சனி, 23 மே, 2015

திருமயிலாடுதுறை திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : மயூரநாதர்

இறைவியார் திருப்பெயர் : அபயாம்பிகை, அஞ்சல் நாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 39 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை 
உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர் 
வள்ளல் மா மயிலாடுதுறை உறை 
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.

பாடல் விளக்கம்‬:
மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலும், கங்கை வெள்ளம் தாங்கிய சடையனுமாகிய பெருமானை விரும்பிக் காதல் கொள்ளும் இயல்புடைய திரண்ட வளைகள் பெய்யப்பட்ட இப்பெண் உள்ளத்தால் உள்கி அப்பெருமான் திருப்பெயரையே உரைக்கும் தன்மையள் ஆயினள்.


பாடல் எண் : 02
சித்தம் தேறும் செறிவளை சிக்கெனும்
பச்சை தீரும் என் பைங்கொடி பால்மதி 
வைத்த மா மயிலாடுதுறை அரன் 
கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே.

பாடல் விளக்கம்‬:
சடையின்கண் வெண்பிறை வைத்த பெருமை பொருந்திய மயிலாடுதுறைத் தலத்து இறைவனது கொத்தாகப் பொலியும் கொன்றை மலரினைக் கொடுத்தால் தன் சித்தம் தெளிந்து, உடல் பூரித்து வளைகளைச் செறிப்பாள் என் பைங்கொடியாகிய இவள் தன் பச்சை வண்ணமும் நீங்கிப் பழைய நிறம் பெறுவாள்.


பாடல் எண் : 03
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன் 
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.

பாடல் விளக்கம்‬:
வண்டுகள் சேர்ந்த மயிலாடுதுறைத் தலத்து இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார் திருப்பாதங்களைச் சூடிச் செறிந்து கொண்டால், தேவ உலக வாழ்வும், தேவர்களது பதவி இன்பங்களும் கண்டு வீற்றிருக்கும் கருத்து எமக்குச் சிறிதும் இல்லை.


பாடல் எண் : 04
வெஞ்சினக் கடுங் காலன் விரைகிலான்
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை 
அஞ்சலாள் உமைபங்கன் அருளிலே.

பாடல் விளக்கம்‬:
பெருவீரம் உடையானும், பெருமைக்குரிய மயிலாடுதுறையில் உறையும் அழகிய சொல்லை உடையானாகிய உமைபங்கனும் ஆகிய பெருமான் அருளினால் வெவ்விய சினத்தை உடையனாய் விரைந்து வரும் காலன் நம்மிடம் விரைய மாட்டான்; அஞ்சத்தகுவனவாகிய இறப்பும் பிறப்பும் அறுக்கலாம்.


பாடல் எண் : 05
குறைவு இலோம் கொடு மானுட வாழ்க்கையால்- 
கறை நிலாவிய கண்டனெண் தோளினன்
மறைவலான் மயிலாடுதுறை உறை 
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே.

பாடல் விளக்கம்‬:
திருநீலகண்டனும், எட்டுத் தோளினனும், வேதம் வல்லவனுமாகிய மயிலாடுதுறை உறையும் இறைவன் நீண்ட கழல்களை ஏத்தி இருந்தால், கொடிய மானிட வாழ்க்கையால் வருகின்ற குறைவு சிறிதும் இல்லாதவராவோம்.


பாடல் எண் : 06
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
கலைகள் ஆய வல்லான் கயிலாயநல் 
மலையன் மா மயிலாடுதுறையன் நம் 
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே.

பாடல் விளக்கம்‬:
கலைகளை ஆய வல்லவனும், கயிலாய மலை உடையவனுமாகிய பெருமானின் நிலையை சொல்லும் நெஞ்சமே! பெருமைக்குரிய மயிலாடுதுறை இறைவன் நம்தலையின் மேலும் மனத்துள்ளும் தங்குதற்கு எத்துணைப் பெருந்தவம் நீ செய்துள்ளாய்!.


பாடல் எண் : 07
நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை
ஏற்றினான் நமையாளுடையான் புலன் 
மாற்றினான் மயிலாடுதுறை என்று 
போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே.

பாடல் விளக்கம்‬:
திருநீறணிந்தவனும், நிமிர்தலுற்ற பொலிவுற்ற சடையினனும், விடையாகிய ஏற்றினை உடையவனும், நம்மை ஆளுடையவனும், புலன்களின் நெறியை மாற்றியவனுமாகிய மயிலாடுதுறை என்று போற்றுகின்ற அடியார்கட்குத் துயரம் மிகுந்த இவ்வுலக வாழ்க்கை உண்டோ?.


பாடல் எண் : 08
கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்
நீல மா மயில் ஆடு துறையனே 
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே.

பாடல் விளக்கம்‬:
நீல நிறம் உடைய கரிய மயில்கள் ஆடும் துறையினை உடையவனே! முக்கோலும், தருப்பைப்புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும், தோலும் பூண்டு துயரம் அடைந்து பயன் யாது? நுண்ணுணர்வுடையோர்க்கு நூலும் வேண்டுமோ?.


பாடல் எண் : 09
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி 
மணம் கொளச் சடை வைத்த மறையவன் 
வணங்கும் மா மயிலாடுதுறை அரன்
அணங்கு ஓர்பால் கொண்ட கோலம் அழகிதே.

பாடல் விளக்கம்‬:
படத்தினைக்கொண்டு ஆடுகின்ற அரவனைய அல்குலை உடைய கங்கையை, மணம்கமழும்படி சடையின் கண் வைத்த மறைவடிவானவனும், வணங்கியெழும் மயிலாடுதுறை உறைபவனுமாகிய இறைவன் அம்மையினை ஒருபாகத்தே கொண்டு அருள்செய்யும் திருக்கோலம் மிக அழகியதாகும்.


பாடல் எண் : 10
நீள் நிலா அரவச் சடை நேசனைப் 
பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம்
வாள்நிலா மயிலாடுதுறைதனைக் 
காணிலார்க்கும் கடுந் துயர் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
நீண்ட நிலவினையும், அரவத்தையும் சடையில் விரும்பிச் சூடியுள்ளவனைப் பேணாதவர் பேதுறும்படி விலக்கினோம்; ஒளிபொருந்திய மயிலாடுதுறையினைக் காணில், ஆர்க்கும் கடுந்துயரங்கள் இல்லை.


பாடல் எண் : 11
பருத்த தோளும் முடியும் பொடிபட 
இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும் 
வரத்தினான் மயிலாடுதுறை தொழும் 
கரத்தினார் வினைக்கட்டு அறும் காண்மினே.

பாடல் விளக்கம்‬:
இராவணனது பருத்த தோள்களும் முடிகளும் தூளாகுமாறு இருத்தினவனும், அவனது இன்னிசையைக் கேட்டலும் வரம் அருளியவனும் ஆகிய பெருமானை, மயிலாடுதுறையில் தொழும் கரத்தினை உடையவர்கள் வினை, கட்டற்றுப்போகும் காண்பீராக.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக