வியாழன், 14 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 33

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஏழாம் திருமுறை 83 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள்


சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கச்சியில் இடக்கண் பெற்று, ஏகம்பத் திறைவர் திருக்காட்சி கொடுத்தருளக் கண்டு, திருப்பதிகம் பாடிச் சிலநாள் தங்கியிருந்து, பின் திருவாரூருக்குச் செல்ல விரும்பிக் காஞ்சித் திருநகரைக் கடந்து, "எந்தைபிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது" என்றுபாடிச் சென்றருளியது இத் திருப்பதிகம்.

பாடல் எண் : 01
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி 
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்
சிந்தை பராமரியாத் தென்திரு ஆரூர் புக்கு
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே.

பாடல் விளக்கம்‬:
முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினை வந்து சூழும் முன்னே, என் தந்தைக்கும் தலைவராய் உள்ள இறைவரை, அடியேன், இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் சித்தத்தால் சிந்தித்துக் கொண்டு, அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப் பெறுவது எந்நாளோ.


பாடல் எண் : 02
நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும் 
துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து
தென்றல் மணம் கமழும் தென்திரு ஆரூர் புக்கு
என் தன் மனம் குளிர என்றுகொல் எய்துவதே.

பாடல் விளக்கம்‬:
செய்யப்பட்டு நிற்கின்ற வினைகளது கொடுமைகளெல்லாம் நீங்குமாறு, காலை மாலை இருபொழுதினும், நெருங்கிய மலர்களைத் தூவி, சுற்றிலும் வலமாக வந்து எனது மனம் குளிர்தற்கு, தென்றற் காற்று நறுமணங் கமழ வருகின்ற அழகிய திருவாரூரினுட் சென்று எந்தை பிரானாரை, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ.


பாடல் எண் : 03
முன்னை முதல் பிறவி மூதறியாமையினால் 
பின்னை நினைந்தனவும் பேதுறவும் மொழியச்
செந்நெல் வயல் கழனித் தென்திரு ஆரூர் புக்கு
என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே.

பாடல் விளக்கம்‬:
தொன்று தொட்டு வருகின்ற பிறவிகளில், பெரிய அறியாமை காரணமாக, வருங்காலத்திற் பெற நினைத்த நினைவுகளும், அவற்றால் விளைகின்ற துன்பங்களும் ஒழியுமாறு, செந்நெற்களை விளைவிக்கின்ற, நல்ல வயல்களாகிய கழனிகளையுடைய, அழகிய திருவாரூரினுட் சென்று, எனது உயிருக்கு இனிய அமுதம் போல்பவனை, யான் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ.


பாடல் எண் : 04
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆருயிரைக் 
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்றொழியச்
செல்வ வயல் கழனித் தென்திரு ஆரூர் புக்கு
எல்லை மிதித்து, அடியேன் என்றுகொல் எய்துவதே.

பாடல் விளக்கம்‬:
நல்ல எண்ணம் நீங்குதலால், அரிய உயிர்களை அவை உடம்போடு கூடி வாழும் நாட்களிலே கொல்லுதற்கு எண்ணுகின்ற எண்ணங்களும், மற்றும் பல குற்றங்களும் அடியோடு அகன்றொழியுமாறு, உயர்ந்த நெல் விளைகின்ற வயல்களையுடைய அழகிய திருவாரூரின் எல்லையை மிதித்து, அந்நகரினுட் சென்று, எனது உயிர்க்கு இனிய அமுதம் போல்பவனாகிய இறைவனை, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ.


பாடல் எண் : 05
கடுவரி மாக்கடலுள் காய்ந்தவன் தாதையை முன்
சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்தலை வாய் 
அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர் புக்கு 
இடுபலி கொள்ளியை நான் என்றுகொல் எய்துவதே.

பாடல் விளக்கம்‬:
நஞ்சு போலும் நிறத்தையுடைய மாமரத்தைக் கடலின் நடுவண் அழித்தவனாகிய முருகனுக்குத் தந்தையும், எல்லாவற்றினும் முன்னதாக, சுடப்பட்ட சாம்பலை உடம்பின்கண் பூசிய ஒளிவடிவினனும், கொல்லும் தன்மை வாய்ந்த புலியினது தோலாகிய உடையை உடுத்தவனும், உலகிற்கு முதல்வனும், வலிய தலை ஓட்டின் கண், மகளிர் இடுகின்ற பிச்சையை ஏற்பவனும் ஆகிய எம் பெருமானை, திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ.


பாடல் எண் : 06
சூழொளி நீர் நிலம் தீ தாழ்வளி ஆகாசம்
வாழுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள் 
ஏழிசை ஏழ் நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு
ஏழ் உலகு ஆளியை நான் என்றுகொல் எய்துவதே.

பாடல் விளக்கம்‬:
பல உயிர்களும் வாழ்கின்ற நிலமும், தாழ வீழும் நீரும், ஒளியையுடைய தீயும், யாண்டும் இயங்கும் காற்றும், உயர்ந்துள்ள ஆகாயமும், வெவ்விய கதிர்களையுடையோனாகிய பகலவனும், வளவிய தமிழில் வல்லவர்கள் வகுத்த ஏழிசையாகிய ஏழுநரம் பின் ஓசையும் என்னும் இவை எல்லாமாய் நிற்பவனும், ஏழுலகமாகிய இவைகளைத் தன் வழிப்படுத்து ஆள்பவனும் ஆகிய எம் பெருமானை, திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ. 


பாடல் எண் : 07
கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமரர் 
செம்பொனை நன்மணியைத் தென்திரு ஆரூர் புக்கு
என்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே.

பாடல் விளக்கம்‬:
இளங்கொம்புபோலும் நுண்ணிய இடையினையுடைய உமையது கூற்றினையுடையவனும், திரு நீறாகிய நறுமணப் பூச்சினை அணிந்தவனும், எல்லா உயிர்கட்கும் சேமநிதிபோல்பவனும் தன்னோடு ஒப்புமையுடைய தேவர்கட்குச் செம்பொன்னும், நவமணியும் போல்பவனும் எனக்கு உரிய பொன்னும் மணியுமாய் இருப்பவனும் ஆகிய எம்பெருமானை, அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ.


பாடல் எண் : 08
ஆறணி நீள் முடிமேல் ஆடு அரவம் சூடிப் 
பாறணி வெண்தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் 
சேறணி தண்கழனித் தென்திரு ஆரூர் புக்கு 
கேறணி எம் இறையை என்றுகொல் எய்துவதே.

பாடல் விளக்கம்‬:
கங்கையைத் தாங்கிய நீண்ட சடையின் மேல், பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைச் சூடுகின்றவனும் பருந்து சூழும் வெள்ளிய தலை ஓட்டில் பிச்சை ஏற்பவனும், நஞ்சினையுடைய பாம்பை அணிபவனும் ஆகிய இடபக் கொடியைக் கொண்ட எம் பெருமானை, சேற்றைக் கொண்ட குளிர்ந்த கழனிகளையுடைய அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ.


பாடல் எண் : 09
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் 
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும் 
திண்ணிய மாமதில் சூழ் தென்திரு ஆரூர் புக்கு
எண்ணிய கண் குளிர என்றுகொல் எய்துவதே.

பாடல் விளக்கம்‬:
மண்ணுலகத்தை உண்டு உமிழ்ந்த திருமாலும், சிறந்த தாமரை மலர்மேல் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அணுகுதற்கரிய இறைவனை, இறைவியோடும் மறவாது நினைக்கு மாறும் கண்டு கண் குளிருமாறும், திண்ணிய, பெரிய மதில் சூழ்ந்த, அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ.


பாடல் எண் : 10
மின்னெடுஞ் செஞ்சடையன் மேவிய ஆரூரை 
நன்நெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன் 
பன்னெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார் 
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே.

பாடல் விளக்கம்‬:
மின்னல் போலும், நீண்ட சிவந்த சடையையுடைய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருவாரூரை, திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன், நல்ல, நெடிய பேரன்பினால், பல, சிறந்த சொற்களாகிய மலர்களால் அணிசெய்து சாத்திய பாமாலைகள் பத்தினையும் அங்ஙனமே சாத்த வல்லவர்கள் புண்ணியம் உடையவர்களாய், பொன்னை முதற் கருவியாக உடைய விண்ணுலகத்தை அடைவார்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக