வியாழன், 21 மே, 2015

அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் மயிலாடுதுறை

இறைவர் திருப்பெயர் : மயூரநாதர்

இறைவியார் திருப்பெயர் : அபயாம்பிகை, அஞ்சல் நாயகி

பதிகம் : திருஞானசம்பந்தர் - 2, திருநாவுக்கரசர் - 1


தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும்; மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும்; இதனால் இத்தலம் "கௌரி மாயூரம்" என்றும் பெயர் பெற்றது.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது. 

பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும். 


சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. 

சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றனர்.

ஒருமுறை கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியின் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். 

தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக் கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

மறுநாள் கார்த்திகை மாதத்தின் முதல் நாள் "முடவன் முழுக்கு" என்று கொண்டாடப்படுகிறது. துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது. முடவனுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை, "முடவன் முழுக்கு" என்கின்றனர்.

துலா மாதத்தின் கடைமுக நாளான கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் உறுதியுடன் மாயூரம் நோக்கி வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் நீராடல் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.

கோவில் அமைப்பு:- இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. கிழக்கிலுள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உட்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. 

இராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் திருக்குளமும், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகமும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது. இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார்.

நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததின் பொருட்டு அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே சன்னிதி உள்ளது. தம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், அது மட்டுமன்றி "அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்" என்ற வரத்தையும் அவர்களுக்கு ஈசன் அருளினார்.

இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி (குமரக்கட்டளை) மட்டும் தருமையாதீனத்திற்குரியது. பிராகாரத்தில் இடது புறம் குமரக்கட்டளைக்குரிய (தருமையாதீனத்திற்குரிய) ஆஸ்தான மண்டபம் உள்ளது. மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோவில் உள்ளது. இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. 


இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரிய விநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.

கோயில் உட்சுற்றில் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது சிறப்புடையது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தலபுராணம், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார்.

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக