வெள்ளி, 22 மே, 2015

திருமயிலாடுதுறை திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : மயூரநாதர்

இறைவியார் திருப்பெயர் : அபயாம்பிகை, அஞ்சல் நாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 70 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய்
கானவரி நீடுழுவை அதளுடைய படர் சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே. 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் பன்றியின் கொம்பும், படமெடுத்து ஆடும் பாம்பும், எலும்பும், வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து, இளைஞராய், காட்டில் வாழும், வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர். படர்ந்து விரிந்த சடையுடைய அச்சிவபெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய இடம், புகழ் மிக்க அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து எழும்புகை, அழகிய தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது அழுக்குப் படப் படியும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 


பாடல் எண் : 02
அந்தண்மதி செஞ்சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகராம்
எம்தம் அடிகட்கு இனிய தானமது வேண்டில் எழிலார் பதியதாம்
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் 
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே. 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த சிவந்த சடையையுடையவர். அச்சடையிலே அழகிய கொன்றை மாலையை அணிந்த அழகரான எம் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இனிய இடம் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலமானது மணம் கமழும் சந்தன மரங்களோடு, கரிய அகில் மரங்களையும் வாரிக் கொண்டு வரும் காவிரியின் அலைகள் தம்மேல் நீர்த்திவலை வீசுவதால், அதனைக் கோபித்து அதற்கு எதிராக, கரையோரத்துச் சோலைகளிலுள்ள குரங்குகள் மலர்களை வீசுகின்ற தன்மையுடன் திகழ்வதாகும். 


பாடல் எண் : 03
தோளின் மிசை வரியரவம் நஞ்சுழல வீக்கி மிகு நோக்கு அரியராய்
மூளை படு வெண்தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடமாம்
பாளை படு பைங்கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே.  

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான், தோளின் மீது வரிகளையுடைய பாம்பு நஞ்சை உமிழுமாறு, அதனை இறுக அணிந்தவர். எண்ணுதற்கு அரியவராய் விளங்குபவர். மூளை நீங்கிய பிரம கபாலத்தில் பலியேற்று உண்டு சுடுகாட்டில் வசிப்பவர். எப்பொருட்கும் முதல்வரான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், காவிரியிலுள்ள வாளைமீ ன்கள் கரையோரங்களிலுள்ள பாளைபொருந்திய பசிய கமுக மரங்களில் பாய, அவை சிவந்த பழங்களை உதிர்க்க, அதனால் பூ இதழ்கள் விரிய நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 04
ஏதம் இலர் அரிய மறை மலையர் மகளாகி இலங்கு நுதல் ஒண்
பேதை தடமார்பு அது இடமாக உறைகின்ற பெருமானது இடமாம்
காதல் மிகு கவ்வையொடு மவ்வலவை கூடி வரு காவிரியுளால்
மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே. 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் எவ்விதக் குற்றமுமில்லாதவர். அரிய வேதங்களை அருளிச் செய்து அவற்றின் பொருளாகவும் விளங்குபவர். மலையரசன் மகளான, ஒளி பொருந்திய வளைந்த நெற்றியையுடைய உமாதேவியின் அகன்ற மார்பு தன் இடப்பகுதியாக உறைகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, ஆரவாரித்து வரும் அலைகள் மூலம் மல்லிகை முதலிய நறுமணமலர்கள் கூடிவரும் காவிரியில் நீராட மாதர்கள் புக, மணமற்ற பொருள்களும் மணம் கமழப்பெறும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 


பாடல் எண் : 05
பூவிரி கதுப்பின் மடமங்கையர் அகம்தொறும் நடந்து பலிதேர்
பாவிரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமையெனலாம்
காவிரி நுரைத்து இருகரைக்கும் மணி சிந்த வரிவண்டு கவர
மாவிரி மதுக்கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே. 

பாடல் விளக்கம்‬:
மலர்ந்த பூக்களைக் கூந்தலில் சூடியுள்ள, தாருகாவனத்து முனிபத்தினிகளின் இல்லங்கள்தோறும் சென்று பிச்சையெடுத்துப் பண்ணோடு கூடிய பாடல்களை இசைக்கும் சிவபெருமான் மிகப் பழமையானவர். காவிரியின் அலைகள் இரு கரைகளிலுமுள்ள சோலைகளில் இரத்தினங்களைச் சிதற, அதனால் அஞ்சி மந்திகள் குதிக்க, மரக்கிளைகளில் மோதி, மாமரத்தில் கட்டப்பட்ட தேன்கூடுகள் கிழியத் தேன் சிந்த, அதனை வண்டுகள் கவர்ந்துண்ணும் வளமிக்க திருமயிலாடுதுறையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 06
கடந்திகழ் கருங்களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய்
விடந்திகழும் மூவிலை நல்வேல் உடைய வேதியர் விரும்பும் இடமாம்
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதிமிகு தொண்டை எழில் கொண்ட துவர்வாய்
மடந்தையர் குடைந்த புனல் வாசமிக நாறும் மயிலாடுதுறையே. 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் மதம் பொருந்திய கரிய யானையின் தோலை உரித்து உமாதேவி அஞ்சுமாறு போர்த்திக் கொண்டவர். மனத்தால் எண்ணுதற்கு அரியவர். பகைவர்கட்குக் கேடு விளைவிக்கும் மூவிலைச் சூலம் கொண்டவர். வேதங்களை அருளிச் செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர். அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது ஒளிர்கின்ற மேனியும், கொவ்வைப் பழம் போல் அழகிய சிவந்த வாயும் கொண்ட தேவமகளிர் நீரைக் குடைந்து ஆடுவதால் நீர் நறுமணம் கமழும் சிறப்புடைய திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 07
அவ்வ திசையாரும் அடியாரும் உளராக அருள் செய்து அவர்கள் மேல்
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடமாம்
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே. 

பாடல் விளக்கம்‬:
அந்தந்தத் திக்குகளிலுள்ள எல்லா அடியவர்களும் நல்ல வண்ணம் வாழும் பொருட்டு அருள்செய்து, அவர்களுடைய வினைகள் நீங்க நாள்தோறும் இரங்கித் தீயேந்தி ஆடுகின்ற எம் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஆரவாரத்தோடு வரும் காவிரி - மணமிக்க மல்லிகை, மாதவி முதலான மலர்களைத் தள்ளிவர நறுமணம் கமழும் அதன் தென்கரையிலுள்ள திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 


பாடல் எண் : 08
இலங்கை நகர் மன்னன் முடி ஒருபதினொடு இருபது தோள் நெரிய விரலால்
விலங்கலில் அடர்த்து அருள் புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல்
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே.

பாடல் விளக்கம்‬:
இலங்கை மன்னனான இராவணனின் பத்து முடிகளையும், இருபது தோள்களையும் நெரியும்படி தன்காற் பெருவிரலைக் கயிலை மலையில் ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள்புரிந்தவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், கலங்கலோடு நுரையைத் தள்ளி, எதிரேயுள்ள குளத்தில் பாய்ந்து அங்குள்ள மணமிக்க மலர்களை அடித்துக் கொண்டு களிப்புடன் சுழித்து வருகின்ற காவிரியாறு பாய்வதால் வளமிக்க திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 09
ஒண்திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால்
அண்டமுற அங்கி உருவாகி மிக நீண்ட அரனாரது இடமாம்
கெண்டையிரை கொண்டு கெளிறார் உடன் இருந்து கிளர்வாய் அறுதல் சேர்
வண்டல் மணல் கெண்டி மடநாரை விளையாடும் மயிலாடுதுறையே.  

பாடல் விளக்கம்‬:
மிகுந்த வலிமையுடைய பிரமனும், திருமாலும் தேடியும் உணரமுடியாவண்ணம், ஆகாயம் வரை அளாவி நெருப்புப் பிழம்பாய் நீண்டு நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, கெண்டை மீனை இரையாக உண்டு, கெளிறு, ஆரல் முதலிய மீன்கள் விளங்குகின்ற ஆற்றின் கரையிலுள்ள நாரை, தண்ணீர் அறுத்தலால் உண்டான வண்டல் மண்ணைக் கிளறி விளையாடும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 


பாடல் எண் : 10
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற மிக்க திறலோன்
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழிலார்
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ்பூ
வண்டவை கிளைக்க, மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே. 

பாடல் விளக்கம்‬:
துடுக்காகப் பேசுகின்ற சமணர்களும், புத்தர்களும் பழித்துக் கூற, அவர்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட ஆற்றலுடையவனும், இண்டை மாலை சூடிய சடைமுடி உடையவனுமான எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, தெள்ளிய அலைகள் உடன் பாயும் காவிரியாற்றின் தென்கரையில் மணமிக்க பூக்களில் வண்டுகள் மூழ்கியுண்ண, தேன் வெளிப்பட்டு ஒழுகுகின்ற சோலைகளையுடைய அழகிய திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 


பாடல் எண் : 11
நிணந்தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்க்
கணந்தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையைப்
புணர்ந்த தமிழ்பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்னுலகமே. 

பாடல் விளக்கம்‬:
இறந்தார் உடலின் கொழுப்புப் பொருந்திய சுடு காட்டில், பூவுலகிலும், வானுலகிலும் உள்ள வீரர் எவரையும் பொருட்படுத்தாத சிறப்புடைய சூலப்படையோடு, பேய்க் கூட்டங்கள் தொழ, பிரம கபாலத்தை ஏந்தியுள்ள சிவபெருமானின் திருவடிகளை வணங்கி மிக்க அன்புடன், நறுமணமும், குளிர்ச்சியும் பொருந்திய சீகாழியில் அவதரித்த வேதங்களின் உட்பொருளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன், திருமயிலாடுதுறையைப் போற்றிப் பாடிய இத் தமிழ்ப்பாக்கள் பத்தினையும் இசையோடு பாடுகிறவர்கள் சொர்க்கலோகம் அடைவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக