சனி, 9 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 14

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை நான்காம் திருமுறை 102 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
வேம்பினைப் பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கித்
தூம்பினைத் தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர்
ஆம்பல் அம்பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழல் கீழ்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட்டு உய்ம்மின்களே.

பாடல் விளக்கம்:
தொண்டர்களே! வேம்பு போன்ற கசப்பான சொற்களையே பேசி, இவ்வூன் உடம்பைப் பாதுகாத்து, வினைகளை மிகுதியாகத் தேடிக்கொண்டு வயிற்றை உணவால் நிரப்பிச் சுற்றத்தவர்களே நமக்கு நிலையான துணைவர்கள் என்றிருக்கின்றீர்களே! ஆம்பற் பூக்கள் நிறைந்த பொய்கைகளை உடைய ஆரூரை உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருவடிகளின் கீழே சாம்பலைப் பூசி வஞ்சனையின்றித் தொண்டுகளைச் செய்து கடைத்தேறுங்கள்.


பாடல் எண் : 02
ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப் பொன் ஆரூர் அகத்து அடக்கிப் 
பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி 
நீரால் திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே.

பாடல் விளக்கம்:
அடியார்களின் அன்புமிக்க நறிய உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருவடித் தொண்டனும் தொண்டர்களுக்குள் உரையாணிப் பொன்போல் மிகச் சிறந்தவனுமாகிய நம்பி நந்தி, தமிழகத்து வேற்றூர்களில் உள்ளவர் எல்லாம் திருவாரூருக்கு வந்து சேரப் பங்குனி உத்திர விழாவினை ஆராய்ந்து முறைப்படி நடத்தினனாய், நீரை வார்த்துத் திருவிளக்குக்களை எரிய விட்ட செய்தியை நீண்ட தமிழ் உலகம் முழுதும் அறியும்.


பாடல் எண் : 03
பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்று இவற்றால் 
ஆம்படி மக்கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டு வரேல் தமிழ் மாலைகளால் 
நாம்படி மக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே.

பாடல் விளக்கம்:
மடநெஞ்சமே! எம்பெருமானுடைய திருமேனிக்கு உரிய ஆபரணங்களைப் பொன்னால் செய்து அணிவிப்பர். அஃது இயலாவிடின் பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தல் என்ற உலகியற்படி அத்திருமேனியைப் பொன் அணிகளால் அழகுறுத்துவது போலப் பூவாலும் அழகு செய்வர். திருவாரூரில் இனிது அமர்ந்த பெருமானார் தம் திருமேனிக்கு அணிகலன்கள் வேண்டுவராயின் நாம் தமிழ்ப் பாமாலைகளால் அவருக்கு அணிகலன்கள் செய்து அணிவித்து அவரை வணங்குவோம்.


பாடல் எண் : 04
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதியணிந்து
முடித் தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி 
பொடிக்கொண்டு பூசிக் புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் 
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே.

பாடல் விளக்கம்:
துள்ளுகின்ற பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றி நிலை கலங்காத பிறையைச்சூடி, மேம்பட்ட தொண்டர்களாகி முனிவர்கள் திருத்தொண்டுகளைச் செய்வதோடன்றி, திருநீற்றைப்பூசி வந்து சேரும் அடியவர்களுடைய திருவடிகளைத் தன் தலைமேல் கொள்ளும் அழகினோடு கீழான தொண்டன் என்று சொல்லிக் கொள்ளும் நம்பி நந்தியும் ஆரூரில் அமுதம் போன்றுள்ள பெருமானுக்குச் சிறப்பான தொண்டுகளைச் செய்யும் அடியவனாக உள்ளான்.


பாடல் எண் : 05
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால் 
இரும்பு பிடித்தவர் இன்பு உறப்பட்டார் இவர்கள் நிற்க
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் 
விரும்பு மனத்தினை "யாது ஒன்று” நான் உன்னை வேண்டுவனே.

பாடல் விளக்கம்:
அரும்புகள் மலரும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் விரும்பி உறையும் பெருமானே! கரும்பினை வில்லாக ஏந்திய மன்மதன் உன்னால் கோபிக்கப்பட்டுச் சாம்பலானான். கோடலியாகிய இரும்பைப் பிடித்துத் தன் தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமன் உன்னால் சண்டீசன் என்ற பதவியளிக்கப்பட்டு மகிழ்விக்கப்பட்டான். நீ மனத்தின்கண் கரும்பை விரும்புகின்றாயா இரும்பை விரும்புகின்றாயா? நீ விரும்பும் பொருள் எப்பொருள் என்று அடியேன் உன்பால் வேண்டுவேன்.


பாடல் எண் : 06
கொடிகொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு
இடிவு இல் பெருஞ் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா 
அடிகளும் ஆரூர் அகத்தினர் ஆயினும் அம் தவளப்
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே.

பாடல் விளக்கம்:
கொடிகளும், மேற்கட்டிகளும், பறை, கவரி, சங்கு, கைவிளக்கு என்பனவும் கொண்டு குறைவற்ற செல்வர் பலர் திருவாரூரை வழிபடுதலுக்கு வந்து சேருவர். ஒரு குறைவும் இல்லாத திருமூலத்தானப் பெருமானாரும் திருவாரூரில் அமர்ந்திருப்பர். எனினும் அழகிய வெண்ணீற்றை அணியும் அடியவர்களுக்கு, நம்பி நந்தியடிகள் ஆரூரகத்தில் இல்லாமல், ஊருக்கு வெளியே செல்வாராயின் திருவாரூரில் ஒளியே இல்லை போலத் தோன்றும்.


இப்பதிகத்தில் 7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.


பாடல் எண் : 10
சங்கு ஒலிப்பித்திடுமின் சிறுகாலைத் தடவழலில்
குங்கிலியப் புகைக்கூட்டு என்றும் காட்டி இருபதுதோள் 
அங்குலம் வைத்தவன் செங்குருதிப்புனல் ஓட அஞ் ஞான்று 
அங்குலி வைத்தான் அடித்தாமரை என்னை ஆண்டனவே.

பாடல் விளக்கம்:
தொண்டர்களே! விடியற்காலையில் தூப மூட்டியில் உள்ள கனல் எரியில் குங்கிலியத்தை இட்டுக் குங்கிலியப் புகைக் கூட்டினை எம் பெருமானுக்குக் காட்டிச் சங்குகளை ஊதுங்கள். தன் இருபது தோள்களையும் கயிலையில் அதனைப் பெயர்ப்பதற்குச் செயற்படுத்தின இராவணனுடைய இரத்தம் ஓடுமாறு தன் கால்விரல் ஒன்றனை அழுத்தி நெரித்தவனுடைய திருவடித் தாமரைகளே அடியேனை அடிமைகொண்டன. அவை நுமக்கும் அருள் செய்யும்.

நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக