இறைவர் திருப்பெயர் : அருள்வள்ளல் நாயகர், உத்வாக நாதசுவாமி, கல்யாண சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : கோகிலாம்பாள், யாழின் மென்மொழியம்மை
திருமுறை : இரண்டாம் திருமுறை 16 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- உமாதேவி ஒரு முறை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே வாக்களித்தார். அதன் பின் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும் போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.
பாடல் எண் : 01
இறைவியார் திருப்பெயர் : கோகிலாம்பாள், யாழின் மென்மொழியம்மை
திருமுறை : இரண்டாம் திருமுறை 16 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- உமாதேவி ஒரு முறை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே வாக்களித்தார். அதன் பின் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும் போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.
உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.
திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தனது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவர் என்பது அனுபவ உண்மையாகும்.
திருமண பிரார்த்தனை விபரம்:- திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் இனிதே கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய் தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய் தீப மேடையில் 5 தீபம் ஏற்றி விட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் தினமும் காலையில் நீராடி விட்டு ஆலயத்தில் வழங்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை பிழிந்து உப்பு சர்க்கரை சேர்க்காமல் நீரில் கலந்து சாப்பிட்டு விட்டு ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.
திருமணம் முடிந்தவுடன், ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை தம்பதி சமேதராய் வந்து ஆலயத்தில் செலுத்தி பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ள வேண்டும். நெய் தீபம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், வாழைப்பழம், சந்தனம், 2 மாலை, 2 தேங்காய் ஆகிய பூஜை சாமான்கள் அனைத்தும் ஆலயத்தின் உள்ளே ஆலய நிர்வாகத்தால் நியாயாமான விலையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
கோவில் அமைப்பு:- கிழக்கு நோக்கியிருக்கும் இவ்வாலயம் இராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் கொடிமர கணபதி காட்சி தருகிறார். அடுத்து முறையே கொடிமரம், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பிறகு 3 நிலை 2வது கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சி தருகிறார். கருவறையின் முன் மண்டபத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இத்தலத்து இறைவி கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தருகிறாள்.
கருவறையின் இடது புறம் நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவ மூர்த்தியான கல்யாண சுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மற்றும் நடராஜர், சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, இராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்னு ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. மன்மதன் சிவபெருமான் மீது தன் மலர்க்கணைகளைத் தொடுத்து அதனால் அவரது நெற்றிக்கண் தீயினால் எரிந்து சாம்பலானான். அதனால் மனம் நொந்து திருந்தி மன்மதன் சிவப்பெருமானை துதிக்க சிவபெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறுபெற வரமருளியது இத்தலத்தில் தான் நிகழ்ந்தது.
இறைவனின் திருமணத்திற்கு மாலைகளாக மாறி வந்த சப்த சாகரங்களும் (ஏழு கடல்களும்) இங்கேயே தங்கித் தீர்த்தமானதாகச் சொல்லப்படுகிறது. சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த தீர்த்தம் கோயிலின் பக்கத்தில் உள்ளது. சோழ மன்னன் கண்டராதித்யனின் மனைவியான செம்பியன் மகாதேவியால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது என்று இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.
இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள திருவேள்விக்குடி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணத்திற்கான வேள்விகள், யாகம் மற்றும் இதர கல்யாண சடங்குகள் நடைபெற்றன.
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது.
பாடல் எண் : 01
அயிலாரும் அம்பு அதனால் புரம் மூன்றெய்து
குயிலாரும் மென்மொழியாள் ஒருகூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே.
பாடல் விளக்கம்:
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழி பேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.
பாடல் எண் : 02
விதியானை விண்ணவர் தாம் தொழுது ஏத்திய
நெதியானை நீள்சடைமேல் நிகழ்வித்த வான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானை பாட வல்லார் வினை பாறுமே.
பாடல் விளக்கம்:
நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.
பாடல் எண் : 03
எய்ப்பானார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய
இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே.
பாடல் விளக்கம்:
வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.
பாடல் எண் : 04
விடையானை மேல் உலகு ஏழும் இப்ரெலாம்
உடையானை ஊழிதோறு ஊழியுளதாய
படையானை பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.
பாடல் விளக்கம்:
விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக் காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசை பாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.
பாடல் எண் : 05
எறியார் பூங்கொன்றையினோடும் இளமத்தம்
வெறியாரும் செஞ்சடையார மிலைந்தானை
மறியாரும் கை உடையானை மணஞ்சேரிச்
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.
பாடல் விளக்கம்:
ஒளிபொருந்திய கொன்றை மலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான் கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.
பாடல் எண் : 06
மொழியானை முன்னொரு நான்மறை ஆறு அங்கம்
பழியாமைப் பண்ணிசையான பகர்வானை
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே.
பாடல் விளக்கம்:
முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.
பாடல் எண் : 07
எண்ணானை எண்ணமர் சீர் இமையோர்கட்குக்
கண்ணானை கண்ணொரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே.
பாடல் விளக்கம்:
யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவன். தம் உள்ளத்தே வைத்துப் போற்றும் புகழ் மிக்க சிவஞானிகட்குக் கண் போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப்பேசுவோர் பெரியோர் ஆவர்.
பாடல் எண் : 08
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை உடையானை
மடுத்தார வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்தாரப் பேண வல்லார் பெரியோர்களே.
பாடல் விளக்கம்:
கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகிய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.
பாடல் எண் : 09
சொல்லானைத் தோற்றம் கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார் நல் மாதவர் ஏத்து மணஞ்சேரி
எல்லாமா எம்பெருமான் கழல் ஏத்துமே.
பாடல் விளக்கம்:
வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப் படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப்பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.
பாடல் எண் : 10
சற்றேயும் தாம் அறிவில் சமண் சாக்கியர்
சொல் தேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே.
பாடல் விளக்கம்:
சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.
பாடல் எண் : 11
கண்ணாரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண்ணார் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க்கு இல்லை பாவமே.
பாடல் விளக்கம்:
கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப்பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக