திங்கள், 18 மே, 2015

திருக்கடம்பூர் திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : அமிர்தகடேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : சோதி மின்னம்மை, வித்யுஜோதி நாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 19 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி 
வளரும் கோல வளர்சடையார்க்கு இடம் 
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
தளருகின்ற கொள்ளுதல் தப்பாத பாம்பினோடு, குளிர்ந்த பிறைமதி வளரும் அழகு வளர்கின்ற சடையாராகிய சிவபெருமானுக்கு இடம், பேரிசை கிளர்கின்ற கின்னரங்களின் பாட்டு அறாத, கரிய கடம்பு நிறைந்த ஊரில் திருக்கரக்கோயிலே.


பாடல் எண் : 02
வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும் 
சொல வலான் சுழலும் தடுமாற்றமும் 
அல வலான் மனையார்ந்த மென்தோளியைக் 
கல வலான் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
கடம்பூர்த் திருக்கரக் கோயிலின்கண் வீற்றிருக்கும் இறைவன் புலன் ஐந்தினை வெல்ல வல்லமை உடையவன், வேதமும் சொல்ல வல்லவன், சுழல்கின்ற தடுமாற்றமும் நீக்க வல்லவன், மனையார்ந்த மங்கையாகிய மென்றோளுடைய உமாதேவியாரைக் கலத்தல் வல்லவன்.


பாடல் எண் : 03
பொய் தொழாது புலி உரியோன் பணி 
செய்து எழா எழுவார் பணி செய்து எழா
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் 
கைதொழா எழுமின் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
உலகப் பொருள்களில் பற்றுச் செய்யாது. புலியின் தோலை உடுத்தோனாகிய சிவபிரான் பணியைச் செய்து, அவ்வாறு எழுவார் பணியினையும் உடன் செய்து கரக்கோயிலைக் கைதொழுது வணங்கி உயர்வீராக! வைதொழாது எழுவார் எள்ளினால் எள்ளட்டும்.


பாடல் எண் : 04
துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே
எண்ணிலார் எயில் மூன்றும் எரித்த முக்
கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
நல்ல எண்ணமில்லாதாரது முப்புரம் எரித்த முக்கண்ணினானது கடம்பூர்க் கரக்கோயிலை, பண்ணினால் திருமுன்பு பாடல் பரவி அச்சமின்றி நெஞ்சமே தொழுவாயாக.


பாடல் எண் : 05
சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக் 
கனையும் பைங்கழலான் கரக்கோயிலை 
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே.

பாடல் விளக்கம்‬:
சுனையுள் பூத்த நீலமலர் போன்ற கண்டத்தனும், புனையும் பொன்னிறக் கொன்றையுடைய புரிசடையும் ஒலிக்கின்ற கழலும் உடையவனுமாகிய கரக்கோயிற் பெருமானை நினையும் உள்ளத்தவர் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 06
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் 
வணங்கி வாழ்த்துவர, அன்பு உடையார் எலாம்
வணங்கி வான்மலர் கொண்டு அடி வைகலும் 
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
அன்புடையாரெலாம் குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவதும், கணங்கள் வணங்கி வான்மலர் கொண்டு வைகலும் அடி போற்றிசைப்பதும் கரக்கோயில் தலத்திலாகும்.


பாடல் எண் : 07
பண்ணினார் மறை பல்பல பூசனை 
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும் 
விண்ணினார்கள் வியக்கப் படுவன
கண்ணினார் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
திருக்கடம்பூர்க் கரக்கோயில் பண்ணினைப் பொருந்திய மறையோதிப் பல்பூசனைகளை மண்ணினுள்ளார் செய்வதன்றியும் நாள்தோறும் விண்ணினுள்ளாரும் வியக்கப்படும் பூசனைகள் செய்யக்கருதினர்.


பாடல் எண் : 08
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன் 
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக் 
கங்கையான் உறையும் கரக்கோயிலைத் 
தம் கையால் தொழுவார் வினை சாயுமே.

பாடல் விளக்கம்‬:
உமையம்மை உடனிருந்து மகிழ்ந்து பாட அங்கையில் அழல் ஏந்தி நின்று ஆடல் புரிபவன், ஆய கங்கையுறையும் சடையான் வீற்றிருக்கும் கரக்கோயிலைத் தம்கையால் தொழுவாருடைய வினைகள் வலியற்றுக் கெடும்.


பாடல் எண் : 09
நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே.

பாடல் விளக்கம்‬:
கடம்ப மாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமா தேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல், என் போன்றார் கடன் பணி செய்து தற்போதம் இன்றியே இருத்தல்.


பாடல் எண் : 10
பணங்கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும் 
மணம் கமழ் மலர்த் தாமரையானவன் 
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
பாற்கடலில் கிடக்கும் படம் கொண்ட பாம்பு அணையானாகிய திருமாலும் மணம் கமழ் மலர்த் தாமரையானாகிய பிரமனும் தம்மில் மாறுபட்ட போது பேரழலாய் நிமிர்ந்த எம்பெருமானுக்கு இடம், கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலாகும்.


பாடல் எண் : 11
வரைக்கண் நாலஞ்சு தோளுடையான் தலை
அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார்
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை 
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.

பாடல் விளக்கம்‬:
திருக்கயிலாயத் திருமலைக்கண் இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும் படி ஊன்றிப் பின்னர் அருள் புரிந்த ஈசனார் வீற்றிருக்கும், அலை வீசும் குளிர் புனல் சூழ் கரக்கோயிலைக் கூறும் உள்ளத்தவர் வினைகள் ஓயும்.


தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக