இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஏழாம் திருமுறை 51 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஏழாம் திருமுறை 51 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து மகிழ்வுற்றிருக்கும் நாள்களில், தமிழ்ப்பொதியமலைப் பிறந்த கொழுந்தென்றல் அணைய, திருவாரூர் வீதி விடங்கப் பெருமானது வசந்த விழாவை நினைவு கூர்ந்து புற்றிடகொண்டிருந்தாரை ஈங்கு நான் மறந்தேன் என்று மிக அழிந்து அவரை நினைந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.
பாடல் எண் : 01
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன்
பொத்தின நோயது இதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தனை மாமணி தன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
பாவியும், மூடனும் ஆகிய யான், என் அன்பையும், அடிமையையும் விட்டொழியும் படி, முத்தும், சிறந்த மாணிக்கமும், வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இவ்விடத்திற்றானே இருப்பேன்! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்து கொண்டேன் ஆதலின் இங்கு இரேன், விரையச் சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 02
ஐவணமாம் பகழி உடை அடல் மதனன் பொடியாகச்
செவ்வணமாம் திருநயனம் விழி செய்த சிவமூர்த்தி
மையணவும் கண்டத்து வளர்சடை எம் ஆரமுதை
எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
ஐந்து வகையான அம்புகளைப் பெற்ற, வெற்றியையுடைய மன்மதன் சாம்பலாகுமாறு, செந்நிறமான அழகிய நெற்றிக் கண்ணைத் திறந்த சிவமூர்த்தியாகிய, கருமை பொருந்திய கண்டத்தையும், நீண்ட சடையினையும் உடைய, எங்கள் அரிய அமுதம் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து, நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன், விரையச்சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 03
சங்கலக்கும் தடங்கடல் வாய் விடம் சுட வந்து அமரர் தொழ
அங்கலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை
இங்கலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
வருத்துதலைச் செய்கின்ற உடலிற்பட்டு இவ்வுலகிற் பிறந்த அறிவில்லேனாகிய யான், தேவர், சங்குகள் விளங்குகின்ற பெரிய கடலிடத்துத் தோன்றிய ஆலகால விடம் தம்மைச் சுடுகையினாலே அடைக்கலமாக வந்து வணங்க, அப்பொழுதே அவரது துன்பத்தை நீக்கி, அவ்விடத்தை உண்டு, அவரை விரும்பிக் காத்த பெரியோனாகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து, எவ்விடத்து இறத்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன், விரையச் சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 04
இங்ஙனம் வந்து இடர்ப் பிறவிப் பிறந்து அயர்வேன் அயராமே
அங்ஙனம் வந்து எனை ஆண்ட அரு மருந்து என் ஆரமுதை
வெங்கனல் மா மேனியனை மான் மருவும் கையானை
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
இவ்வுலகில் வந்து, துன்பத்தைத் தருகின்ற பிறப்பிற் பிறந்து மயங்குவேனாகிய யான், அங்ஙனம் மயங்காதவாறு நான் பிறந்திருந்த ஊரிற்றானே வந்து என்னை அடிமையாக்கிக் கொண்ட அரிய மருந்தும், அமுதும் போல்பவனும், வெம்மையான நெருப்புப் போலும் சிறந்த திருமேனியை உடையவனும், மான் பொருந்திய கையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து, நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன், விரையச் சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 05
செப்பரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு அரிய
அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
நீக்குதற்கரிய வினையையுடையேனாகிய யான், சொல்லுதற்கரிய பெருமையையுடைய, "பிரமதேவனும், திருமாலும்" என்னும் அவர்தாமும் நினைத்தற்கும், காண்பதற்கும் அரிய அத்தன்மைத்தாய பெரிய செல்வமாய் உள்ளவனும், பிறர் ஒருவரது குணமும் நிகர்த்தல் இல்லாத அருட்குணங்களையுடையவனும், பிறர் ஒருவரும் தனக்கு நிகரில்லாதவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை நினைத்தலும், அடைதலும் இன்றிப் பிரிந்து, எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன், விரையச் சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 06
வன்னாக நாண்வரைவில் அங்கி கணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து
தென்னாகப் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
வலிய பாம்பு நாணியும், மலை வில்லும், திருமால் அம்பும், அங்கியங் கடவுள் அம்பின் முனையுமாகத் தன் மார்பிற் பொருந்த வலித்து முப்புரத்தை எரித்த தன்மையை உடையவனாகிய எனது திருவாரூர் இறைவனை முன்பே நினைந்து போக முயலாத மூடனேனாகிய யான், அவனைப் பிரிந்து, என்னாவதற்கு இவ்வுடலைச் சுமந்து இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன், விரையச் சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 07
வன்சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி தனை
மின்செயும் வார்சடையானை விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
பின்னிடாத வெற்றியையுடையவனாய்த் தன் அடியவன் மேல் வந்த கூற்றுவனை அவனது மார்பு பிளக்கும் படி வெற்றி பொருந்திய தனது திருவடியால் முன்பு உதைத்து, பின்பு எழுப்பிய மூர்த்தியும், மின்னலினது ஒளியை உண்டாக்குகின்ற நீண்ட சடையையும், விடையையும் உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து, நான், என் செய்வதற்கு இவ் விடத்திற்றானே இருப்பேன்! இரேன், விரையச் சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 08
முன்னெறி வானவர் கூடித் தொழுது ஏத்தும் முழுமுதலை
அந்நெறியை அமரர் தொழும் நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர் குலக் கொழுந்தை மறந்து இங்ஙனம் நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
பிற உயிர்கட்கு அவை செல்லுமாறு நிற்கும் நெறியாய் உள்ள பிரமனும், மாயோனும் கூடி வணங்கிப் போற்றுகின்ற முழுமுதற் பொருளானவனும், அப்பொருளை அடையும் நெறியாய் உள்ளவனும், ஏனைய தேவரும் வணங்கும் தலைவனும், எல்லாத் தேவருள்ளும் சிறந்த தேவனும், தன் அடியார்களுக்குச் செவ்விய நெறியாய் விளங்குபவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து மறந்து, நான், எதனை அறிந்து அனுபவித்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன், விரையச் சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 09
கற்றுளவான் கனியாய கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப் பெரிது அடியேன் கை அகன்றிட்டு
எற்று உளனாய்ப் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
மெய்ந்நூல்களைக் கற்று நினைக்குமிடத்துச் சிறந்த கனிபோல இனிக்கின்ற, கண்ணையுடைய நெற்றியையுடையவனும், என் உள்ளத்தில் நிரம்பப் பொருந்தியுள்ளவனாகிய ஒப்பற்றவனும், முன்பு இருவராகிய மாலும் அயனும் நினைந்து நன்கு போற்றப் பெற்ற பெருமையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை, அவன் அடியேனாகிய யான் எனது ஒழுக்கத்தைப் பெரிதும் நீங்கிப் பிரிந்து, எதன் பொருட்டு இறவாது உள்ளேனாய், இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன், விரையச் சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 10
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழையொண்கண் பரவையைத் தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
ஏழிசைகளைப் போன்றும், அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும், இனிய அமுதத்தைப் போன்றும் இன்பத்தைத் தந்து, அதன் மேல் என்னுடைய தோழனும் ஆகி, யான் செய்யும் குற்றங்களுக்கு உடன் பட்டு, மாவடுவின் வகிர் போலும், ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமை கொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை, அறிவில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ! இரேன், விரையச் சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 11
வங்கமலி கடல் நஞ்சை வானவர்கள் தாம் உய்ய
நுங்கி அமுது அவர்க்கு அருளி நொய்யேனைப் பொருள் படுத்துச்
சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
பாடல் விளக்கம்:
தேவர்கள் பிழைத்தற்பொருட்டு, மரக்கலங்கள் நிறைந்த கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் உண்டு, அமுதத்தை அவர்கட்கு அருளினவனும், சிறியேனை ஒரு பொருளாக வைத்து என் வேண்டுகோளுக்கு இரங்கி, என்னைச் சங்கிலியோடு கூட்டுவித்த மெய்ப்பொருளாய் உள்ளவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பொய்யனாகிய யான் எங்கு இறப்பதற்குப் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன், விரையச் சென்று அவனை வணங்குவேன்.
பாடல் எண் : 12
பேரூரு மதகரியின் உரியானைப் பெரியவர் தம்
சீரூருந் திருவாரூர்ச் சிவனடியே திறம் விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அகலிடத்தில்
ஊர் ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே.
பாடல் விளக்கம்:
செயற்கரிய செய்த பெரியார் தம் புகழ்மிக்கு விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திருவடியைச் சென்று சேரும் திறத்தையே விரும்பி, புகழ் மிகுந்த மதயானையின் தோலையுடைய அவனை, அவன் அடித்தொண்டனாகிய, இவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப் பாடல்களைப் பாடவல்லவர், உலகர் எல்லார்க்கும் மேலானவராவர்.
நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக