இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஏழாம் திருமுறை 95 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஏழாம் திருமுறை 95 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்துருத்தியிலிருந்து திருவாரூருக்கு எழுந்தருளி, பரவையுண்மண்டளிப் பெருமானைப் பணிந்து, "தூவாயா" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி, பின்னர் திருமூலட்டானரை வழிபட அர்த்தயாம வழிபாட்டிற்குச் செல்லும் பொழுது, அன்பர்கள் எதிரணையக்கண்டு அயலார் வினவுவது போல, "குருகுபாய" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி, திருத்தேவாசிரியன் முன் வணங்கி, கோபுரத்தைக் கைதொழுது, உள்புகுந்து, பூங்கோயிலை வணங்கி, அவனியில் வீழ்ந்து எழுந்து தொழுது, "ஆழ்ந்த துயர்க்கடலிடை நின்றடியேனை எடுத்தருளிக் கண்தாரும்" எனத் தாழ்ந்து, திருமூலட்டானம் சேர்பிஞ்ஞகனைக் கண்களாற் பருகுதற்கு, 'மற்றைக்கண் தாரீர்' என வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். இதில் பாடல் தோறும் 'வாழ்ந்து போதீர்' என்று கூறியுள்ள தோழமை கருதத்தக்கது.
பாடல் எண் : 01
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே, உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே, உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி, அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள், தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது, மூண்டெரியாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல, மனத்தினுள்ளே வெதும்பி, தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறிய நின்று. பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது, அதனை, உம்பால் வந்து வாய் திறந்து சொல்வார்களாயின், நீர் அதனைக் கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர் ; இஃதே நும் இயல்பாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.
பாடல் எண் : 02
விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
அடிகளே, நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர், ஏனெனில், யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன், உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட்பட்டேன், பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை, இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர், எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர்? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர். எனக்குப் பழியொன்றில்லை, பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத் தர உடன் படாவிடின் நீரே இனிது வாழ்ந்து போமின்.
பாடல் எண் : 03
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல
என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற, சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக்கன்றுகள் போல, நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன் பெறுகின்ற அடியார்கள், பலநாள் பாடிய பின்னும் தங்கள் கண் காணப்பெறாது, குன்றின் மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.
பாடல் எண் : 04
துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத்துறை ஆள்வீர்
இருக்கை திருவாரூரே உடையீர் மனமே என வேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து, மறுமைப் பணித்தால் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே, நீர் இன்னும், "திருத்துருத்தி, திருப்பழனம்" என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர், திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர், ஆதலின் உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா, அதனால் உம்பால் அன்பு மிக்க அடியார்கள், தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால், நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து, மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.
பாடல் எண் : 05
செந்தண் பவளம் திகழும் சோலை இதுவோ திருவாரூர்
எம்தம் அடிகேள் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
எங்கள் தலைவரே, இது, செவ்விய தண்ணிய பவளம் போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையையுடைய திருவாரூர் தானோ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன், உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன், இதுதானோ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள், தங்கள் கண் காணப்பெறாது, உம்பால் வந்து, "எம்பெருமானே முறையோ" என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால், நீரே இனிது வாழ்ந்து போமின்.
பாடல் எண் : 06
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திரளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற, முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த, திரிக்கப்பட்ட புல்லிய சடையையுடையவரே, உம் அடியவர், தாம் பொருளில்லாமையால் இன்றி, தங்கள் கண் காணப்பெறாது வருந்தி, மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதானால், நீரே இனிது வாழ்ந்து போமின்.
பாடல் எண் : 07
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு
மாயம் காட்டி பிறவி காட்டி மறவா மனம் காட்டி
காயம் காட்டி கண் நீர் கொண்டால் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
ஆண் பறவைக் கூட்டம், பெண்பறவைக் கூட்டத்துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றவரே, எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே, உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து, பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி, அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி, உடம்பைக் கொடுத்து, இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால், நீரே இனிது வாழ்ந்து போமின்.
பாடல் எண் : 08
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி
இழியாக் குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
அடிகளே, யாங்கள் இழிவில்லாத உயர்குலத்திலே பிறந்தோம், அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி, நீர், கழியும், கடலும், மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும் சொற்களையுடையேமாய்த் துதிப்போம், அவ்வாறாகலின், எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர், அதனால், உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள், வழியைக் காண மாட்டாது அலைந்து வாழ்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.
பாடல் எண் : 09
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறரெல்லாம்
காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, விரும்பப்பட்டது காயே எனினும், விரும்பிக் கைக் கொண்டால், அது கனியோடொப்பதேயன்றோ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம், பேயோடு நட்புச் செய்யினும், பிரிவு என்பதொன்று துன்பந்தருவதே என்று சொல்லி, அதனைப் பிரிய ஒருப் படார், ஆனால், நீரோ, உமது திருவோலக்கத்தின் நடுவே நாய் போல முறையிட்டுத் திரிந்தாலும், உமக்கு ஆட்பட்டவர்கட்கு, வாய் திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர், இதுவே உமது நட்புத் தன்மையாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.
பாடல் எண் : 10
செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூலட்டானம்மே இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே, இது செருந்தி மரங்கள் தமது மலர்களாகிய செம்பொன்னை மலர்கின்ற திருவாரூர் தானோ? இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும் உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம், உம்பால் வருத்தமுற்று வந்து, ஒரு குறையை வாய் விட்டுச் சொன்னாலும், நீர் வாய்திறவாதிருப்பிராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்.
பாடல் எண் : 11
காரூர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்
பாரூர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்து போதீரே.
பாடல் விளக்கம்:
பல நூல்களும் ஆகி, கருமை மிக்க கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய, திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப் பொருந்திய தனங்களையுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்டவரே, இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய, நீர், உமது திருவடிப் பெயரைப்பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர், அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர், இனி நீர் இனிது வாழ்ந்து போமின்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| --- திருவாரூர் திருமுறை பதிகங்கள் முற்றிற்று --- ||
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக