வெள்ளி, 24 ஜூலை, 2015

திருவிடைமருதூர் திருமுறை பதிகம் 10

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை 16 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
சூலப்படை உடையார் தாமே போலும் 
சுடர்த் திங்கள் கண்ணி உடையார் போலும்
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும்
மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்
வேலைக் கடல் நஞ்சம் உண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும் 
இடைமருது மேவிய ஈசனாரே.

பாடல் விளக்கம்‬:
இடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இறைவர் சூலப்படை உடையவராய், ஒளி வீசும் பிறையை முடிமாலையாக அணிந்தவராய், விரும்பித் திருமாலை ஒருபாகமாகக் கொண்டவராய், மந்திரமும் அம்மந்திரங்களைப் பயன்கொள்ளும் செயல்களுமாக அமைந்தவராய், கடலில் தோன்றிய விடத்தை உண்டவராய், ஊழ்வினையை நுகரும்போதே உடன் ஈட்டிக் கொள்ளப்படும் மேல் வினைகளை நீக்கும் வேறுபட்ட இயல்பினராய், நறுமணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.


பாடல் எண் : 02
காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலும்
காரானை ஈர் உரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப்படுவார் போலும் 
பத்துப்பல் ஊழி பரந்தார் போலும்
சீரால் வணங்கப்படுவார் போலும் 
திசைஅனைத்துமாய் மற்றும் ஆனார் போலும்
ஏரார் கமழ் குழலாள் பாகர் போலும் 
இடைமருது மேவிய ஈசனாரே.

பாடல் விளக்கம்‬:
இடைமருது மேவிய ஈசனார் கார்காலத்தில் பூக்கும் நறுமணக்கொன்றைப் பூவினை முடிமாலையாக உடையவராய், கரிய யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைத் திருமேனியின் மீது போர்த்தியவராய், உலகத்தாரால் முன் நின்று துதிக்கப்படுபவராய்ப் பல ஊழிக்காலங்களையும் அடக்கி நிற்கும் காலமாய் நிற்பவராய், பலரும் தம்முடைய பொருள்சேர் புகழைச் சொல்லி வணங்க நிற்பவராய், பத்துத் திசைகளிலும் உள்ள நிலப் பகுதிகளும் மற்றும் பரவி நிற்பவராய், நறுமணம் கமழும் அழகிய கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.


பாடல் எண் : 03
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்
பூதங்களாய புராணர் போலும்
புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப்படுவார் போலும் 
பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும்
ஏதங்களான கடிவார் போலும் 
இடைமருது மேவிய ஈசனாரே.

பாடல் விளக்கம்‬:
இடைமருது மேவிய ஈசனார் வேதங்களோடு வேள்விகளைப் படைத்தவராய், விண்ணுலகும் மண்ணுலகும் ஐம்பூதங்களும் தாமேயாகிய பழையவராய்த் தம்மைப் புகழ்வார் உள்ளத்தில் ஞானஒளியாய் நிற்பவராய்த் தம் திருவடிகள் எல்லோராலும் முன்நின்று துதிக்கப்படுவனவாய், அடியார்களுக்கு இன்பம் பயப்பவராய், அவர்களுடைய துன்பங்களையெல்லாம் துடைப்பவராய் அமைந்துள்ளார்.


பாடல் எண் : 04
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித் 
திசை வணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி
வியன் கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப் 
பரங்குன்றம் மேய பரமர் போலும்
எண் குணத்தார்; எண்ணாயிரவர் போலும் 
இடைமருது மேவிய ஈசனாரே.

பாடல் விளக்கம்‬:
பிற பிறப்புக்களில் உள்ள உயிர்களை அடிமைப் படுத்தி ஆளும் ஆற்றலை உடைய, தேவகணங்கள் தம் திருவடிகளைத் துதித்துத் திசை நோக்கி வணங்குமாறு செய்த இடைமருது மேவிய ஈசர், இந்திரன் செய்த வேள்வியை அழியுமாறு கெடுத்து, மேக வடிவில் வந்த திருமாலை வாகனமாகக் கொண்டு செலுத்திய வேறுபட்ட இயல்பினர். யாழைப் பண்ணும் (சுருதி கூட்டும்) இயல்பினராகிய மகளிரின் ஆடல் பாடல்கள் நீங்காத பரங்குன்றை விரும்பித் தங்கிய பரம்பொருள் ஆவார். எண்ணாயிரவர் என்ற தொகுதியைச் சார்ந்த அந்தணர்கள் வேற்றுத் தெய்வங்களை விடுத்துத் தம்மையே பரம்பொருளாகத் தியானிக்கும் இயல்பினராவர்.


பாடல் எண் : 05
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த 
உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்கராகிப்
படுவெண் தலையில் பலி கொள்வாரும்
மாகமடை மும்மதிலும் எய்தார்தாமும்
மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும்
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் 
இடைமருது மேவிய ஈசனாரே.

பாடல் விளக்கம்‬:
இடைமருது மேவிய ஈசனார் வானளாவிய சோலைகளிலே குரங்குகள் நடமாடும் அண்ணாமலையிலும், அழகிய பொழில்கள் சூழ்ந்த ஆரூரிலும், கச்சி ஏகம்பத்திலும் உகந்தருளியிருக்கின்றார். பார்வதி பாகராய்ப் பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர். வானில் உலவிய மும்மதில்களையும் எய்து வீழ்த்தியவர். எல்லாப் பொருள்களாகவும் உள்ளவர்.


பாடல் எண் : 06
ஐயிரண்டும் ஆறொன்று ஆனார் போலும் 
அறுமூன்றும் நான்மூன்று ஆனார் போலும்
செய்வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் 
திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும்
கொய்மலரம் கொன்றைச் சடையார் போலும் 
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும் 
இடைமருது மேவிய ஈசனாரே.

பாடல் விளக்கம்‬:
இடைமருது மேவிய ஈசனார் பத்துத் திசைகளும், ஏழு இசைகளும், பதினெட்டு வித்தைகளும், பன்னிரண்டு சூரியர்களும், தீவினைகளும் நல்வினைகளுமாகிப் பத்துத் திசைகளிலும் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார். அவர் கொன்றை சூடிய சடையர். கூத்து நிகழ்த்துதலில் வல்ல இளைஞர். தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்தவர்.


பாடல் எண் : 07
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய்ப்
பிரிவுடைய குணம் பேசில் பத்தோடு ஒன்றாய்
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர்
விரிவிலாக் குணம் நாட்டத்து ஆறே என்பர்
தெரிவாய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும்
பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும்
எரியாய தாமரைமேல் இயங்கினாரும் 
இடைமருது மேவிய ஈசனாரே.

பாடல் விளக்கம்‬:
இடைமருது மேவிய ஈசனார் உயிர்களை விட்டு நீங்காத பத்து இயற்கைப் பண்புகளாகவும், உயிர்களுக்கு மலச் சார்பினால் வரும் பதினொரு செயற்கைப் பண்புகளாகவும், பரம் பொருளுக்கு என்று ஒருகால் தொகுத்துச் சொல்லப்படும் நான்கு பண்புகளாகவும், பிறிதொருகால் சொல்லப்படும் ஆறு பண்புகளாகவும் உள்ளனவற்றையும் மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்து உணரப்படும் பொதுவான ஐம்பண்புகளையும் ஐவகை சமித்துக்களையும், திருவைந்தெழுத்தையும் உயிர்கள் சென்று சேரக்கூடிய வழிகள் ஐந்தையும் குறிப்பிட்டு ஞானப்பிரகாசமாகிய ஒளியை உடைய அடியவர்களின் உள்ளத் தாமரையில் உலவிவருபவராவார்.


பாடல் எண் : 08
தோலின் பொலிந்த உடையார் போலும் 
சுடர் வாய் அரவு அசைத்த சோதி போலும்
ஆலம் அமுதாக உண்டார் போலும்
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனார் போலும்
காலனையும் காய்ந்த கழலார் போலும்
கயிலாயம் தம் இடமாகக் கொண்டார் போலும்
ஏலம் கமழ்குழலாள் பாகர் போலும் 
இடைமருது மேவிய ஈசனாரே.

பாடல் விளக்கம்‬:
இடைமருது மேவிய ஈசனார் தோலுடையை உடுத்து அதன்மேல் ஒளிவாய்ந்த பாம்பினை இறுக்கிக் கட்டிய சோதி வடிவானவர். விடத்தையே அமுதம்போல உண்டவர். அடியவர்களுக்கு அமுதம் போல் இனியவர். காலனை வெகுண்டுதைத்த திருவடியை உடையவர். கயிலாயத்தை நிலையான இடமாக உடையவர். நறுமணம் வீசும் கூந்தலை உடைய பார்வதி பாகர்.


பாடல் எண் : 09
பைந்தளிர்க் கொன்றையம் தாரார் போலும்
படைக்கணாள் பாகம் உடையார் போலும்
அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்
அணி நீலகண்டம் உடையார் போலும்
வந்த வரவும் செலவுமாகி 
மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும்
எந்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் 
இடைமருது மேவிய ஈசனாரே.

பாடல் விளக்கம்‬:
இடைமருது மேவிய ஈசனார் பசிய தளிர்கள் இடையே தோன்றும் கொன்றைப் பூ மாலையர். வேல்போன்ற கண்களை உடைய பார்வதி பாகர். மாலை வானம் போன்ற செந்நிற அழகர். அழகிய நீலகண்டர். உலகில் பிறப்புக்களையும் இறப்புக்களையும் நிகழ்வித்து என் உள்ளத்தில் நீங்காதிருப்பவர். அடியார்களுடைய இடர்களைத் தீர்த்து அவர்களைக் காக்கும் இயல்பினர்.


பாடல் எண் : 10
கொன்றையம் கூவிள மாலை தன்னைக்
குளிர்சடைமேல் வைத்து உகந்த கொள்கையாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி 
நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும்
அன்று அவ் அரக்கன் அலறி வீழ
அருவரையைக் காலால் அழுத்தினாரும்
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் 
இடைமருது மேவிய ஈசனாரே.

பாடல் விளக்கம்‬:
இடைமருது மேவிய ஈசனார் கொன்றை மலரோடு வில்வமாலையைக் குளிர்ந்த சடைமீது வைத்து மகிழ்ந்த இயல்பினர். தம்மீது அம்பு எய்ய இருந்த மன்மதனைச் சாம்பலாக்கி நெருப்பு வடிவாய் நின்ற தூயவர். இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அன்று அவன் அலறிவிழுமாறு அம்மலையைக் காலால் அழுத்தியவர். என்றும் மற்றவர் இடும் பிச்சையை வாங்கி உண்பவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக