக்கினோடு அரவு ஆர்ப்பர் ஆரூரரே.

பாடல் விளக்கம்:
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி ஆகிய வாச்சியங்களைக் கொண்டு இசைத்து மருங்கிலே நின்று பிளந்தவாயை உடைய பல பூதங்கள் ஆடா நிற்ப ஆடுங் கூத்தராய் அக்குமணிகளையும் அரவையும் பூண்பவர் திருவாரூர்ப் பெருமானாவர்.


பாடல் எண் : 02
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே 
பந்தம் வீடு அவையாய பராபரன் 
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி 
சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே.

பாடல் விளக்கம்:
நெஞ்சமே! பந்தமும், வீடுமாயிருக்கும் தேவ தேவனாகிய திருவாரூர்ப் பெருமானுக்குரிய முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும், சிரத்தினும் தங்குதற்கு எவ்வளவு பெருந்தவம் நீ செய்தனை? (திருவாரூர், அரநெறியை உள்ளத்திற் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நற்றவத்தார்க்கு அன்றி எய்தொணாது என்றபடி).


பாடல் எண் : 03
வண்டு உலாம் மலர் கொண்டு வளர்சடைக்கு 
இண்டை மாலை புனைந்தும் இராப்பகல் 
தொண்டராகித் தொடர்ந்து விடாதவர்க்கு 
அண்டம் ஆளவும் வைப்பர் ஆரூரரே.

பாடல் விளக்கம்:
வண்டுகள் அணுகப்பெறாது சூழ உலாவும் மலர்களைக்கொண்டு வளரும் சடைக்கு இண்டை மாலைகள் புனைந்தும், இரவும் பகலும் தொண்டுகள் புரிந்தும் தொடர்ந்து விடாது வழிபடுவார்க்கு அண்டங்களை ஆளவும் கொடுக்கும் பெருமான் திருவாரூரர் ஆவர். ஆளவும் என்னும் எச்ச உம்மையால் சிவஞானமாகிய முக்கியப் பயனைத் தருவதோடு எனக்கொள்க.


பாடல் எண் : 04
துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய்
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று
இன்பராய் நினைந்து என்றும் இடையறா 
அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே.

பாடல் விளக்கம்:
துன்பங்கள் முற்றும் நீங்கி நலம் சான்றவராய் எலும்பெல்லாம் நெகிழ்ந்து இரவும் பகலும் வழிபட்டு நின்று இன்பமுடையோராய் நினைந்து என்றும் இடையறாத அன்பர்க்கு அன்பராய் இருப்பர் திருவாரூர்ப் பெருமான். (இவ்வியல்புடையார்க்கே முதல்வனும், அன்பனாய், அவரைத் தன் தமர்க்குள் வைக்கும் என்றபடி).


பாடல் எண் : 05
முருட்டு மெத்தையில் முன் கிடத்தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு நீர்
முரண் தடித்த அத் தக்கன் தன் வேள்வியை 
அரட்டு அடக்கிதன் ஆரூர் அடைமினே.

பாடல் விளக்கம்:
ஈமக்கிடையில் கிடத்துவதற்கு முன்பு, அடங்காத ஐந்து புலன்களைக் குற்ற மறக்களைந்து முரண்பாடு கொண்ட அத்தக்கன் வேள்வியாகிய குறும்பை அடக்கியவனாகிய சிவபெருமான் உறையும் திருவாரூரை நீர் அடைந்து வழிபடுவீராக.


பாடல் எண் : 06
எம்மை யாரிலை யானும் உளேன் அலேன்
எம்மை யாரும் இது செய வல்லரே 
அம்மை யார் எனக்கு என்று என்று அரற்றினேற்கு 
அம்மை ஆரத் தந்தார் ஆரூர் ஐயரே.

பாடல் விளக்கம்:
எம்மைக்காத்தற்குரிய இருமுது குரவரும் இலர், யானும் (இளம் பருவத்தினன் ஆகலின்) தனித்து வாழும் மன உறுதி உள்ளேன் அல்லேன், எனது அன்னையை ஒத்த உடன் பிறந்தாரும் (திலகவதியாரும்) இதனைச் செய்ய (எனக்குத் துணையாய் நின்றருள) வல்லரே! (ஆயினும் அவர் இதுபோது உயிர்விடத் துணிதலின்) தாயாய் உடனிருந்து உபகரிக்கவல்லார் யார் என்று இங்ஙனம் பன்முறை வாய்விட்டு அரற்றிய எளியேனுக்குத் திருவாரூரில் எழுந்தருளியுள்ள பெருமானே (ஐயரே) வீட்டு நெறிக்கு உரிய என் உடன் தோன்றினாரை (உயிர் தாங்கச் செய்து) எனக்கு இருமுது குரவரும், ஆசானும், கேளும், உறவுமாக வைத்தருளினார். இப்பாட்டு நாவுக்கரசர், முதல்வன் தமது தமக்கையாரை உம்பருலகணைய உறும் நிலை விலக்கி உயிர் தாங்கி மனைத்தவம் புரிந்திருக்க வைத்தது தாம் பின்னர் மெய்யுணர்வு பெற்றுத் திருத் தொண்டின் நெறி பேணி உய்தற்பொருட்டே என நினைந்து பாடியது.


பாடல் எண் : 07
தண்ட ஆளியை தக்கன் தன் வேள்வியை
செண்டு அது ஆடிய தேவர கண்டனைக்
கண்டு கண்டு இவள் காதலித்து அன்பதாய்க்
கொண்டி ஆயின ஆறு என் தன் கோதையே.

பாடல் விளக்கம்:
என்றன் கோதையாகிய இவள் தண்டத்தைக் (ஒறுப்பு முறை) கையாள்பவனும், தக்கன் செய்த பெருவேள்வியைச் செண்டு ஏந்தி ஆடுதல் போல் எளிதாக அட்ட தேவர்கள் முதல்வனும் ஆகிய ஆரூர் வீதிவிடங்கனை (அவன் உலாப்போதரும் போது) பன்முறை கண்டு அவனைக் காதலித்து அன்பே வடிவாய் நம் வயப்பட்டு ஒழுகாத கொண்டி (பட்டி) ஆயினவாறு என்னே.


பாடல் எண் : 08
இவள் நமைப் பல பேசத் தொடங்கினாள்
அவணம் அன்று எனில் ஆரூர் அரன் எனும் 
பவனி வீதி விடங்கனைக் கண்டு இவள்
தவனி ஆயின ஆறு என் தன் தையலே.

பாடல் விளக்கம்:
இவள் நம்பால் ஒரு நெறிப்படாத பல பேச்சுக்களைப் பேசத் தொடங்கிவிட்டாள். இவள் உள்ள அவ்விடத்தேம் அல்லேம் எனின் (அதாவது, இவள் தனித்துள்ள போது) ஆரூர் அரன் என மொழிவாள். என்றன் தையலாகிய இவள் உலாப்போந்த வீதி விடங்கப் பெருமானைக் கண்டமையால் காம நோயுடையாள் ஆனவாறு இது. 


பாடல் எண் : 09
நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்
கார் ஒத்த மிடற்றர் கனல் வாயரா 
ஆரத்தர் உறையும் அணி ஆரூரைத் 
தூரத்தே தொழுவார் வினை தூளியே.

பாடல் விளக்கம்:
கங்கைச் சடையரும், திருநீலகண்டரும், அரவாகிய ஆரம் உடையவருமாகிய பெருமான் உறையும் அணி ஆரூர்த் தலத்தைத் தூரத்தே கண்டு தொழுவார் வினைகள் தூளியாகிக் கெடும்.


பாடல் எண் : 10
உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன் நான்
வெள்ளம் தாங்கும் விரிசடை வேதியன் 
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் 
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.

பாடல் விளக்கம்:
உள்ளமே! நான் ஓர் உறுதி உரைப்பன் கேள் கங்கை வெள்ளத்தைத் தாங்கும் விரித்த சடை உடைய வேதியனும் சேறு, நீர் பொருந்திய வயல்களை உடைய ஆரூர் அமர்ந்த எம் வள்ளலுமாகிய பெருமான் சேவடிகளை வாழ்த்து வணங்கு.


பாடல் எண் : 11
விண்ட மாமலர் மேலுறை வானொடும்
கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா 
அண்ட வாணன்தன் ஆரூர் அடி தொழப் 
பண்டை வல்வினை நில்லா பறையுமே.

பாடல் விளக்கம்:
விரிந்த மலர்மேலுறை பிரமனும், மேக வண்ணனாகிய திருமாலும் கூடி அறியகில்லாத திருவாரூர் அண்டவாணனது திருவடிகளைத் தொழப் பழைய வல்வினைகள் நில்லாமற் கெடும்.


பாடல் எண் : 12
மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன் 
கை உலாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம் 
உய்யலாம் அல்லல் ஒன்று இலை காண்மினே.

பாடல் விளக்கம்:
கரிய கண்டம் உடையானும், அண்டத்திலுள்ளானும், கையிற் சூலம் உடையானும், கண்ணுதலானும் ஆகிய திருவாரூர்த் தலத்தின்கண் ஐயன் அடிதொழும் எல்லாரும் உய்தி பெறலாம். துன்பம் ஒன்றும் அவர்க்கில்லை காண்பீராக.

நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக