சனி, 16 மே, 2015

திருஓமாம்புலியூர் திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர்   

இறைவியார் திருப்பெயர் : புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை 88 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை 
அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் 
ஏராரும் மதி பொதியும் சடையினானை 
எழுபிறப்பும் எனையாளா உடையான் தன்னை
ஊராரும் படநாகம் ஆட்டுவானை 
உயர் புகழ்சேர் தரும் ஓமாம்புலியூர் மன்னும் 
சீராரும் வடதளி எம்செல்வன் தன்னை 
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.

பாடல் விளக்கம்‬:
கூர்மை பொருந்திய மூவிலை வேலை அங்கையிடத்துக் கொண்டவனும், அலையையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனும், தேவர்கள் புகழும் அழகு நிறைந்த மதியைத் தன்னுட்கொண்ட சடையனும், இனி எனக்கு எழ இருக்கும் பிறப்புக்களிலும் என்னை அடிமையாக உடையவனும், ஊரும் இயல்பினதாகிய படநாகத்தை ஆட்டுபவனும் ஆகி உயர் புகழ் சேரும் ஓமாம்புலியூரிடத்தே நிலைத்து நிற்கும் சிறப்பினை உடைய வடதளியில் விளங்கும் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 02
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா
அமரர் தொழும் கழலானை அமலன் தன்னை
சோதி மதி கலைதொலையத் தக்கன் எச்சன் 
சுடர் இரவி அயிலெயிறு தொலைவித்தானை 
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன்றோம்பும் 
உயர் புகழார் தரும் ஓமாம்புலியூர் மன்னும் 
தீதில் திரு வடதளி எம்செல்வன் தன்னை 
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.

பாடல் விளக்கம்‬:
தன்னின்வேறு பிரித்து அரி என்றும் அயனென்றும் அறிய ஒண்ணாத ஆதியானவனும், தேவர்கள் தொழும் கழலினனும், இயல்பாகவே பாசமில்லாதவனும், ஒளியுமிழும் சந்திரனுடைய கலைகளைத் தொலையச் செய்தவனும், தக்கனையும் எச்சனையும் தக்கவாறு தண்டித்தவனும், ஒளிவீசும் இரவியுடைய கூரிய பற்களைத் தகர்த்தவனும் ஆகி, அந்தணர்கள் வேதங்களை மிக ஓதி மூன்று எரிகளையும் முறையே ஓம்புதலினால் உயர்ந்த புகழைப் பொருந்தும் ஓமாம்புலியூரில் திகழும் தீதில்லாத வடதளியில் மன்னும் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 03
வருமிக்க மதயானை உரித்தான் தன்னை 
வானவர் கோன் தோளனைத்தும் மடிவித்தானை
தருமிக்க குழல் உமையாள் பாகன் தன்னைச்
சங்கரன் எம்பெருமானை தரணி தன்மேல் 
உருமிக்க மணி மாடம் நிலாவு வீதி 
உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் 
திருமிக்க வடதளி எம்செல்வன் தன்னைச்
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.

பாடல் விளக்கம்‬:
எதிர்த்து வரும் மதமிக்க யானையின் தோலை உரித்தவனும், தக்கயாகத்தில் இந்திரனுடைய தோள்களை முற்றிலும் துணித்தவனும், நறுமணத்தைத்தரும் செறிந்த குழல் உமையாளின் பாகனும், சங்கரனும், எம்பெருமானும் ஆகி, பூமியின் மேல் ஒளிமிக்க மணிகளானியன்ற மாடங்கள் நிலவுகின்ற வீதிகளை உடையதும், மேலோர்கள் வாழ்வதும் ஆகிய ஓமாம்புலியூரில் அழகுமிக்க வடதளியில் மன்னும் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 04
அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ 
அழல் விழித்த கண்ணானை அமரர்கோனை
வென்றி மிகு காலனுயிர் பொன்றி வீழ 
விளங்கு திருவடி எடுத்த விகிர்தன் தன்னை
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் 
உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் 
தென்றல் மலி வடதளி எம்செல்வன் தன்னை 
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.

பாடல் விளக்கம்‬:
பகைத்தவர் புரமூன்றும் வெந்து பொடியாமாறு அழல் உண்டாக விழித்த கண்ணினனும், தேவர்கட்குத் தலைவனும், வெற்றியால் மிக்கு விளங்கிய காலன் உயிரிழந்து விழ விளக்கம் மிக்க தன் திருவடியால் உதைத்த விகிர்தனும் ஆகி, புகழ் பொருந்திய அந்தணாளர் நாளும் முத்தீயையும் ஓம்புதலினால் வரும் உயர் புகழையும் நான்மறை முழக்கத்தையும் உடைய ஓமாம்புலியூரில் தென்றற்காற்று மிக்குத் தவழும் வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 05
பாங்குடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்பப்
பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் 
பாங்கிலா நரகதனைத் தொண்டரானார் 
பாராத வகைபண்ண வல்லான் தன்னை
ஓங்கு மதில் புடைதழுவும் எழில் ஓமாம்புலியூர் 
உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் 
தீங்கில் திரு வடதளி எம்செல்வன் தன்னை
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.

பாடல் விளக்கம்‬:
முன்செய்த நன்மையுடையனாகிய அழகிய அக்கினி தேவன் அருச்சனை செய்ய விரும்ப அவன் மேல் இரக்கங் கொண்டு அவன் அதனை இயற்ற அருள் செய்த பரமனும், தன் தொண்டரானார், தீங்குடைய நரகினைப் பாராதவாறு பண்ண வல்லவனும் ஆகி, நாற்புறமும் உயர்ந்த மதில் தழுவி நிற்கும் அழகுடைய ஓமாம்புலியூரில் உயர்ந்த புகழினையுடைய அந்தணர்கள் புகழுமாறு பூசையும் விழவும் செவ்வனே நடைபெறுவதால் உலகோர்க்கு என்றும் தீங்கின்றி நிலவும் அழகிய வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 06
அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை 
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல் 
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை 
மணவாள நம்பியை என் மருந்து தன்னைப்
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்கப் 
பொழில் கெழுவு தரும் ஓமாம்புலியூர் நாளும் 
திருந்து திரு வடதளி எம்செல்வன் தன்னை 
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.

பாடல் விளக்கம்‬:
அரிய தவமுடையோர் வணங்க வாழ்த்தும் தலைவனும், தெவிட்டாத இன்னமுதன்னவனும், அடியார்க்கு வரும் துயரங்களை விலக்குபவனும், நங்கை உமையாளின் கணவனாகிய நம்பியும், எனக்கு அமுதும் ஆகி, பயிர் வளர்ச்சிக்குப் பொருத்தமான புனலால் தழுவப்படும் வயலும், உயர்ச்சி நிலவும் பொழிலும் பொருந்தி விளங்கும் ஓமாம்புலியூரில் நாளும் நடைபெறுவன திருத்தமுற அமையும் அழகிய வட தளி வாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 07
மலையானை வருமலையொன்று உரிசெய்தானை 
மறையானை மறையாலும் அறிய ஒண்ணாக் 
கலையானை கலையாரும் கையினானைக் 
கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம் 
புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த 
சிலையானை வடதளி எம்செல்வன் தன்னைச்
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையவனும், யானை ஒன்றின் தோலை உரித்தவனும், வேதத்தில் உள்ளவனும், அவ்வேதத்தாலும் அறியப் படாத தன்மையனும், மான் கன்று பொருந்திய திருக்கரத்தினனும், அடியார்களுடைய துயரங்களை நீக்குபவனும், எம்மால் வணங்கப்படும் உத்தமனும், திரிபுரங்களை எரித்த வில்லினனும் ஆகி ஒழுக்கத்தில் தளராத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூரில் வடதளி வாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 08
சேர்ந்து ஓடும் மணிக்கங்கை சூடினானை 
செழுமதியும் பட அரவும் உடன் வைத்தானைச்
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லாத் 
தழல் உருவை தலைமகனை தகை நால்வேதம் 
ஓர்ந்து ஓதிப் பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் 
உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சில் 
சேர்ந்தானை வடதளி எம்செல்வன் தன்னைச்
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.

பாடல் விளக்கம்‬:
மணிகளைக் கொழித்து ஓடும் கங்கையைச் சூடியவனும், அழகிய மதியையும், பட நாகத்தையும உடன் தங்குமாறு வைத்தவனும், அடியடைந்தார்க்கு இனியனும், தன்னொப்பார் பிறரில்லாத தழல் நிறத்தவனும், எல்லார்க்கும் தலைவனும், பெருமை மிக்க நால் வேதங்களையும் ஓதி ஆராய்ந்து அவற்றிலேயே பழகுவார் வாழும் ஓமாம்புலியூர் உள்ளவனும், அடியாருடைய களவில்லா நெஞ்சில் சேர்ந்தவனும் ஆகி வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவ பெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று 


பாடல் எண் : 10
வார்கெழுவு முலையுமையாள் வெருவ அன்று 
மலையெடுத்த வாளரக்கன் தோளும் தாளும் 
ஏர்கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே 
இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர் கோனைப்
பார்கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாடப்
பைம்பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் 
சீர்கெழுவு வடதளி எம்செல்வன் தன்னைச் 
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.

பாடல் விளக்கம்‬:
கச்சணிந்த தனத்தினள் ஆகிய உமையாள் அஞ்சுமாறு அன்று கயிலை மலையைப் பெயர்த்த கொடிய அரக்கனுடைய இருபது தோள்களையும் இருதாள்களையும் அழகிய பத்துத் தலைகளையும் நெரித்துப் பின் அச்சினத்தினின்றும் மீண்டு அவனது இன்னிசையைக் கேட்டு உவந்தவனும், தேவர்களின் தலைவனும் ஆகி, புவிமுழுதும் பரவும் புகழினையுடைய மறையோர் மிக்கு வாழ்கின்றதும் மாடங்கள் நிறைந்ததும், பசிய பொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய ஓமாம்புலியூரில், சிறப்புமிக்க வடதளியில் மன்னும் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண்போக்கினேன்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருஓமாம்புலியூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக