திங்கள், 27 ஜூலை, 2015

திருவலஞ்சுழி திருமுறை பதிகம் 04

இறைவர் திருப்பெயர் : கபர்த்தீஸ்வரர்,  கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்

இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி, பிருகந்நாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 66 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
ஓதமார் கடலின் விடம் உண்டவன்
பூத நாயகன் பொன்கயிலைக்கு இறை
மாதொர் பாகன் வலஞ்சுழி ஈசனை
பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே.

பாடல் விளக்கம்‬:
அலைகளை உடைய பாற்கடலினின்றெழுந்த ஆலகால விடத்தை உண்டவனும், பூதங்களுக்கு நாயகனும், பொன் வடிவாகிய திருக்கயிலைக்கு இறைவனும், உமையொரு பங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவனின் திருவடியை ஏத்தித் தொழுதால் நம் பாவங்கள் கெடும்.


பாடல் எண் : 02
கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம் 
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
மயில்களாலும் வலஞ்சுழி ஈசனைப் 
பயில்கிலார் சிலர் பாவித் தொழும்பரே.

பாடல் விளக்கம்‬:
திருக்கயிலைத் தலைவனும், சினந்த பகைவருடைய முப்புரங்களும் எயில்களுடன் தீயெழுமாறு வெல்ல வல்ல திறம் உடையவனும் ஆகிய மயில்கள் ஆரவாரிக்கும் திருவலஞ்சுழி இறைவனைப் பயின்று தொழார் சில பாவிகளாகிய தொண்டர்கள்.


பாடல் எண் : 03
இளைய காலம் எம்மானை அடைகிலாத் 
துளையிலாச் செவித் தொண்டர்காள் நும்முடல்
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக் 
களைக்கணாகக் கருதி நீர் உய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
இளமைப் பருவத்தேயே எம் பெருமானை அடைந்து வழிபடாத துளையற்ற செவிகளை உடைய தொண்டர்களே! நும் உடல் வளைந்து முதுமைக் காலம் வந்தவிடத்து திருவலஞ்சுழி இறைவனையே உமக்குத் துன்பம் களையும் துணையாகக் கருதி உய்வீராக.


பாடல் எண் : 04
நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்
குறைவிலாக் கொடுங் கூற்று உதைத்திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய 
இறைவனை இனி என்றுகொல் காண்பதே.

பாடல் விளக்கம்‬:
தேனைக்கொண்ட பூக்கள் நிரம்பிய நீர்கொண்டு திருமுழுக்காட்ட எழுந்த மார்க்கண்டேயனுக்காக வேறொன்றும் குறைவில்லாத கொடிய கூற்றுவனை உதைத்திட்டவனும், வேதங்களை ஓதுதலைக்கொண்ட நாவினனும் ஆகிய திருவலஞ்சுழியிற் பொருந்திய இறைவனை இனிக்காண்பது என்றுகொல்?.


பாடல் எண் : 05
விண்டவர் புரம் மூன்றும் எரிகொளத் 
திண் திறல் சிலையால் எரி செய்தவன் 
வண்டு பண் முரலும் தண் வலஞ்சுழி 
அண்டனுக்கு அடிமைத் திறத்து ஆவனே.

பாடல் விளக்கம்‬:
பகைவர் புரங்கள் மூன்றையும் எரிதல் கொள்ள மிக்க திண்ணியவில்லினால் எரித்தவனாகிய, வண்டுகள் இசையென ஒலிக்கின்ற குளிர்ச்சி உடைய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் தேவதேவனுக்கு அடிமை செய்யும் திறத்து யான் ஆவன்.


பாடல் எண் : 06
படங்கொள் பாம்பொடு பால்மதியம் சடை 
அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான்
மடந்தை பாகன் வலஞ்சுழியான் அடி 
அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே.

பாடல் விளக்கம்‬:
படத்தைக்கொண்ட பாம்பினோடு நிலா தரும் மதியத்தையும் சடையில் அடங்குமாறு வைத்து வாழ வல்லானும், தேவர் தலைவனும், மங்கைபங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவன் திருவடியை அடைந்தவர்க்கு அடிமைசெய்யும் திறத்து யான் ஆவன்.


பாடல் எண் : 07
நாக்கொண்டு பரவும் அடியார் வினை 
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன் தன் 
ஏக்கொளப் புரம் மூன்று எரி ஆனவே.

பாடல் விளக்கம்‬:
நாவினைக்கொண்டு இசை பாடித்தொழும் அடியார்களின் வினைகளைப் போக்கவல்ல முறுக்கமைந்த சடையையுடைய புண்ணியனாகிய நீண்ட சோலை சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவன் தன் ஓர் அம்பு கொள்ளவும் முப்புரங்களும் எரிக்கப்பட்டன.


பாடல் எண் : 08
தேடுவார் பிரமன் திருமால் அவர்
ஆடு பாதம் அவரும் அறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி ஈசனைத் 
தேடுவான் உறுகின்றது என் சிந்தையே.

பாடல் விளக்கம்‬:
பிரமனும், திருமாலும் தேடுவாராகி இறைவனின் ஆடும் திருவடியை அறியும் ஆற்றல் இலராகவும், மாடங்கள் நெடிதுயர்ந்த வீதிகளை உடைய திருவலஞ்சுழி ஈசனை என் சிந்தை தேடுவதற்காக உறுகின்றது.


பாடல் எண் : 09
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்றுடை 
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும்
வண்பொன்(ன்)னித் தென் வலஞ்சுழி மேவிய 
பண்பன் இப்பொனைச் செய்த பரிசு இதே.

பாடல் விளக்கம்‬:
கண்ணீர் ததும்புகின்றாள்; கைகூப்பித் தொழுகின்றாள்; முக்கண்ணுடைய நண்பனுக்கு என்னை நான் கொடுப்பேன் என்று சொல்கின்றாள்; வளவிய பொன்னித் தென்கரையில் உள்ள வலஞ்சுழி மேவிய பண்பனாகிய பெருமான் இந்தப் பொன்னனைய தலைவிக்குச் செய்த தன்மை இதுவாகும்.


பாடல் எண் : 10
இலங்கை வேந்தன் இருபது தோளிற
நலங்கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான்
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி 
வலம் கொள்வார் அடி என் தலைமேலவே.

பாடல் விளக்கம்‬:
இலங்கை வேந்தனாம் இராவணனது இருபது தோளும் இறும்படியாக நன்மைமிக்க திருவடியில் ஒரு விரலால் ஊன்றினானுக்குரிய, மலங்கு மீன்கள் பாய்கின்ற வயல் சூழ்ந்த திருவலஞ்சுழியை வலம் கொள்வார் திருவடிகள் என் தலையின் மேலன.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக