திங்கள், 18 மே, 2015

திருக்கடம்பூர் திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : அமிர்தகடேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : சோதி மின்னம்மை, வித்யுஜோதி நாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 20 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்
குருவதாய குழகன் உறைவிடம்
பருவரால் குதிகொள்ளும் பழனம் சூழ் 
கருவதாம் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
ஒருவராய், இருவராய், மூவராய் நிற்பவனும் குரு வடிவுமாகிய குழகன் உறைவிடம், பருத்தவரால் மீன்கள் குதித்தலைக் கொள்ளும் பழனங்கள் சூழ்ந்த இடமாகிய கடம்பூர்க் கரக்கோயிலே.


பாடல் எண் : 02
வன்னி மத்தம் வளர் இளந்திங்களோர் 
கன்னி யாளைக் கதிர் முடி வைத்தவன் 
பொன்னின் மல்கு புணர்முலையாளொடும் 
மன்னினான் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
வன்னியும், ஊமத்த மலரும், வளர் இளந்திங்களும், கங்கையும் ஆகியவற்றைக் கதிர் விரிக்கும் முடியில் வைத்தவன், பொன்னின் நிறைந்து புணர்முலையாளாகிய உமாதேவியோடும் கடம்பூர்க் கரக்கோயிலில் நிலைபெற்றவன் ஆவன். ( எல்லாம் வல்ல முதல்வன் உயிர்களுக்குப் போகம் உதவுதற்குப் போகியாய் இருந்தருள்கின்றான் என்பது கருத்து.)


பாடல் எண் : 03
இல்லக் கோலமும் இந்த இளமையும் 
அல்லல் கோலம் அறுத்துய வல்லிரே
ஒல்லைச் சென்று அடையும் கடம்பூர் நகர்ச் 
செல்வக் கோயில் திருக்கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
இல்லத்திற்கொள்ளும் கோலங்களும், இந்த இளமையுமாகிய அல்லற் கோலங்களை அறுத்து உய்ய வல்லமை உடையீராவீர், அதற்குக் கடம்பூர் நகர்ச் செல்வக் கோயிலாகிய கரக்கோயிலை விரைந்து சென்று அடைந்து தொழுவீர்களாக.


பாடல் எண் : 04
வேறு சிந்தை இலாதவர் தீவினை 
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் 
ஆறு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
தம்மைப்பற்றியன்றி வேறு சிந்தனை இல்லாதவர்களது தீவினைகளைக் கூறு செய்யும் குழகன் உறைவிடம், செல்வம் ஏறுகின்ற தேவர்கள் தொழுகின்ற ஆறு சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்.


பாடல் எண் : 05
திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
இடப்பாகத்தே பார்வதியைக் கொண்டதன்றி, திங்கள் பொருந்திய செஞ்சடை மேலும் ஒரு மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம், மணல் நிறைந்த பகுதியில் புன்னையும், புலிநகக் கொன்றையும், தென்னையும் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்.


பாடல் எண் : 06
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம் 
எல்லையான பிரானார் இருப்பிடம்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
வளம் பொருந்திய உலகத்து வாழும் உயிர்கட்கெல்லாம் எல்லையாகிய தலைவர் இருப்பிடம், முல்லை, கொழுத்த மல்லிகை ஆகிய நல்ல மலர்கள் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்.


பாடல் எண் : 07
தளரும் வாள் அரவத்தொடு தண்மதி 
வளரும் பொன்சடையார்க்கு இடமாவது 
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்
களரியார் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
நெகிழும் இயல்புடைய ஒளிபொருந்திய அரவத்தொடு, தண்மதி வளர்கின்ற பொன்னிறம் உடைய சடையார்க்கு இடமாவது, கிளர்கின்ற பேரொலி உடைய கின்னரம் பாட்டறாத களர் நிலத்தைச் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்.


பாடல் எண் : 08
உற்றாராய் உறவாகி உயிர்க்கெலாம்
பெற்றாராய பிரானார் உறைவிடம் 
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்
கற்றார் சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
உற்றாராய், உறவாகி உயிர்க்கெலாம் ஈன்றாராகிய தலைவர் அறிவிற் குறைபாடுடைய முப்புராதிகளின் எயில்களை எய்த முதல்வனார் உறைவிடம் கற்றார்கள், வாழும் கடம்பூர்க் கரக்கோயிலாகும்.


பாடல் எண் : 09
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கெலாம் 
உள்ளமாய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
திருநீறணிந்த மேனியவர்க்கெல்லாம் உள்ளத்தில் விளங்கும் தலைவனும் வெண்பிறை சூடிய சென்னியானும் ஆகிய பெருமான் உறைவிடம் கடம்பூரில் உள்ள கள்வன் சேர்ந்த கரக்கோயிலாகும்.


பாடல் எண் : 10
பரப்புநீர் இலங்கைக்கு இறைவன் அவன் 
உரத்தினால் அடுக்கல் எடுக்கல் உற
இரக்கம் இன்றி இறை விரலால் தலை 
அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே.

பாடல் விளக்கம்‬:
நீர்ப் பரப்புச் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனாகிய இராவணன் தன் ஆற்றலினால் திருக்கயிலையை எடுக்கத் தொடங்க இரக்கமின்றிச் சிறிது விரலாற்றலையினை அரக்கினவன் இடம் கடம்பூர்க் கரக்கோயிலாகும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கடம்பூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக