புதன், 13 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 24

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஆறாம் திருமுறை 31 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
இடர் கெடுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா 
ஈண்டு ஒளிசேர் கங்கைச் சடையா என்றும்
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் 
தூநீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும்
கடல்விடம் அது உண்டு இருண்ட கண்டா என்றும்
கலைமான் மறி ஏந்து கையா என்றும்
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் 
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே, நீ அனைத்துத் துன்பங்களிலும் பெரிய துன்பமான பிறவித்துன்பத்தை நீக்கிக் கொள்ள, ஆசைப்படுவாயாகில், என்னிடம் வா; நான் உனக்கு அதற்குரிய வழியினைக் காட்டுகின்றேன்; மிகுந்த ஒளிவீசும் செஞ்சடையில் கங்கையை அணிந்தவனே என்றும், ஞான ஒளியாய் அனைவரது உள்ளத்திலும் மிளிரும் சோதீ என்றும், திருநீறு அணிந்து ஒளிரும் தோள்களை உடையவனே என்றும், பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் கரிய நிறமடைந்த கழுத்தினை உடையவனே என்றும், மான்கன்றினை ஏந்திய கையனே என்றும், ஆற்றல் மிக்க காளையினை வாகனமாக உடைய இறைவனே என்றும், கிடைத்தற்கு அரிய அமுதமே என்றும், அனைவருக்கும் மூத்தவனே என்றும் ஆரூரனே என்றும் அவனது புகழினையும் ஆற்றலையும் உணர்த்தும் திருநாமங்களை உரத்த குரலில் சொல்லி அவனை பலகாலும் அழைப்பாயாக.


பாடல் எண் : 02
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணம் 
சிந்தித்தே நெஞ்சமே திண்ணமாகப்
பொடியேறு திருமேனி உடையாய் என்றும் 
புரந்தரன் தன் தோள் துணித்த புனிதா என்றும்
அடியேனை ஆளாகக் கொண்டாய் என்றும்
அம்மானே ஆரூர் எம் அரசே என்றும்
கடிநாறு பொழில் கச்சிக் கம்பா என்றும் 
கற்பகமே என்றென்றே கதறா நில்லே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே, உன்னைப் பற்றி இருக்கும் தீவினைகள் திண்ணமாகத் தீர வேண்டும் என்று நீ விரும்பினால், நீ செய்ய வேண்டியதை நான் சொல்கின்றேன், கேட்பாயாக. திருநீறு அணிந்த திருமேனி உடையவனே என்றும், இந்திரனின் தோளைத் துண்டித்த புனிதனே என்றும், அடியேனை ஆளாகக் கொண்டவேனே என்றும், தலைவனே என்றும், ஆரூர் அரசே என்றும், நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சி மாநகரத்தில் உறையும் ஏகம்பனே என்றும், கற்பகமே என்றும் பலமுறை அவனது திருநாமங்களை உரக்கச் சொல்லி அழைப்பாயாக.


பாடல் எண் : 03
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா
நித்தலும் எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
பூமாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் 
சங்கரா சய போற்றி போற்றி என்றும்
அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே, நீ தடுமாற்றம் ஏதும் இன்றி, நிலையான மெய்ப்பொருளை நினைக்கவேண்டும் என்று விரும்பினால் என்னருகில் வா. நான் உனக்கு சொல்வதைக் கேட்டு கடைப்பிடிப்பாயாக. நீ தினமும் பொழுது புலர்வதற்கு முன்னர் எழுந்து நீராடி, உடலில் வெண்ணீறு பூசி, சிவபிரானது திருக்கோயில் புகுந்து, தரையை சுத்தமாக பெருக்கிய, பின்னர் நன்றாக மெழுகி, பூமாலைகள் கட்டி, இறைவனுக்கு அர்ப்பணித்து, அவரைத் தலையால் முழுதுமாக வணங்கி, புகழ்ந்து பாடி, மகிழ்ச்சியுடன் கூத்தும் ஆடி, சங்கரா நீ வெல்க, வாழ்க என்றும் கங்கையைத் தனது செஞ்சடைமேல் வைத்த ஆதிமூலமே என்றும் ஆரூரா என்றும் பலமுறை கூவி அழைப்பாயாக.


பாடல் எண் : 04
புண்ணியமும் நன்னெறியும் ஆவதெல்லாம் 
நெஞ்சமே இது கண்டாய் பொருந்தக் கேள் நீ
நுண்ணிய வெண்ணூல் கிடந்த மார்பா என்றும் 
நுந்தாத ஒண்சுடரே என்றும் நாளும்
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
விரைமலர் மேல் நான்முகனும் மாலும் கூடி
எண்ணரிய திருநாமம் உடையாய் என்றும் 
எழில் ஆரூரா என்றே ஏத்தா நில்லே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே, புண்ணியம் நன்னெறி ஆகியவை என்ன என்று கேட்டாய் அல்லவா, அதற்கு விடை கூறுகின்றேன், கூர்ந்து கேட்பாயாக. நுண்ணிய வெண்ணூல் அணிந்த மார்பினனே, தூண்டுதல் தேவைப்படாத விளக்கே, வானத்தில் உலவும் தேவர்கள், நான்மறைகள், தாமரை மலர் மேல் உறையும் பிரமன், மற்றும் திருமால் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும், அவர்களால் கணக்கிடமுடியாத திருநாமங்கள் உடைய இறைவனே, அழகிய ஆரூர் நகரில் உறையும் இறைவனே என்றும் பலகாலும் நீ  இறைவனைத் துதிப்பாயாக.


பாடல் எண் : 05
இழைத்த நாள் எல்லை கடப்பதென்றால் 
இரவினோடு நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்
பிழைத்தது எல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய்
என்றும் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய்
அணியாரூர் இடம் கொண்ட அழகா என்றும்
குழற்சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே
குற்றமில்லை என் மேல் நான் கூறினேனே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே, உனக்கு குறிக்கப்பட்டுள்ள வாழ்நாள் முடிவதன் முன்னம், நீ பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வேண்டும். அது எவ்வாறு இயலும் என்பதை நான் உனக்கு சொல்லிக் கொடுக்கின்றேன்; இரவும் பகலும் எமது பெருமானைத் துதித்து, வாழ்த்தி, நான் செய்த எல்லாத் தவறுகளையும் பொறுத்து அருளும் பெருமானே என்றும், தலைமுடியை மிகவும் அழகாக பின்னியிருப்பவனே என்றும், நீலகண்டனே என்றும், சுருண்ட சடையை உடைய தலைவனே என்றும், ஆரூரில் உறையும் அழகனே என்றும் பலமுறை அழைத்து கூப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள். உனக்குப் பாதுகாவலாக இருக்கும் நான், நீ என்ன செய்ய வேண்டும் என்பதனை உணர்த்தி விட்டேன். குற்றம் ஏதும் என்மேல் இனி இல்லை. நீ மேற்சொன்னவாறு செயற்படாமல் இருந்தால் குற்றம் உன்னுடையது தான், இதனை உணர்ந்து உடனே செயலில் இறங்குவாயாக.


பாடல் எண் : 06
நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம் 
நினைந்து இருந்தேன் காண் நெஞ்சே நித்தமாகச்
சேப்பிரியா வெல் கொடியினானே என்றும் 
சிவலோக நெறி தந்த சிவனே என்றும்
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப் 
புண்டரிகக் கண்ணானும் போற்றி என்னத்
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும்
திருவாரூரா என்றே சிந்தி நெஞ்சே.

பாடல் விளக்கம்‬:
நமது உயிர்களை மிகவும் பலமாக பிணைத்திருக்கும் பிறப்பு – இறப்புச் சங்கிலியிலிருந்து விடுதலை பெரும் வழியினை, நாம் மிகவும் ஆராய்ந்து, சிந்தித்து அறிந்துள்ளேன். நெஞ்சமே அதனைச் சொல்கின்றேன் கேட்பாயாக. காளையின் உருவம் வரையப்பட்ட வெற்றிக் கொடியை உடையவனே என்றும், சிவலோகம் அடையும் வழியைக் காட்டியவனே என்றும், தாமரை மலரை விட்டுப் பிரியாத நான்முகனும், கருடனின் மேல் உலாவும் தாமரைக் கண்ணனாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு தீப்பிழம்பாய் நின்றவனே என்றும், செல்வம் நிறைந்த திருவாரூர் நகரில் உறையும் இறைவனே என்றும், நெஞ்சமே நீ தினமும் அவனை சிந்திப்பாயாக.


பாடல் எண் : 07
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் 
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்
சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்ற வரும் உறுதுணையும் நீயே என்றும் 
உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும்
புற்றரவக் கச்சு ஆர்த்த புனிதா என்றும் 
பொழில் ஆரூரா என்றே போற்றா நில்லே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே, நான் சொல்வதை கேட்பாயாக, உன்னைப் பற்றியிருக்கும் பாவங்கள் உன்னை விட்டு விலக வேண்டும் என்றால், மேன்மையான கதிக்கு, முக்தி நிலைக்கு, நீ செல்ல வேண்டும் என்றால், உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் வினைகளை வீழ்த்தி அவற்றினின்று விடுதலை அடையவேண்டும் என்று நீ விரும்பினால் நான் சொல்வதைக் கேள். நீ செயலற்று இருப்பதை விட்டு விடு. புற்றில் வாழும் பாம்பினை கச்சாக அணிந்த புனிதனே, சோலைகள் சூழ்ந்த ஆரூர் நகரில் உறையும் இறைவனே என்று சிவபிரானை பலமுறையும் துதித்து, இறைவனே நீ தான் எனக்குத் துணை, நீ தான் எனக்கு உறவு, உன்னைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் பரம்பொருளாக நினைக்க மாட்டேன் என்று கதறுவாயாக.


பாடல் எண் : 08
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக 
வழியாவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதீ என்றும் 
அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும்
துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச் 
சூழும் வலம் செய்து தொண்டு பாடிக்
கதிர் மதி சேர் சென்னியனே கால காலா 
கற்பகமே என்றென்றே கதறா நில்லே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே, நீ உய்வதற்கான நல்ல வழியினை நான் காட்டுகின்றேன்; இதனை மறவாமல் கடைப்பிடிப்பாயாக. தேவர்கள் தலைவனே, அரிய அமுதமே, ஆதியே என்றும், எங்கள் தலைவனே, ஆரூர் ஐயனே என்றும் அவனைப் போற்றி, மலர்களை அவனது திருமேனி மேல் நெருக்கமாக இருக்குமாறு தூவி வணங்கி, அவன் உறையும் கோயிலை வலம் வந்து, திருக்கோயிலில் இறைபணிகள் செய்து, ஒளி வீசும் பிறைச்சந்திரனை சடையில் சூடியவனே என்றும், காலனுக்கும் காலனே என்றும், அடியார்கள் வேண்டியவை அனைத்தும் அளிக்கும் கற்பகமே என்று பலமுறை கதறுவாயாக.


பாடல் எண் : 09
பாசத்தைப் பற்று அறுக்கலாகும் நெஞ்சே 
பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத்து ஒளிவிளக்கே தேவ தேவே 
திருவாரூர்த் திருமூலட்டானா என்றும்
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி 
நித்தலும் சென்றடி மேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் 
எம்பெருமான் என்றென்றே ஏத்தா நில்லே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே, உலகப் பொருட்களின் மீது நீ வைத்துள்ள பாசத்தினை அடியோடு அறுத்து, உலக மாயையில் இருந்து விடுபடுவதற்கான வழியினைச் சொல்லுகின்றேன் நீ கேட்பாயாக; பரஞ்சோதியே, திரிபுரங்களை எரித்து பண்டரங்கக் கூத்து ஆடியவனே, பாவங்களை போக்குபவனே, உலகுக்கு ஒளி தரும் விளக்கே, தேவர்களுக்கெல்லாம் தேவனே, திருவாரூர் திருமூலத்தானது உறையும் இறைவனே என்று அவனது திருநாமங்களை, பலமுறை கூவி, அவன் மீது நீ வைத்துள்ள அன்பினைப் பெருக்கி, தினமும் அவனை தரிசித்து வணங்கி, அவனது சன்னதியில் நின்று அவனையே நினைத்து உருகி, அவனது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, எல்லையில்லா இறைவனது பெருமையின் முன்னர் நமது நிலை மிகவும் தாழ்வானது என்ற உண்மையை புரிந்துகொண்டு, உடல் கூசி, தலை தாழ்த்தி, வானவர்கள் தலைவனே என்றும் எங்களது பெருமானே என்றும் அவனது புகழைப் பாடி நிற்பாயாக.


பாடல் எண் : 10
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் 
புறம் புறமே திரியாதே போது நெஞ்சே
சலம் கொள் சடைமுடி உடைய தலைவா என்றும்
தக்கன் செய் பெருவேள்வி தகர்த்தாய் என்றும்
இலங்கையர்கோன் சிரம் நெரித்த இறைவா என்றும்
எழில் ஆரூர் இடம் கொண்ட எந்தாய் என்றும்
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும்
நாடோறும் நவின்று ஏத்தாய் நன்மையாமே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே, ஐந்து புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு பல இடங்களிலும் திரிந்து பொழுதினை வீணாக கழிக்காதே; எனது அருகில் வா, நான் சொல்வதைக் கேள். கங்கையை, சடையில் தரித்தவனே என்றும், தக்கனது பெரிய வேள்வியினைத் தகர்த்தவனே என்றும், இலங்கை மன்னன் இராவணனது வலிமையை அடக்கி, அவனது தலைகளை நெருக்கியவனே என்றும், அழகிய ஆரூரில் இடம் கொண்டவனே என்றும், நலன்கள் அருளக்கூடிய உனது திருவடியை, எனது (அப்பர் பிரானது) தலை மீது வைத்தவனே என்றும், எந்தாய் என்றும், நீ தினமும் பலமுறை அவனைப் புகழ்ந்தால் உனக்கு பல நன்மைகள் ஏற்படும்.

நமது நெஞ்சத்தினை எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்று பல அறிவுரைகள் நிறைந்த இந்த பதிகத்தினை தினமும் பாராயணம் செய்வது மிகவும் நன்மை தரும்.

நன்றி: திரு ஆதிரை மற்றும் என். வெங்கடேஸ்வரன்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக