செவ்வாய், 12 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 20

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஆறாம் திருமுறை 27 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


தனது வாழ்க்கையின் கடைப் பகுதியில், அப்பர் பிரான் புகலூர் தலத்தினை அடைந்து அங்கே திருமடம் ஒன்று நிறுவி, திருப்பணிகள் செய்திருந்தார். பல பதிகங்களும் பாடி, இறைத்தொண்டு செய்து வந்த அப்பர் பிரானின் பெருமையை உலகறியச் செய்வதற்காக சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிந்தார். அப்பர் பெருமான் உழவாரம் செய்ய வந்த இடங்களில் பொன்னும் நவமணிகளும் கற்களுடன் கலந்து தரையில் இருந்தன.


பாடல் எண் : 01
பொய்ம்மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு
இல்லையே கிடந்தது தான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண் நல் ஆரூர்த் 
தடங்கடலைத் தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்
எம்மான் தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

பாடல் விளக்கம்:
நிலையில்லாத, அழியக்கூடிய உலகப் பொருட்களாகிய பெரிய கடலில் தடுமாறும் நல்வினை தீவினைகளே, நிலையில்லாத, கடல் போன்று பெரிய உடலினை. நோய் அரித்துத் தின்பதைப் போல் சிதைத்து விடும் வல்லமை படைத்த வினைகளே, நீங்கள் அரிப்பதற்கு உரிய பொருள் ஏதும் என்னிடம் இல்லை. வானோர்களுக்குத் தலைவனாவும், எனக்குத் தலைவனாகவும், சோலைகள் சூழ்ந்ததால் குளிர்ந்து காணப்படும் திருவாரூர் நகரில் உறையும் பெரிய கடல் போன்ற தலைவனாகவும் விளங்கும் சிவபெருமான், தனது அடியார்களைத் தனது திருவடி நீழல் இன்பத்தில் திளைக்குமாறுச் செய்கின்றான்.  நானும் அவனது திருவடிகளைத் தொடர்ந்து துதிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் ஏதும் இடையூறு செய்து நான் அவ்வாறு பணி செய்வதைத் தடுக்காதீர்கள். எனக்கு இடையூறு ஏதேனும் செய்தால் நீங்கள் கெட்டுப்போவீர்கள்.


பாடல் எண் : 02
ஐம்பெரும் பூதங்காள் ஒருவீர் வேண்டிற்று 
ஒருவீர் வேண்டீர் ஈண்டு இவ் அவனி எல்லாம்
உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க்கு 
இல்லையே நுகர் போகம் யானேல் வானோர்
உம்பரும் ஊழியுமாய் உலகு ஏழாகி 
ஒள் ஆரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம் பெருமானாய் நின்ற அரனைக் காண்பேன் 
தடைப் படுவேனாக் கருதித் தருக்கேன் மின்னே.

பாடல் விளக்கம்:
ஐம்பெரும் பூதங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்களின் கலவையாக உள்ள உடலினை, ஐந்து பொறிகளும் தங்கள் வழியில் இழுத்துச் செல்லவேண்டும் என்று ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருக்கின்றன. அந்தக் கருவிகள் உலகமனைத்தையும் தங்கள் வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் படித்தவை. இவ்வாறு சர்வ வல்லமை படைத்த ஐம்பூதங்களும் அவற்றால் இயக்கப்படும் பொறிகளும், நுகரக் கூடிய இன்பங்கள் ஏதும் எனது உடலில் இல்லை. தேவலோகமாகவும், தேவர்களாகவும், ஏழு உலகங்களாகவும், ஊழியாகவும், ஒளி பொருந்திய திருவாரூரில் குளிர்ந்த அமுதமாகவும் இருப்பவன் சிவபெருமான், அத்தகைய தேவர் தலைவனை, வள்ளலை இடையூறு ஏதும் இன்றி எப்பொழுதும் நான் காண்கின்றேன், எனவே ஐம்பூதங்களே, உங்களது பொறியில் அகப்பட்டுக் கொண்டு தடுமாறுவேன், எனது பெருமானாகிய சிவபெருமானைத் தொழுவதில் இடையூறு ஏற்பட வாய்ப்பு அளிப்பேன் என்று நினைத்து கர்வம் கொள்ளாதீர்கள். உங்களது எண்ணம் நிறைவேறாது.


பாடல் எண் : 03
சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச் 
செழுங்கண்ணால் நோக்குமிது ஊக்கம் அன்று
பல்லுருவில் தொழில் பூண்ட பஞ்சபூதப் 
பளகீரும் வசம் அன்றே பாரேல் எல்லாம்
சொல்லுருவிற் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய்த்
தூநயனம் மூன்றாகி ஆண்ட ஆரூர்
நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால்
நமைப்பு உண்ணேன் கமைத்து நீர் நடமின்களே.

பாடல் விளக்கம்:
அரம்பையர்களே, அழியக் கூடிய இந்த மானிட உடலைக் குறியாகக் கொண்டு, உங்களது செழுமையான கண்களால் எனது உடலினைக் காணும் உமது செயல் நல்ல ஒழுக்கம் ஆகாது. பல விதமான மாய உருவங்களில் காணப்படும் பஞ்சபூதங்களால் உண்டான உலகம் உமது வசத்தில் இருப்பது உமக்கு போதாதா? ஐம்பூதங்கள் என்று சொல்லக்கூடிய ஐந்து பொருட்களில் ஒன்றாகிய தீயின், வடிவாக உள்ள மூன்று சுடர்களாகத் (சூரியன், சந்திரன், அக்னி) திகழ்பவனும்; பிரமன், திருமால், உருத்திரன் என்று மூன்று உருவங்களுமாகத் திகழ்பவனும் மூன்று கண்கள் உடையவனும் ஆகிய, நல்ல உருவத்தினை உடைய சிவபெருமானின் திருவடியை, நான் எப்போதும் துதித்துக் கொண்டு இருப்பேன். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களது முயற்சியால் எனது உறுதி, சிவபெருமானைத் தொழுவதில் நான் கொண்டுள்ள உறுதியான நிலை நலிவடையாது; நான் எனது நிலையிலிருந்து மாறமாட்டேன். உங்களது வலையில் வீழாமலும் உங்களுக்கு இணங்காமலும் இருக்கும் என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். எனவே நீங்கள் என்னிடமிருந்து அகன்று சென்று வேறு எங்கேனும் சென்று உங்களது முயற்சியினை மேற்கொள்ளலாம்.


பாடல் எண் : 04
உன்னுருவிற் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து
உறுப்பினது குறிப்பாகும் அமைவீர் நுங்கள்
மன்னுருவத்து இயற்கைகளால் வைப்பீர்க்கு ஐயோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கு எழிலாம் சிவக்கொழுந்தைப் புகுந்து என் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத் 
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.

பாடல் விளக்கம்:
மனிதர்கள் விரும்பும் உடலில், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐந்து தன்மாத்திரைகளாக இருந்து வாய், கண், மெய், செவி, மூக்கு ஆகிய ஐம்பொறிகளையும் ஆட்டுவிப்பீர்களே, உங்களது மயக்கத்திற்கு இந்த பரந்த உலகே ஆட்பட்டு உள்ளதே, அது போதாதா உங்களுக்கு? ஏன் என்னிடம் வந்து என்னையும் ஆட்கொள்ள முயற்சி செய்கின்றீர்கள்?. வானோர்களுக்கு அழகிய உருவினைத் தந்தவனும், அழகான ஆரூர் நகரத்தில் மலை போன்று இருப்பவனும், தனது உறைவிடமாக பல தலங்களை ஏற்றுக்கொண்டு இந்த பூமிக்கு அழகினைச் சேர்ப்பவனும் ஆகிய சிவக்கொழுந்தை எப்போதும் சார்ந்து இருப்பேன்; அவன் எனது சிந்தையினுள்ளே புகுந்துள்ளான்; அவனது அழகிய திருவுருவம் எனது நெஞ்சத்தில் நிலையாக உள்ளது; எனவே அரம்பையர்களாகிய உங்களது அழகு என்னைக் கவராது; உமது அழகினில் செருக்கு கொண்டு, என்னை உங்கள் வசப்படுத்தும் முயற்சியில் நீங்கள் என்னை நெருங்காதீர்கள்.


பாடல் எண் : 05
துப்பினை முன் பற்று அறாவிறலே மிக்க 
சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையைப் பாவித்து இவ்வுலகம் எல்லாம் 
உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என் தன்
வைப்பினைப் பொன் மதில் ஆரூர் மணியை வைகல்
மணாளனை எம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச் செப்பி இடைவு அடைவேன் நும்மால்
ஆட்டுணேன் ஓட்டம் தந்தீங்கு அலையேன் மின்னே.

பாடல் விளக்கம்:
நுகர்ச்சிப் பொருட்களை என்றும் நீங்காது இருத்தல் என்ற குணமுடைய மனிதர்களை, மயக்க சூழ்ச்சிகளைச் செய்யும் அரம்பையர்களே, உங்களது புற அழகினைக் காட்டி, நீங்கள் கருதிய செயலை முடிப்பது, உலகெல்லாம் திரியும் உங்களுக்கு மிகவும் எளிதான செயலாக இருக்கலாம். ஆனால் உங்களது அழகினால் மயக்கி, என்னை குறைப்படுத்த உங்களால் முடியாது. எனது சேமிப்பும், அழகிய மதில்களை உடைய திருவாரூரில் வீற்றிருக்கும் மணியும், வைகல் மாடக் கோயில் என்ற தலத்தில் இருக்கும் மணாளனும், வானோர்களின் தலைவனும் ஆகிய, எனது பெருமானை, நான் இடைவிடாமல் புகழ்ந்து பாடுவேன். நான் மற்றவர்கள் போல் உங்களால் ஆட்டுவிக்கப்பட மாட்டேன்; எனவே ஓடி வந்து என்னை வருத்தி என்னை உங்கள் வசமாக்கலாம் என்று எண்ணாதீர்கள்.


பாடல் எண் : 06
பொங்கு மத மானமே ஆர்வச் செற்றக் 
குரோதமே உலோபமே பொறையே நீங்கள்
உங்கள் பெரு மாநிலத்தில் எல்லை எல்லாம் 
உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல்
அங்கமலத்து அயனொடு மாலுமாகி மற்றும் 
அதற்கு அப்பால் ஒன்றாகி அறியவொண்ணா
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை ஆரூர்ச்
செல்வனைச் சேர்வேன் நும்மால் செலுத்து உணேனே.

பாடல் விளக்கம்:
கர்வம், கோபம், கஞ்சத்தனம், துன்பச் சுமைகள், காமம் ஆகியவற்றுக்கு இடமாகத் திரியும் அரம்பையர்களே, இந்த உலகத்தின் எல்லை வரை அனைத்து இடங்களிலும் திரியும் குணம் கொண்டவர்களே, நீங்கள் கருதிய செயலை (என்னை மயக்கி உங்கள் வசப்படுத்தும்  செயல்), உங்களால் முடிப்பது அரிது. தாமரைப் பூவினில் வசிக்கும் பிரமன், மற்றும் திருமால் ஆகிய இருவருமாகி, அவர்கள் இருவரையும் கடந்தவனாகி, எளிதில் அறியமுடியாத, செம்மையான பொன்மலையை ஒத்த சிவபிரானை, திருவாரூரில் உறையும் செல்வனை, நான் சென்று அடைவேன். உங்களின் வசப்பட்டு நீங்கள் நினைக்கும் செயல்களை நான் செய்யமாட்டேன்.


பாடல் எண் : 07
இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை 
வெறுப்பே என்றே அனைவீரும் உலகை ஓடிக்
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள்
குறி நின்றது அமையாதே யானேல் வானோர்
அடையார் தம் புரம் மூன்றும் எரி செய்தானை 
அமர்கள் தம் பெருமானை அரனை ஆரூர்
உடையானைக் கடுகச் சென்று அடைவேன் நும்மால்
ஆட்டுணேன் ஓட்டம் தந்தீங்கு அலையேன் மின்னே.

பாடல் விளக்கம்:
இடர் தரும் பாவம், மிக்க துயரம் தரும் வேட்கை, வெறுப்பு ஆகிய குணங்களை அடுத்தவர் கொள்ளுமாறு உலகைச் சுற்றி வரும் அரம்பையர்களே, நீங்கள் பின்னும் மாயவலையால் உலகத்தவரை அமைதியாக இருக்கவொட்டாமல் வருத்துகின்றீர்களே, இது போதாதா? ஏன் என் மீதும் உங்களது மாய வலையினை வீசுகின்றீர்கள்? வானோர்களின் பகைவராக இருந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றினையும் எரித்த எம் சிவபெருமானை, அரனை, ஆரூரினைத் தனது உறைவிடமாகக் கொண்டுள்ள தலைவனை, நான் விரைந்து சென்று அடைவேன். நான் மற்றவர்கள் போல் உங்களால் ஆட்டுவிக்கப்பட மாட்டேன்; எனவே ஓடி வந்து என்னை வருத்தி என்னை உங்கள் வசமாக்கலாம் என்று எண்ணாதீர்கள்.


பாடல் எண் : 08
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
வெருட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரைந்து ஓடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்கு
இல்லையே நுகர் போகம் யானேல் வானோர்
கரைந்தோட வரு நஞ்சை அமுது செய்த 
கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவாரூரில்     
பரஞ்சோதி தனிக் காண்பேன் படேன் நும் பண்பில்
பரிந்தோடி ஓட்டந்து பகட்டன் மின்னே.

பாடல் விளக்கம்:
ஆட்பட்டவரை விரைந்து ஆட்கொள்ளும் திறமை படைத்த வறுமை, செல்வம், சினம், வெறுப்பு ஆகிய குணங்களே, நீங்கள் அனைவரும் கூடி இந்த உலகத்தை அரித்துத் தின்பதால் பெற்ற இன்பம் உங்களுக்கு போதவில்லையா? ஏன் என்னை ஆட்கொள்ள முயற்சி செய்கின்றீர்கள்? பாற்கடலில் இருந்து எழுந்த நஞ்சின் வெம்மை தாள முடியாமல், தேவர்கள் அனைவரும், ஓலமிட்டு ஓடியபோது, அவர்களைப் காப்பதற்காக அந்த நஞ்சினை உண்ட சிவபெருமானை, தேவர்கள் சிவபெருமான் தங்களை காக்கவேண்டும் என்ற நினைத்தபோதே அந்த கணத்தில் நஞ்சினை அருந்தி, நினைத்ததை அளிக்கும் கற்பகமரம் போன்று செயல்பட்ட தலைவனை, எனது உயிரினும் மேம்பட்ட பொருளை, திருவாரூரில் உள்ள மேன்மையான சோதி வடிவத்தானை காண்பவன் நான். எனவே உங்களது திறமையான வலையில் நான் சிக்கமாட்டேன்; நீங்கள் விரைந்து ஓடி வந்து என்னை அடைந்து என்னை அச்சுறுத்த முயற்சி ஏதும் செய்யாதீர்கள்.


பாடல் எண் : 09
மூள்வாய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச 
முகரி காண் முழுதும் இவ்வுலகை ஓடி
நாள் வாயு நும்முடைய மம்மர் ஆணை 
நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர்      
நீள் வான முகடதனைத் தாங்கி நின்ற 
நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்
ஆள்வானைக் கடுகச் சென்று அடைவேன் நும்மால்
ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன் மின்னே.

பாடல் விளக்கம்:
தங்களது செய்கையால் உயிர் அடையும் வேதனைகளை பொருட்படுத்தாமல், தத்தம் தொழில்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள ஐம்பொறிகளாகிய வஞ்சகக் காக்கைகளே, நாள்தோறும் உலகெங்கும் திரிந்து உலகத்தவரை மயக்கும் உங்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லையா? உலகினையும், பல கோள்களையும் அவைகளுக்கு உரிய பாதையில் வைத்து, ஒரு நெறிமுறையில் அவைகளைச் சுழலச் செய்யும் பரம்பொருளை, ஆரூர் ஆண்டவனை நான் விரைந்து சென்று அடைவேன். நான் மற்றவர்கள் போல் உங்களால் ஆட்டுவிக்கப்பட மாட்டேன்; எனவே ஓடி வந்து என்னை வருத்தி என்னை உங்கள் வசமாக்கலாம் என்று எண்ணாதீர்கள்.


பாடல் எண் : 10
சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித் 
துப்பறை என்று அனைவீர் இவ்வுலகை ஓடிச்
செருக்கி மிகை செலுத்தி உம செய்கை வைகல்
செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க
தருக்கி மிக வரையெடுத்த அரக்கன் ஆகந் 
தளர அடி எடுத்து அவன் தன் பாடல் கேட்டு
இரக்கம் எழுந்து அருளிய எம் பெருமான் பாதத்து
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே. 

பாடல் விளக்கம்:
ஐம்பொறிகளே, செல்வர் வறியவர் என்ற பேதம் பார்க்காமல், மிகவும் செருக்குடன், அனைவரையும் உங்கள் வசப்படுத்தி தினமும் இந்த உலகில் உள்ளோரை ஆண்டு கொண்டு இருக்கின்றீர்கள். இது போதாதா? தனது வலிமையால் மிகவும் செருக்குற்று, கயிலாய மலையினை எடுத்த அரக்கனது உடல் தளருமாறு, அவனை மலையின் கீழ் அழுத்திய சிவபெருமான், பின்னர் அவனது பாடல் கேட்டு இரக்கம் கொண்டு பல வகையிலும் அருள் புரிந்தார். அத்தகைய பெருமானின் திருவடிகளில் சேர்ந்துள்ளேன்; அந்த திருவடிகளை விட்டு அகலாத நிலையில் உள்ளேன். அரம்பையர்களே என்னை நீங்கள் துன்புறுத்த முயன்றால் நீங்கள் அழிந்து போவீர்கள்; எனவே அகன்று செல்லுங்கள்.

தங்களது வஞ்சனையான செயல்கள் எந்த பயனும் அளிக்காத நிலையில், தனது நிலையில் பிறழாமல் இருந்த அப்பர் பிரானை வணங்கிய தேவ மங்கையர்கள் வேறு ஒன்றும் செய்ய இயலாமல், அந்த இடத்தை விட்டு அகன்றனர். கைதவம், சூழ்ச்சி. முதலில் அப்பர் பிரானின் அருகில் வந்து அவரைத் தழுவ முற்பட்டவர்கள், இப்போது அருகில் வந்து அவரை வணங்கி, அவரை வேண்டியபடியே அகன்றனர் என்று சேக்கிழார் கூறுகின்றார், பேதமிலா ஓருணர்வில் நின்ற பெரியவர் என்று அப்பர் பிரான், தனது நிலையிலிருந்து மாறுபடாது இருந்தமை இங்கே உணர்த்தப்படுகின்றது.

புகலூரில் அருளப்பட்ட பதிகம் என்றாலும், திருவாரூர் தலத்தின் பெயரும் திருவாரூர்ப் பெருமானைப் பற்றிய குறிப்பும் ஒவ்வொரு பாடலிலும் வருவதால், திருவாரூருக்கு உரிய பதிகமாக கருதப்படுகின்றது. பொன்னாசை மற்றும் பெண்ணாசை கடந்த முனிவராக அப்பர் பிரான் திகழ்ந்ததை நாம் இங்கே காண முடிகின்றது.

நன்றி: திரு ஆதிரை மற்றும் என். வெங்கடேஸ்வரன்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக