திங்கள், 27 ஜூலை, 2015

திருவலஞ்சுழி திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : கபர்த்தீஸ்வரர்,  கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்

இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி, பிருகந்நாயகி

திருமுறை : இரண்டாம் திருமுறை 02 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
விண்டெலாம் மலரவிரை நாறு தண் தேன்விம்மி
வண்டுடெலாம் நசையால் இசைபாடும் வலஞ்சுழி
தொண்டெலாம் பரவும் சுடர்போல் ஒளியீர் சொலீர்
பண்டெலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே.

பாடல் விளக்கம்‬:
மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம்மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும் விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 02
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும் 
வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறுவல் நகுமொய் ஒளியீர் சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே.

பாடல் விளக்கம்‬:
நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும், பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளிய பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பினராய் எழுந்தருளிய இறைவரே! முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுதும் சென்று திரிந்து பலி ஏற்கக் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 03
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி
சுண்ண வெண்பொடிக் கொண்டு மெய்பூச வலீர் சொலீர்
விண்ணவர் தொழ வெண்தலையில் பலி கொண்டதே.

பாடல் விளக்கம்‬:
கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும் திருவலஞ்சுழியில், உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத் தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 04
கோடெலாம் நிறையக் குவளை மலரும் குழி 
மாடெலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி
சேடெலாம் உடையீர் சிறுமான்மறியீர் சொலீர்
நாடெலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே.

பாடல் விளக்கம்‬:
கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர், குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல்வீராக.


பாடல் எண் : 05
கொல்லை வேனல் புனத்தின் குரு மாமணி கொண்டு போய்
வல்லை நுண்மணல்மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே.

பாடல் விளக்கம்‬:
முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே! சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச் செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக.


பாடல் எண் : 06
பூச நீர்பொழியும் புனல் பொன்னியில் பன்மலர் 
வாச நீர்குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
தேச நீர்திரு நீர்சிறு மான்மறியீர் சொலீர்
ஏச வெண்தலையில் பலி கொள்வது இலாமையே.

பாடல் விளக்கம்‬:
நீர் பெருகி வரும் காவிரியில் பூச நன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்து வரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித்தேசரே! அழகிய சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில் நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக.


பாடல் எண் : 07
கந்த மாமலர்ச் சந்தொடு கார் அகிலும் தழீஇ 
வந்த நீர்குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர்
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே.

பாடல் விளக்கம்‬:
மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கி வந்த காவிரி நீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே! உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ! சொல்வீராக.


பாடல் எண் : 08
தேனுற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி
கானுற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர்
ஊனுற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே.

பாடல் விளக்கம்‬:
தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில் வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்ல வந்த காட்டு யானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக.


பாடல் எண் : 09
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே.

பாடல் விளக்கம்‬:
புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில் பன் மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப் போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப் பெரிது எனக்கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக.


பாடல் எண் : 10
உரமனும் சடையீர் விடையீர் உமது இன்னருள்
வரமனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழிப் 
பிரமனும் திருமாலும் அளப்பரியீர் சொலீர்
சிரமெனும் கலனில் பலி வேண்டிய செல்வமே.

பாடல் விளக்கம்‬:
பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 11
வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் 
வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி 
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே.

பாடல் விளக்கம்‬:
வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞானசம்பந்தர் ஓதியருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக