இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஏழாம் திருமுறை 73 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஏழாம் திருமுறை 73 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லையில் கூத்தப்பெருமானை வணங்கியபின் "ஆரூரில் நம்பால் வருக" என்று இறைவன் அருளியது கேட்டுப் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு திருவாரூர் சென்று அங்கு, ஆரூர்ப்பெருமான் ஆணையின்படி அன்பர்கள் எதிர்கொண்டழைத்துச் செல்லும்பொழுது அவர்களை நோக்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். இத்திருப்பதிகம் இறைவர் தம்மை ஆண்டுகொண்டருளும்படி வேண்டுமாறு அடியவரை வேண்டி அருளிச்செய்தது.
பாடல் எண் : 01
கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன்
வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பாடல் விளக்கம்:
தொண்டீர், நிலம், கடல், மலை முதலாய எவ்விடத்திலும், காலை, மாலை முதலிய எப்பொழுதிலும் எம் சொல்லிற் பொருந்தி வருபவனும், ஒப்பற்றவனும், உருத்திர லோகத்தை உடையவனும், மலையின் இளமையான மகளுக்குக் கணவனும், தேவர், அசுரர் முதலிய யாவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும், இத்திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
பாடல் எண் : 02
தனியன் என்று எள்கி அறியேன் தன்னைப் பெரிதும் உகப்பன்
முனிபவர் தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பாடல் விளக்கம்:
தொண்டீர், இனிய பொருள்கள் எல்லாவற்றினும் இனியவனாகிய நம் பெருமானை யான், `தாயும், தந்தையும், பிற சுற்றத்தவரும் இல்லாத தனியன் ` என்று இகழ்ந்தறியேன், அதற்கு மாறாக அவனையே பெரிதும் விரும்புவேன், அவனை வெறுப்பவரை வெறுப்பேன், மனத்தோடன்றி முகத்தான் மட்டும் இனிய பல சொற்களைச் சொல்லேன், அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும், கனிகள் பலவற்றையுடைய சோலையின்கண் காயையுடைய குலைகளை ஈன்ற கமுக மரங்களையுடைய திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
பாடல் எண் : 03
சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான் அருமறை ஆறு அங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பாடல் விளக்கம்:
தொண்டீர், யான் யாதேனும் ஒன்று சொல்வதாயின், எனது பெருமையையன்றி வேறொன்றைச் சொல்லேன். அயலவர்க்கேயன்றி, உறவினர்க்கும் உதவுவேனல்லேன், அத்துணைக் கல்லினும் வலிய மனத்தையுடையேன். கல்வியை நிரம்பக் கற்ற பெரிய புலமை வாழ்க்கை உடையவர்களது துன்பத்தைப் பெரிதும் நீக்குகின்றவனும், அரிய வேதங்களும், ஆறு அங்கங்களும் சொல்லும் முடிந்த பொருளானவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
பாடல் எண் : 04
நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்றுச் செய்து திரிவேன்
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பாடல் விளக்கம்:
தொண்டீர், யான், ஒழுகும் நெறியிலும், பொருள்களை அறிகின்ற அறிவிலும், பிறரோடு இணங்குகின்ற இணக்கத்திலும், சொல்லுகின்ற நீதியிலும் ; மிக்கபொல்லாங்குடையேன், பிறரை வருத்துதலையும், பிரித்தலையும் விரும்புவேன் மற்றும் மனம் வேண்டியதனைச் செய்து திரிவேன், பிறையையும், பாம்பையும், நீரையும் தனது விளக்கமான சிவந்த சடைமேல் வைத்துள்ள இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரேயன்றோ! ஆதலின் அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
பாடல் எண் : 05
நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணையாகேன்
சோதியில் சோதி எம்மான சுண்ண வெண் நீறு அணிந்திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பாடல் விளக்கம்:
தொண்டீர், யான், நீதியினின்றும் சிறிதும் வழுவேன், அவ்வாறு வழுவுதலை முற்றிலும் களைந்து வாழ்வேன், அந்தணர்களை வெறுக்கமாட்டேன் ; வெறுக்கின்றவர்களுக்கும் துணை செய்பவனாகமாட்டேன். ஒளிக்குள் ஒளியாய் உள்ளவனும், எங்கட்கு யானை போல்பவனும், பொடியாகிய வெள்ளிய நீற்றை அணிந்த முதல்வனும் ஆகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
பாடல் எண் : 06
அருத்தம் பெரிதும் உகப்பன் அலவலையேன் அலந்தார்கள்
ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன் உற்றவர்க்குத் துணை அல்லேன்
பொருத்த மேல் ஒன்றும் இலாதேன் புற்று எடுத்திட்டு இடம் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பாடல் விளக்கம்:
தொண்டீர், யான், பொருளையே பெரிதும் விரும்புவேன், அதன் பொருட்டு எங்கும் திரிதலையுடையேன், துன்புற்றவர் ஒருவர்க்கேனும் உதவியுடையேனல்லேன், உறவாயினார்க்கும் துணைவனல்லேன், இன்ன பலவாற்றால், பொருந்துவதாய பண்பு எனிலோ, ஒன்றேனும் இல்லாதேனாயினேன். புற்றைப் படைத்து, அதனை இடமாகக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
பாடல் எண் : 07
சந்தம் பல அறுக்கில்லேன் சார்ந்தவர் தம் அடிச் சாரேன்
முந்திப் பொருவிடை ஏறி மூ உலகும் திரிவானே
கந்தம் கமழ் கொன்றை மாலைக் கண்ணியன் விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பாடல் விளக்கம்:
தொண்டீர், யான், வண்ணங்கள் பலவற்றை அமைத்துப் பாடுதல் மாட்டேன், இறைவனை அடைந்த அடியாரது திருவடிகளை அடையமாட்டேன், மணங்கமழ்கின்ற கொன்றை மலரால் ஆகிய மாலையையும், கண்ணியையும் அணிந்தவனும், தேவர்களால் துதிக்கப்படுபவனுமாகிய எம் தந்தை, போர் செய்கின்ற விடையை ஏறி மூவுலகிலும் முற்பட்டுத் திரிபவனேயாயினும், அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது, திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
பாடல் எண் : 08
நெண்டிக் கொண்டேயும் கிலாய்ப்பன் நிச்சயமே இது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன்
பண்டு அங்கு இலங்கையர் கோனைப் பருவரைக் கீழ் அடர்த்திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பாடல் விளக்கம்:
தொண்டீர், யான், மெய்ப்பொருளையன்றிப் பொய்ப்பொருளைப் பொருளாக நினையேன், அதனால், அம்மெய்ப்பொருளை உணரமாட்டாத முருடர்க்கு முருடான சொற்களை யன்றிச் சொல்லமாட்டேன், வலியச் சென்றும் அவர்களோடு வாதிடுவேன், இஃது எனது துணிபும், தளர்வில்லாத குணமும் ஆகும். முன்பு, இலங்கையர் தலைவனாகிய இராவணனைப் பருத்த கயிலாய மலையின் கீழ் இட்டு நெரித்த கடவுள் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
பாடல் எண் : 09
நமர்பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பேன் தக்க ஆறு ஒன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பாடல் விளக்கம்:
தொண்டீர், யான், இவர் நம்மவர் என்பதும், அயலவர் என்பதும் அறியமாட்டேன், நான் உண்மை என்று கண்டதையே கண்டு பிறர் சொல்வனவற்றை இகழ்ந்து நிற்பேன், ஆரவாரத்தைப் பெரிதும் விரும்புவேன்m தக்க நெறி ஒன்றேனும் இல்லாதேன். முருகனும், திருமாலும், பிரமனும் ஒருங்கு கூடிய தேவர் பலரும் வணங்கும் தேவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
பாடல் எண் : 10
ஆசை பல அறுக்கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன்
பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பாடல் விளக்கம்:
தொண்டீர், எனக்கு உள்ள அவாவோ பல, அவற்றுள் ஒன்றையும் நீக்கமாட்டேன், அவ்வவாவினால் யாவரிடத்தும் வெகுளிதோன்றுதலின், எவரிடத்தும் பகைத்தே பேசுவேன், ஒன்று சொல்லின், பொய்யல்லது சொல்லேன் எனினும் புகழை மிக விரும்புவேன், இவற்றால் மனத்தாலும் குற்றம் புரிதலுடையேன். ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்ட பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
பாடல் எண் : 11
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயும் திறம் வல்லான் திரு மருவும் திரள் தோளான்
மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவல் ஆரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே.
பாடல் விளக்கம்:
வெற்றித் திருப்பொருந்திய திரண்ட தோள்களையுடையவனும், மெல்லென ஒலிக்கும் மத்தளம் முழங்குவதும், வளவிய வயல்களையுடையதும் ஆகிய திருநாவலூரில் தோன்றியவனும் ஆகிய நம்பியாரூரன் எம் தந்தையாகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கும் இடமும் இத்திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ என்று அடியார்களோடு ஆராயும் திறம் வல்லனாய்ப் பாடிய இந்த இசைப் பாடல்களை, அவ்விசையொடும் பாட வல்லவர் புகழ் பெறுவர்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக