செவ்வாய், 7 ஜூலை, 2015

திருப்பரங்குன்றம் திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : பரங்கிரிநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஆவுடைநாயகி

திருமுறை : முதல் திருமுறை 100 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


தல வரலாறு :
பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு+பரம்+குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

சுமார் 1050 அடி உயரமுள்ள மலை அடிவாரத்தில் வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் இந்த அழகுமிக்க குடைவரைக் கோவில் சிவபெருமானுக்காகவே தோற்றுவிக்கப்பட்டு ஒரு பாடல் பெற்ற தலமாக இருந்தாலும், இத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்ற காரணத்தினால் மிகவும் புகழுடன் விளங்குகிறது. மதுரையில் இருந்து மேற்கே சுமார் 8 கி.மி. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 150 அடி உயரமுள்ள 7 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

கோபுர வாயில் கடந்தவுடன் உள்ள மண்டபத் தூண் ஒன்றில் தேவேந்திரன் தனது மகள் தெய்வயானையை முருகனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது போன்ற சிற்பம் நம் கருத்தைக் கவரும் வகையில் காட்சி அளிக்கிறது. இம்மண்டபத்திலுள்ள பெரிய நந்தி, அருகில் மயில் மற்றும் மூஞ்சூறு வாகன சிலா உருவங்கள் மிகவும் கண்ணைக் கவரும் நிலையில் இருக்கக் காணலாம். பல படிக்கட்டுகளை ஏறி கோவில் கருவறையை அடையலாம். கருவறை ஒரு குடவரைக் கோவிலாக உள்ளது. இதில் இறைவன் பரங்குன்றநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் வடக்கு நோக்கியும், பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.

பரங்குன்றநாதர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் சிறப்பு நுழைவுக் கட்டணம் செலுத்தி அதற்கான தனி வழியில் சென்றால் தான் பார்க்க முடியும். மேலும் மற்ற 3 சந்நிதிகளையும் அருகிலிருந்து தரிசிக்க முடியும். இல்லாவிடில் இலவச தரிசனத்தில் சற்று தொலைவிலிருந்து மற்ற 3 சந்நிதிகளான விநாயகர், துர்க்கை, முருகர் ஆகியோரை மட்டுமே பார்க்க இயலும். குடவரைக் கோவிலின் அமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது.

முருகப் பெருமான் திருமணம்: முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் - தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

மதுரையில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் இக்கோவில் இருக்கிறது. மதுரையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இக்கோவிலுக்கு அடிக்கடி உள்ளன.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலன் அந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
ஆடலனஞ்சொல் அணியிழையாளை ஒருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

பாடல் விளக்கம்‬:
நீண்டு விரிந்த ஒளிக்கதிர்களை உடைய வெண் பிறையோடு வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சூடுதலை உடையவன். அந்திப் போதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவன். அழகிய சொற்களைப் பேசும் அணிகலன்களோடு கூடிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு பாடுபவன். அத்தகைய பெருமானது நல்லநகர் பரங்குன்று.


பாடல் எண் : 02
அங்கமொராறும் அருமறை நான்கும் அருள் செய்து
பொங்கு வெண்ணூலும் பொடியணி மார்பில் பொலிவித்துத்
திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்தோர் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

பாடல் விளக்கம்‬:
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளிச் செய்து, திருநீறு அணிந்த மார்பில் அழகுமிக்க வெண்ணூலைப் பொலிவுற அணிந்து, பிறை பாம்பு ஆகியவற்றை விளங்கும் சடைமீது சூடித் தேன் போன்ற மொழியினளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாய்ச் சிவபிரான் விளங்கும் நன்னகர் திருப்பரங்குன்றம்.


பாடல் எண் : 03
நீரிடங்கொண்ட நிமிர்சடை தன்மேல் நிரை கொன்றை
சீரிடங்கொண்ட எம் இறைபோலும் சேய்தாய
ஓருடம்புள்ளே உமை ஒருபாகம் உடனாகிப்
பாரிடம்பாட இனிது உறை கோயில் பரங்குன்றே.

பாடல் விளக்கம்‬:
கங்கை சூடிய நிமிர்ந்த சடைமுடிமேல் வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சிறப்புற அணிந்துள்ள எம் இறைவன் மிக உயர்ந்துள்ள தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள உமையம்மையோடும் உடனாய்ப் பூதகணங்கள் பாட இனிதாக உறையும் கோயில் திருப்பரங்குன்றம்.


பாடல் எண் : 04
வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போன்மேனித் தையல் நல்லாளோடு ஒரு பாகம்
நளிர் பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.

பாடல் விளக்கம்‬:
வளர்ந்துள்ள கோங்கு முதலிய மரங்களும், மணம் தரும் மாதவி முதலிய செடிகளும், மல்லிகை முதலிய கொடிகளும் நிறைந்துள்ள வண்டுகள் முரலும் சோலைகள் சூழ்ந்த சாரலை உடைய திருப்பரங்குன்றம், ஒரு பாகமாகிய தளிர் போன்ற மேனியளாகிய தையல் நல்லாளோடு பொருந்திக் கொத்தாகச் செறிந்த பூக்களைக் கொண்ட கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகிய சிவபிரானது நகராகும்.


பாடல் எண் : 05
பொன்னியல் கொன்றை பொறிகிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதியாகிய ஈசன் தொன்மறை
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே.

பாடல் விளக்கம்‬:
பொன் போன்ற கொன்றை மலர், பொறிகள் விளங்கும் பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள முறுக்கேறிய சடைமுடியோடு பொருந்திய ஒளி வடிவினனாகிய ஈசனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடி ஆடுபவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை எண்ணிய சிந்தை உடையவர்க்கு மிக்க நோய்கள் எவையும் இல்லை.


பாடல் எண் : 06
கடைநெடுமாடக் கடியரண் மூன்றும் கனன்மூழ்கத்
தொடை நவில்கின்ற வில்லினன் அந்திச் சுடுகானில்
புடைநவில் பூதம் பாட நின்றாடும் பொருசூலப்
படை நவில்வான்தன் நன்னகர் போலும் பரங்குன்றே.

பாடல் விளக்கம்‬:
வாயிலை உடைய காவல் பொருந்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் கனலில் மூழ்குமாறு அம்பினை எய்த வில்லினனும், அந்திக் காலத்தில் சுடுகாட்டில் அருகில் தன்னொடு பழகிய பூதகணங்கள் பாட நின்றாடுபவனும் போர்க்கருவியாகிய சூலப்படையை ஏந்தியவனுமாகிய சிவபிரானது நன்னகர் திருப்பரங்குன்றம்.


பாடல் எண் : 07
அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்
எயில்பட எய்த எம்மிறைமேய இடம் போலும்
மயில்பெடை புல்கி மாநடமாடும் வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.

பாடல் விளக்கம்‬:
கூரிய வேற்படையை உடையவனும், அனல் தழுவிய கை அம்பு ஒன்றால் மூவெயில்களை எய்து அழித்தவனும் ஆகிய எம் இறைவன் மேவிய இடம், ஆண் மயில்கள் பெண் மயில்களைத் தழுவிச் சிறந்த வகையில் நடனம் ஆடும் வளர்ந்த சோலைகளில் பெண் வண்டுகளோடு கூடிய ஆண் வண்டுகள் இடையறாது இசைபாடும் சிறப்புடைய திருப்பரங்குன்றாகும்.


பாடல் எண் : 08
மைத்தகுமேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்
பத்தின திண்தோள் இருபதும் செற்றான் பரங்குன்றைச்
சித்தம் அது ஒன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று
நித்தலும் ஏத்த தொல்வினை நம்மேல் நில்லாவே.

பாடல் விளக்கம்‬:
மை எனத்தக்க கரிய மேனியனாகிய வாட்போரில் வல்ல இராவணனின் மகுடம் பொருந்திய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை ஒன்றிய மனத்துடன் அங்குள்ள பெருமானின் சேவடிகளைச் சிந்தித்துச் சிவனே என்று நித்தலும் ஏத்தித் துதிக்க, வினைகள் நம் மேல் நில்லா.


பாடல் எண் : 09
முந்தி இவ்வையம் தாவிய மாலும் மொய்யொளி
உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும்
சிந்தையினாலும் தெரிவரிதாகித் திகழ்சோதி
பந்தியலங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே.

பாடல் விளக்கம்‬:
மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் தந்த அளவில் முந்திக் கொண்டு இவ்வுலகை ஓரடியால் அளந்ததுடன் வானுலகங்களையும் ஓரடியால் அளந்த திருமாலும், அத்திருமாலின் ஒளி நிறைந்த உந்திக் கமலத்தில் தோன்றி அரிய மறைகளை ஓதும் நான் முகனும் மனத்தாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் பிழம்பாய் நின்ற சோதி வடிவினனும், விளையாடும் பந்து தங்கிய அழகியகையை உடைய மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்பரங்குன்று.


பாடல் எண் : 10
குண்டாய் முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய்யல்ல
பண்டால் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத்
தொண்டாலேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.

பாடல் விளக்கம்‬:
பருத்த உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன் மிடுக்காய்ப் பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மரநிழலில் வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டு செய்து ஏத்தினால் நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும்.


பாடல் எண் : 11
தடமலி பொய்கைச் சண்பைமன் ஞானசம்பந்தன்
படமலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத்
தொடைமலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர்போகி
விடமலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.

பாடல் விளக்கம்‬:
பரப்புமிக்க பொய்கையை உடைய சண்பை என்னும் சீகாழிப்பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தன் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டிய பரங்குன்றிறைவர் மீது பாடிய தொடை நயம் மிக்க பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் தம் துன்பம் நீங்கி விடமுண்ட கண்டனாகிய சிவபிரானின் அருள்பெறும் தகுதியில் மேம்பட்டவராவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

1 கருத்து:

  1. அருமையாகப் பதம் பிரித்துத் தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு