ஞாயிறு, 24 மே, 2015

திருமயிலாப்பூர் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : கபாலீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : கற்பகவல்லியம்மை

திருமுறை : இரண்டாம் திருமுறை 47 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பூம்பாவைத் திருப்பதிகம்


பாடல் எண் : 01
மட்டிட்ட புன்னை அம்கானல் மடமயிலைக் 
கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு 
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 02
மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் 
கைப் பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் 
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளி நிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன் தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவ முனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 03
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் 
துளக்கில் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் 
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின் போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ.


பாடல் எண் : 04
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக் 
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்
கார் தரு சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றி காணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 05
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் 
கைப் பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் 
தைப்பூசும் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 06
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் 
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமக நாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 07
மலி விழா வீதி மடநல்லார் மாமயிலைக் 
கலி விழாக் கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள்
ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 08
தண்ணார் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
பண்ணார் பதினெண்கணங்கள் தம் அட்டமி நாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 09
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் 
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக் 
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய, மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ?.


பாடல் எண் : 10
உரிஞ்சாய வாழ்க்கை அமண் உடையைப் போர்க்கும் 
இருஞ் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில் 
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான் 
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:
பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ?.


பாடல் எண் : 11
கானமர் சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான் 
தேன்மர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் 
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் 
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.

பாடல் விளக்கம்‬:
மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன் மீது, தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது நலம் புகழ்ந்து பாடிய இப்பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருமயிலாப்பூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

2 கருத்துகள்:

  1. பதிகத்தை பிரித்து தொகுத்த விதமும், எளிமையான தமிழில், அதற்கு விளக்க உரை எழுதிய பாங்கும், மிகவும் நன்று. தொடரட்டும் தங்கள் சேவை காபாலீஸ்வரன் அருளால்.

    பதிலளிநீக்கு