இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஆறாம் திருமுறை 25 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 01
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : ஆறாம் திருமுறை 25 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 01
உயிராவணம் இருந்து உற்று நோக்கி
உள்ளக் கிழியின் உரு எழுதி
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத் தந்தால்
உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி
அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி
அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
அயிராவணமே என் அம்மானே நின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதரே.
பாடல் விளக்கம்:
அயிராவணம் என்று இரண்டாயிரம் தந்தங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த யானை கயிலையில் இருந்தாலும், அதனை வாகனமாகக் கொள்ளாமல், எளிமையான எருதினை வாகனமாகக் கொண்டு, தேவர்கள் உலகத்தினை ஆளும் திறமையும் வல்லமையும் கொண்டிருந்தாலும், தேவலோகத்தை ஆளாமல், அடியார்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரூர் நகரினை ஆளும் இறைவனே, தங்களது உயிர் மூச்சினை அடக்கி, உன்னை தியானித்து, உனது உருவத்தைத் தங்களது உள்ளத்தில் என்றும் அழியாத வண்ணம் பதித்து, உனக்கு அடிமையாகத் தங்களைக் கருதி, அந்த அடிமை சாசனத்தை உனது கையில் ஒப்படைக்கும் அடியார்களுடன், நீ இணைந்து வாழ்கின்றாய். எவருக்கும் எந்த ஐயமும் ஏற்படாமல் உண்மையான மெய்ப்பொருளாக இருப்பவனே, உன்னால் வழங்கப்பட்ட கண்கள் கொண்டு உன்னைக் காணாதவர்கள், உனது அருளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்லர்.
பாடல் எண் : 02
எழுது கொடியிடையார் ஏழை மென்தோள்
இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டு தான் என்னோடு பகை தான் உண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி
முடியால் உற வணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர் தானே.
பாடல் விளக்கம்:
தீவினைகள் கொண்ட நெஞ்சமே, உனக்கும் எனக்கும் முந்தைய பகை ஏதேனும் உண்டோ? அவ்வாறான பகை ஏதும் இல்லையே. முதுமைக் காலம் அடைந்து, சித்திரத்தில் எழுதப்பட்ட அழகான இடையையும் மெல்லிய தோள்களையும் கொண்ட மாதர்கள், நீ முதுமை அடைந்து விட்டாய் என்று சொல்லி உன்னை இகழ்வதன் முன்னர், நீ பயனுள்ள செயல்களைச் செய்வாயாக. முதுமை அடைந்த போது உன்னால் பயனுள்ள செயல்களைச் செய்ய முடியாமல் நேரலாம். உலகில் உள்ள தேவர்கள் எல்லோரும் கூடி, தங்களது தலையால் முழுமையாக வணங்கி, அழுது அரற்றி வழிபடுமாறு, சிவபெருமான் திருவாரூரில் கோயில் கொண்டுள்ளான். நீ அவனை நினையாது வேறு எதனையும் நினைத்து பழுதுபட்டு போகாதே.
பாடல் எண் : 03
தேரூரார் மாவூரார் திங்களூரார்
திகழ் புன்சடை முடிமேல் திங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயல்
கண்ணார்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலாம் ஒப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்
அமரர்கள் தம் பெருமானே எங்குற்றாயே.
பாடல் விளக்கம்:
தேரூர், மாவூர், திங்களூர் ஆகிய தலங்களில் உறையும் இறைவனே, ஒளி திகழும் செஞ்சடை மேல் திங்கள் சூடியவனே, நீர்வளம் நிறைந்த வயல்களும், கண்களுக்கு அழகாக காட்சி தரும் நெடிய மாடங்களும் நிறைந்த பல தலங்களில் நீ உறைகின்றாய். நீ உண்மையில் எங்கே இருக்கின்றாய் என்று உலகில் உள்ளவர்கள் எல்லாம் ஒவ்வொரு ஊராகச் சென்று, உமையாள் மணவாளா என்றும் ஆரூரா ஆரூரா என்றும் உன்னை வாழ்த்தித் தேடுகின்றார்கள். அவர்களுக்கு காட்சி கொடுக்காமல் நீ எங்கே உள்ளாய்?.
பாடல் எண் : 04
கோவணமோ தோலோ உடையாவது
கொல்லேறோ வேழமோ ஊர்வது தான்
பூவணமோ புறம்பயமோ அன்றாயிற்றான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையோ
தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்
திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மானார் தாம்
அறியேன் மற்று ஊராம் ஆரூர் தானே.
பாடல் விளக்கம்:
தலைவராகிய பெருமான் உடுப்பது கோவணமோ தோலோ? ஊர்வது காளையோ, யானையோ? அவர் இருக்குமிடம் பூவணமோ புறம்பயமோ? அவர் பொருந்தாதார் வாழ்க்கையாகிய ஐயமேற்றுண்டல் அழகோ அழகன்றோ? தீப்போன்ற செஞ்சடை மேல் பிறை சூடி நான்கு திசைகளையும் தம் இருப்பிடமாகக் கொண்ட செந்நிறத்து எம்பெருமானார் இப்பொழுது இருக்குமிடம் ஒற்றியூரோ ஆரூரோ அறியேன். அவர் திருவுள்ளம் எவ்வெவற்றில் எவ்வாறாகி உள்ளதோ?.
பாடல் எண் : 05
ஏந்து மழுவாளர் இன்னம் பராஅர்
எரி பவள வண்ணர் குடமூக்கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாகமாக
வார்சடையார் வந்து வலஞ்சுழியார்
போந்தார் அடிகள் புறம் பயத்தே
புகலூர்க்கே போயினர் போர் ஏறு ஏறி
ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார்
அண்ணலார் செய்கின்ற கண் மாயமே.
பாடல் விளக்கம்:
மழுப்படையை கையில் ஏந்திய பெருமான் இன்னம்பரில் ஒரு சமயம் இருந்தார்; ஒளி வீசும் பவளத்தின் நிறத்தையும் தீப்பிழம்பின் நிறத்தையும் ஒத்த திருமேனி உடைய பெருமான் மற்றொரு சமயம் குடமூக்கில் (தற்போதைய பெயர் கும்பகோணம்) இருந்தார்; நீண்ட சடையினைக் கொண்டு, வளையல்கள் அணிந்த கைகளை உடைய பார்வதி தேவியை பாகமாகக் கொண்ட பெருமான் ஒரு சமயம் வலஞ்சுழி சென்றார்; பின்னர் புறம்பயத்துக்கும் அதனை அடுத்து புகலூருக்கும் சென்றார்; போரிடும் காளையினை வாகனமாகக் கொண்ட இவர், எந்த தலத்தினை இருப்பிடமாகக் கொள்ளலாம் என்று ஆராய்ந்து முடிவு செய்தவர் போல், இறுதியில் திருவாரூர் வந்து குடிபுகுந்து விட்டார். இவர் இவ்வாறு வருவதும் போவதும் கண்கட்டு வித்தை போல் உள்ளது. எவரும் அறிந்து உணர முடியாத செயல்களாக உள்ளன.
பாடல் எண் : 06
கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து ஒன்றாகி
உருவாகிப் புறப்பட்டு இங்கு ஒருத்தி தன்னால்
வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால்
மருவாகி நின்னடியே மறவேன் அம்மான்
மறித்தொரு கால் பிறப்புண்டேல் மறவா வண்ணம்
திருவாரூர் மணவாளா திருத் தெங்கூராய்
செம்பொனே கம்பனே திகைத்திட்டேனே.
பாடல் விளக்கம்:
கருப்பையில் துளியாய்ப் புகுந்து நெகிழ்ந்த பிண்டமாய் இருந்து தழைத்து மூளையும் கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து ஓர் உருவம் எய்தி இவ்வுலகில் பிறப்பெடுத்துத் தாய் ஒருத்தியால் வளர்க்கப்பட்ட உயிரும் அந்நிலையில் நிலைத்து நில்லாது எந்த நேரத்திலும் உடம்பை விடுத்து நீங்கலாம். ஆதலின் அடியேன் உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றை மறவாமல் இருக்கின்றேன். மீண்டும் அடியேனுக்கு ஒரு பிறவி உண்டாகுமாயின் உன்னை மறவாதிருத்தல் கூடுங்கொல்லோ என்று ஐயுற்றுத் திருவாரூர் மணவாளா! திருத்தெங்கூராய்! செம்பொன் ஏகம்பனே! என்று உன் திருப்பெயர்களைக் கூறியவாறு கலங்குகின்றேன்.
பாடல் எண் : 07
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
பாடல் விளக்கம்:
முன்னம் ஒரு சமயம், ஆரூர் பெருமானது திருநாமத்தைக் கேட்ட தலைவி, அவனது தன்மைகளை பிறர் மூலம் கேட்டு அறிந்தாள்; அவனது இருப்பிடம் ஆரூர் என்பதையும் அறிந்த அவள், அவன் மீது தீராத காதல் கொண்டாள்; தனது பெற்றோர்களை அன்றே மனத்தினால் துறந்த அந்த நங்கை, அவனைப் பற்றிய நினைப்பில் எப்போதும் மூழ்கி இருந்ததால், தான் செய்யும் செயல்களையும் மறந்தாள்; தனது பெயரினையும் மறந்து இறுதியில் தன்னையே மறந்த அந்த நங்கை, அவனது திருவடிகளையே நினைத்து அவனுடன் ஒன்றிவிட்டாள்.
பாடல் எண் : 08
ஆடுவாய் நீ நட்டம் அளவில் குன்றா
அவி அடுவார் அருமறையோர் அறிந்தேன் உன்னைப்
பாடுவார் தும்புருவும் நாரதாதி
பரவுவார் அமரர்களும் அமரர் கோனும்
தேடுவார் திருமாலும் நான்முகனும்
தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும்
கூடுமே நாயடியேன் செய் குற்றேவல்
குறையுண்டே திருவாரூர் குடி கொண்டீர்க்கே.
பாடல் விளக்கம்:
அழகிய நடனம் ஆடித் திருவாரூரில் குடி கொண்டிருக்கும் பெருமானே, உனக்கு குறை ஏதும் இல்லாத வகையில் பலர் உனக்கு திருத்தொண்டு செய்து வருகின்றார்கள். விதித்த நெறிமுறைகள் வழுவாமல், அருமறையோர்கள் உனக்கு தினமும் பூஜை செய்து வழிபடுவதையும், நாரதர் தும்புரு முதலானோர் உன்னைப் புகழ்ந்துப் பாடி வழிபடுவதையும், தேவர்களும், தேவர்கள் தலைவனாகிய இந்திரனும் உன்னைப் புகழ்ந்து வழிபடுவதையும், உன்னை வழிபடுவதற்காக திருமாலும் பிரமனும் தேடுவதையும், உனது அருகில் உன்னைத் தீண்டியபடியே இருந்து உன்னை விட்டு என்றும் நீங்காமல் உன்னை என்றும் துதித்துக் கொண்டு கங்கையும் மலைமகளும் இருப்பதையும், நான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லாம் உமக்குச் செய்யும் பணிவிடைகள் போன்று பெருமை உடையது அல்ல நான் உனக்குச் செய்யும் தொண்டுகள். எனவே நாயினும் கடையேனாகிய நான் செய்யும் இந்த சிறு தொண்டுகள் உனக்கு ஏற்குமா, நான் இதனை அறியமாட்டேன். (இதனையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்).
பாடல் எண் : 09
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும்
உலகமெலாம் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்
அமரர்கள் தம் பெருமானே ஆரூராயே.
பாடல் விளக்கம்:
எப்பொழுதும் வற்றாமல் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் கங்கையைச் சடையில் வைத்தவனே, நெற்றியில் கண் உடையவனே, தேய்ந்து வந்த நிலவின் ஒரு பகுதியைத் தனது சடையில் ஏற்று அருள் செய்தவனே, உன்னை உலகெங்கும் தேடிக் காணாமல் திருமாலும் பிரமனும், உனது இருப்பிடத்தை அறிய ஒற்றர்களின் உதவியையும் நாடியுள்ளார்கள். உன்னைக் காண்பதற்காக அவர்கள், தேர்கள் ஓடும் பரந்த திருவாரூரின் வீதிகளில் வந்து நின்று, ஆரூரா, ஆரூரா, அமரர்கள் தம் பெருமானே என்று அழைக்கின்றார்கள்.
பாடல் எண் : 10
நல்லூரே நன்றாக நட்டமிட்டு
நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலி திரிந்து சேற்றூர் மீதே
பலர் காணத் தலையாலங்காட்டின் ஊடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
இராப் பட்டீச்சரம் கடந்து மணற்கால் புக்கு
எல்லாரும் தளிச்சாத்தங்குடியில் காண
இறைப் பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.
பாடல் விளக்கம்:
நல்லூரில் நன்றாக நடனம் ஆடிய சிவபிரான், பின்னர் தனது வாகனமாகிய வெள்ளை இடபத்தின் மீதேறி, பழையாறை சென்றார்; பின்னர் பல தலங்கள் திரிந்து சேற்றூர் அடைந்த அவர் அனைவரும் காணுமாறு தலையாலங்காடு சென்று சேர்ந்தார்; அங்கிருந்து மிகுந்த விருப்பத்துடன் பெருவேளூர் சென்ற எம்பிரான், பின்னர் பட்டீச்சரம் சென்று இரவில் அங்கே தங்கினார்; மறுநாளில் மணற்கால், தளிச்சாத்தங்குடி என்ற தலங்கள் வழியாக நொடிப்பொழுதில் திருவாரூர் வந்தடைந்தார்.
பாடல் எண் : 11
கருத்துத்திக் கத நாகம் கையில் ஏந்திக்
கருவரை போல் களியானை கதறக் கையால்
உரித்தெடுத்துச் சிவந்த தன் தோல் பொருந்த மூடி
உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்
திருத்துருத்தி திருப்பழனம் திருநெய்த்தானம்
திருவையாறு இடம் கொண்ட செல்வர் இந்நாள்
அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி
அப்பனார் இப்பருவம் ஆரூராரே.
பாடல் விளக்கம்:
கரிய புள்ளிகளைத் தனது படத்தில் கொண்ட, கோப குணம் நிறைந்த பாம்பினை கையில் ஏந்தியவாறே, பார்வதி தேவி அச்சப்படும்படியாக, தன்னை எதிர்த்து வந்த மலை போன்ற பெரிய மதயானையை, கையால் உரித்து அதன் தோலினைத் தனது சிவந்த உடலின் மீது பொருத்தமாக மூடியவரும், ஒளி பொருந்திய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபெருமானார், திருத்துருத்தி, திருப்பழனம், திருநெய்த்தானம், திருவையாறு ஆகிய தலங்களில் உறைபவர். அவர் இப்போது, தசை மடிந்து பிடரியினில் கீற்றுகளைக் கொண்ட வலிமை வாய்ந்த எருதின் மீது ஏறி திருவாரூரில் விருப்பமுடன் வீற்றிருக்கின்றார்.
நன்றி: திரு ஆதிரை மற்றும் என். வெங்கடேஸ்வரன்
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக