இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஆறாம் திருமுறை 28 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஆறாம் திருமுறை 28 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 01
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும்
நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார்போலும்
காற்றினையும் கடிதாக நடந்தார் போலும்
கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும்
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும்
கொல் புலித் தோல் ஆடைக் குழகர் போலும்
ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
அழகிய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள பெருமானார் நெற்றிக்கண் ஒன்று உடையாராய், நெற்றியில் திருநீறு அணிந்தவராய், வெள்ளிய எலும்புகளை விடாமல் அணிந்தவராய்க் காற்றை விட விரைவாகச் செல்பவராய், ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியால் கூற்றுவனை உதைத்தவராய்த் தம்மால் கொல்லப்பட்ட புலித்தோல் ஆடையை உடுத்த இளையராய்க் கங்கையையும் சடைமேல் வைத்தவராய், அகக்கண்களுக்குக் காட்சி நல்குகிறார்.
பாடல் எண் : 02
பரியதோர் பாம்பு அரைமேல் ஆர்த்தார் போலும்
பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும்
கரியதோர் களிற்று உரிவை போர்த்தார் போலும்
காபாலம் கட்டங்கக் கொடியார் போலும்
பெரியதோர் மலை வில்லா எய்தார் போலும்
பேர் நந்தி என்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்கள் அட்டார் போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
அணி ஆரூர்த் திருமூலட்டானனார் பருத்த பாம்பினை இடையில் இறுக்க அணிந்தவராய், அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கியவராய்க் கரிய யானைத் தோலினைப் போர்த்தவராய், மண்டை ஓட்டினையும் கட்டங்கப் படை எழுதிய கொடியினையும் உடையவராய்ப் பெரிய மலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்தவராய், நந்தி என்ற பெயரினையும் உடையவராய்ப் பகைவருடைய அழித்தற்கரிய மும்மதில்களையும் அழித்தவராய், நம் மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார்.
பாடல் எண் : 03
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும்
தூய திருமேனிச் செல்வர் போலும்
பிணி உடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்
பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும்
மணி உடைய மாநாகம் ஆர்ப்பார் போலும்
வாசுகி மா நாணாக வைத்தார் போலும்
அணி உடைய நெடுவீதி நடப்பார் போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
கீளூம் கோவணமும் ஆகிய குறைந்த உடைகளையும் தோல் உடையையும் உடையவராய்த் தூய திருமேனியை உடைய செல்வராய், அடியார்களுடைய பிணிகளை நீங்குமாறு போக்குபவராய், மொழியைக் கடந்த பெரும்புகழாளராய், இரத்தினங்களை உடைய மேம்பட்ட நாகங்களை அணிந்தவராய், வாசுகி என்ற பாம்பினைத் தம் வில்லின் நாணாகக் கொண்டவராய், அழகிய நீண்ட வீதிகளில் உலாவுபவராய், அழகிய ஆரூர்ப் பெருமானார் மனக்கண் முன் காட்சி வழங்குகிறார்.
பாடல் எண் : 04
ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும்
ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
காட்டகத்தே ஆடல் உடையார் போலும்
காமரங்கள் பாடித் திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆனைந்து உகந்தார் போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
அணி ஆரூர்த் திருமூலட்டானனார் மண்டை யோட்டில் பிச்சையெடுக்கும் உணவையே விரும்பியவராய், அனற் பிழம்பாய்த் தோன்றி அடி முடி காண முடியாதவாறு உயர்ந்தவராய், நாட்டிலே மக்கள் பயின்று வரப் பல நெறிகளையும் கூறியவராய், ஞானப் பெருங்கடலுக்கு உரிமை பூண்ட தலைவராய்ச் சுடு காட்டில் கூத்து நிகழ்த்துபவராய் சீகாமரம் என்ற பண்ணில் அமைந்த பாடல்களைப் பாடித்திரிபவராய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை உகப்பவராய் நம்மனக்கண் முன் காட்சி வழங்குகிறார்.
பாடல் எண் : 05
ஏனத்து இள மருப்புப் பூண்டார் போலும்
இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும்
கானக் கல்லால் கீழ் நிழலார் போலும்
கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்
வானத்து இளமதி சேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
பன்றியின் முற்றாத கொம்பினை அணிந்தவராய்த் தேவர்கள் வழிபடும்படியாகத் தங்கியிருப்பவராய்க் காட்டில் உள்ள கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தவராய்க் கடல் நஞ்சினை உண்டு கறுத்த கழுத்தினராய்ப் பிறை சேர்ந்த சடையினராய், உயர்ந்த கயிலை மலையை உகந்து உறைபவராய், அகரமாகிய எழுத்து ஏனைய எழுத்துக்களின் தோற்றத்துக்குக் காரணமாக இருப்பது போல ஏனைய பொருள்களுக்கெல்லாம் காரணராய், காளையை இவர்ந்தவராய் அடியவர்கள் மனக்கண் முன் அழகிய ஆரூர்ப் பெருமானார் காட்சி வழங்குகிறார்.
பாடல் எண் : 06
காமனையும் கரியாகக் காய்ந்தார் போலும்
கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்
சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும்
நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையும் திருமுடியார் தாமே போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் மன்மதனைச் சாம்பலாகுமாறு கோபித்துக் கடல் விடத்தை உண்டு நீலகண்டராய்ப் பிறையையும் சடையில் சூடிச் சொல், சொற்பொருள், நாவால் உச்சரிக்கப்படும் வேதம் இவற்றின் வடிவினராய்ப் பார்வதி பாகராய்க் கங்கையை முடியில் வைத்தவராய் அடியவர் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார்.
பாடல் எண் : 07
முடியார் மதி அரவம் வைத்தார் போலும்
மூஉலகும் தாமேயாய் நின்றார் போலும்
செடியார் தலைப் பலி கொண்டு உழல்வார் போலும்
செல் கதிதான் கண்ட சிவனார் போலும்
கடியார் நஞ்சு உண்டு இருண்ட கண்டர் போலும்
கங்காள வேடக் கருத்தர் போலும்
அடியார் அடிமை உகப்பார் போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் முடியில் பிறையும் பாம்பும் சூடி, மூவுலகும் தாமேயாய்ப் பரந்து புலால் நாற்றம் கமழும் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிந்து வீடுபேற்றிற்கு உரிய வழியைக் காட்டி மற்றவர் நீக்கும் நஞ்சுண்டு நீல கண்டராய், எலும்புக்கூட்டினை அணிந்த வேடத்தை உடைய தலைவராய், அடியார்களுடைய அடிமைப் பணியினை உகப்பவராய் மனக்கண் முன் அடியவர்க்குக் காட்சி வழங்குகின்றார்.
பாடல் எண் : 08
இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்
இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும்
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலும்
தூத் தூய திருமேனித் தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் இந்திர பதவியைத் தக்கவருக்கு மகிழ்வோடு ஈந்து, தேவர்கள் வந்து வழிபடும் தலைவராய் அழகிய நீறு பூசி, மிகவும் தூய திருமேனியை உடைய தலைவராய், அடியவர்கள் உள்ளத்தே தம் திருவைந்தெழுத்தை நிலையாக அமைத்து வாசுகியைத் தம் மலைவில்லின் நாணாக வில்லினை வளைத்து இணைத்து, அழகிய நிலைபெற்ற அணியாகுமாறு விடம் உண்டு நீலகண்டராய் நம்மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார்.
பாடல் எண் : 09
பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்
பிறவி இறவி இலாதார் போலும்
முண்டத்து முக்கண் உடையார் போலும்
முழுநீறு பூசும் முதல்வர் போலும்
கண்டத்து இறையே கறுத்தார் போலும்
காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
எல்லா உடம்புகளையும் பாதுகாக்கும் தலைவரான திருவாரூர்ப் பெருமானார் பிறப்பு இறப்பு அற்றவராய், நெற்றியில் மூன்றாவது கண்ணை உடையவராய், உடல் முழுதும் நீறு பூசும் தலைவராய்க் கழுத்து சிறிதே கறுத்தவராய்க் காளத்தி, குடந்தை, நாகை என்ற காரோணப்பதிகள் ஆகியவற்றை உகந்தருளியிருப்பவராய் அண்டத்துப் புறத்தும் உள்ளவராய் நம் மனக்கண் முன் காட்சி வழங்குகிறார்.
பாடல் எண் : 10
ஒரு காலத்து ஒன்றாகி நின்றார் போலும்
ஊழிபல கண்டு இருந்தார் போலும்
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும்
பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
உகப்பார் மனத்து என்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை அஞ்சல் என்பார்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
அணி ஆரூர்த் திருமூலத்தானப் பெருமான் ஒரு காலத்தில் தாம் ஒருவரேயாகிப் பல ஊழிக் காலங்களையும் கண்டு, கங்கையைப் பெருகாதபடி சடையில் கொண்டு தவிர்த்து, பிறப்பு துயரம் சாக்காடு என்பன இல்லாதவராய், உருகாத மனத்தவர் உள்ளத்தில் உகந்து தங்காதவராய், தம்மை விரும்புவர் உள்ளத்தை என்றும் நீங்காதவராய் அருகில் வந்து எனக்கு அஞ்சேல் என்று அருள் செய்பவர் ஆவர்.
பாடல் எண் : 11
நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
கொன்றாகிக் கொன்றது ஒன்று உண்டார் போலும்
கோள் அரக்கர்கோன் தலைகள் குறைத்தார் போலும்
சென்றார் திரிபுரங்கள் எய்தார் போலும்
திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
பாடல் விளக்கம்:
அணி ஆரூர்த் திருமூலட்டானப் பெருமானார் நல்ல ஒழுக்க நெறிகளை நூல்கள் வாயிலாக அறிவித்து ஞானப்பெருங்கடற்கு உரிமை உடைய தலைவராய், வேள்வியில் கொல்லப்பட்டதனை வேள்வி செய்யும் அடியவர் உகப்பிற்காக நுகர்பவராய், இராவணன் தலைகள் பத்தினையும் நசுக்கியவராய்ப் பகைவருடைய திரிபுரங்களை அம்பு எய்து அழித்தவராய்த் திசைகளிலும் திசைகளில் உள்ள பொருள்களிலும் பரவியவராய், ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயினும் அடியார் உகப்பிற்காக ஆயிரம் திருநாமங்களை உடையவராய், அடியவர்கள் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றார்.
நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக