வெள்ளி, 22 மே, 2015

திருமயிலாடுதுறை திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : மயூரநாதர்

இறைவியார் திருப்பெயர் : அபயாம்பிகை, அஞ்சல் நாயகி

திருமுறை : முதல் திருமுறை 38 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்




பாடல் எண் : 01
கரவு இன்றி நன்மாமலர் கொண்டே
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வரமா மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சிற் கரவின்றி மணம் மிக்க சிறந்த மலர்கள் பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு, தலை மாலை பொருந்தும் செஞ்சடை உடைய சிவபெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். வள்ளன்மையுடையான் உகந்தருளும் இடமுமாம்.


பாடல் எண் : 02
உர வெங்கரியின் உரி போர்த்த
பரமன் உறையும் பதியென்பர்
குரவம் சுரபுன்னையும் வன்னி
மருவும் மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬:
வலிமை பொருந்திய கொடிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி, குராமரம், சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் செறிந்த திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 03
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்
ஞானப் பொருள் கொண்டு அடி பேணும் 
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு
ஆன மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬:
இப்பிறப்பில் நமக்குள்ள குறைபாடாகிய ஆணவம் என்னும் இருள் நம்மை விட்டு நீங்க வேண்டில், ஞானப்பொருளாய் உள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்குங்கள். தேனை ஒத்து இனியனாய் விளங்கும் அப்பெருமான் தனக்குச் சேர்வான மயிலாடுதுறையில் விரும்பி உறைகிறான்.


பாடல் எண் : 04
அஞ்சொண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல்
துஞ்சும் பிணி ஆயினதானே.

பாடல் விளக்கம்‬:
ஐம்பொறிகளைப் பற்றும் ஒள்ளிய புலன்களாகிய அவைகளைக் கெடுத்த பெருவீரனாகிய சிவபெருமான் எழுந்தருளிய மயிலாடுதுறையை மனம் ஒன்றி நினைந்து வழிபட எழுவார் மேல் வரும் பிறவி முதலாகிய பிணிகள் அழிந்தொழியும்.


பாடல் எண் : 05
தணியார் மதி செஞ்சடையான் தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும்
பிணியாயின தீர்த்து அருள் செய்யும்
மணியான் மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬:
குளிர்ந்த பிறைமதியை அணிந்துள்ள சிவந்த சடை முடியை உடையவனாகிய சிவபெருமானை அணுகியவருக்கு என்றும் அருள் உளதாம். பிணி முதலானவற்றைப் போக்கி அருள்புரியும் மணி போன்றவனாய் அப்பெருமான் மயிலாடுதுறையில் உள்ளான்.


பாடல் எண் : 06
தொண்டர் இசை பாடியும் கூடிக்
கண்டு துதி செய்பவன் ஊராம்
பண்டும் பல வேதியர் ஓத
வண்டார் மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬:
தொண்டர்களாயுள்ளவர்கள் கூடி இசை பாடியும், தரிசித்தும் துதிக்கும் சிவபெருமானது ஊர் முற்காலத்தும் இக்காலத்தும் வேதியர்கள் வேதங்களை ஓதித்துதிக்க, வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த மயிலாடுதுறையாகும்.


பாடல் எண் : 07
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து
இணங்கி அருள் செய்தவன் ஊராம் 
நுணங்கும் புரிநூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬:
உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று வீற்றிருந்து அருள் புரிபவன் ஊர், முப்புரி நூல் துவளும் அந்தணர்கள் கூடி வணங்கும் திருமயிலாடுதுறை ஆகும்.


பாடல் எண் : 08
சிரம் கையினில் ஏந்தி இரந்த
பரங்கொள் பரமேட்டி வரையால்
அரங்க அரக்கன் வலி செற்ற
வரங்கொண் மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬:
பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலர் இல்லங்களிலும் சென்று இரந்த மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனை நெரியுமாறு அடர்த்த நன்மையாளனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.


பாடல் எண் : 09
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்
கோலத்து அயனும் அறியாத
சீலத்தவன் ஊர் சிலர் கூடி
மாலைத் தீர் மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬:
உலகை விழுங்கித் தன் வயிற்றகத்தே வைத்த திருமாலும், அழகிய நான்முகனும் அறியாத தூயவனாகிய சிவபெருமானது ஊர், அடியவர் ஒருங்கு கூடி வழிபட்டுத் தம் அறியாமை நீங்கப் பெறும் சிறப்புடைய திருமயிலாடுதுறை ஆகும்.


பாடல் எண் : 10
நின்று உண் சமணும் நெடுந்தேரர்
ஒன்று அறியாமை உயர்ந்த
வென்றி அருள் ஆனவன் ஊராம் 
மன்றல் மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬:
நின்றுண்பவர்களாகிய சமணர்களும் நெடிதுயர்ந்த புத்தர்களும் ஒரு சிறிதும் தன்னை அறியாதவர்களாய் ஒழியத் தான் உயர்ந்த வெற்றி அருள் இவைகளைக் கொண்டுள்ள சிவபெருமானது ஊர் நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை ஆகும்.


பாடல் எண் : 11
நயர் காழியுள் ஞானசம்பந்தன்
மயல்தீர் மயிலாடுதுறைமேல்
செயலால் உரை செய்தன பத்தும்
உயர்வாம் இவை உற்று உணர்வார்க்கே.

பாடல் விளக்கம்‬:
ஞானத்தினால் மேம்பட்டவர் வாழும் சீகாழிப்பதியுள் வாழும் ஞானசம்பந்தன், தன்னை வழிபடுவாரின் மயக்கத்தைத் தீர்த்தருளும் மயிலாடுதுறை இறைவனைப் பற்றித் திருவருள் உணர்த்தும் செயலால் உரைத்தனவாகிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவை பத்தும் உற்றுணர்வார்க்கு உயர்வைத் தரும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக