இறைவர் திருப்பெயர் : கடைமுடி நாதர், அந்திசம்ரக்ஷணீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அபிராமி
திருமுறை : முதல் திருமுறை 111 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
தலத்தின் சிறப்பு: பிரம்மா இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து இங்கு இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழிபட்டுள்ளார். இந்த பிரம்ம தீர்த்தம் ஆலயத்தின் நேர் எதிரில் அழகுற விசாலமாக அமைந்துள்ளது. மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில் காட்சி தந்தார்.
பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவை நாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். கண்வ மகரிஷியும் (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்று கண்வமஹான் துறை என்ற காரணப் பெயர் கொண்டு வளங்குகிறது.
இத்தல இறைவன் கடைமுடிநாதர் என்றும், வடமொழியில் அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கடைமுடிநாதர் என்ற பெயரினால் நாம் நமது ஆயுளின் கடைசி காலத்தில் அவரைப் பற்ற வேண்டும் என்றும், அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்ற பெயரினால் நமது அந்திமக் காலத்தில் அதாவது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் அவரே என்று நமக்குத் தெளிவாக புலப்படுத்துகிறார்.
இவ்வாலயம் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது .இராஜ கோபுரமில்லை. இறைவனின் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. மேற்கு பார்த்த சிவத்தலங்கள் தமிழகத்தில் சில இடங்களிலேயே உள்ளன. அதில் இதுவும் ஒன்று. லிங்க மூர்த்தம் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக அமைந்துள்ளது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் உள்ள நவக்கிரக மண்டபம் எண்கோண வடிவ ஆவுடையார் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியும், பைரவரும் இடது காதில் வளையம் அணிந்துள்ளனர். கடைமுடி விநாயகர் மற்றும் சுப்பிரமணியருக்கும் சன்னதிகள் உள்ளன. அம்பாள் அபிராமி என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருள் காட்சி தருகிறாள்.
அபிராமி அன்னையை அருகிலுள்ள கண்வமஹான் துறையில் நீராடி வெள்ளிக்ககிழமை தரிசனம் செய்து ஸெளபாக்கிய திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க திருமாங்கல்ய வழிபாடு செய்கின்றனர்.
இத்தலத்தில் காவிரி இங்கு வடக்கு முகமாக வந்து மேற்காக ஓடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது. கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - பொறையார் சாலையிலுள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருசெம்பொனார்கோவிலில் (காவிரி தென்கரைத் தலம்) இருந்து திருநனிபள்ளி (புஞ்சை) வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.
நன்றி www.shivatemples இணையதளத்திற்கு
பாடல் எண் : 01
அருத்தனை அறவனை அமுதனை நீர்
விருத்தனை பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன் வளநகர் கடைமுடியே.
பாடல் விளக்கம்:
வேதப் பொருளாய் விளங்குபவனும், அறவடிவி னும், அமுதம்போல இனியவனும், மூத்தவனும், இளையோனும், உலக மக்கள் பலராலும் இவ்வொருவனையன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த பொருளாயுள்ளவனும், ஆகிய பெருமான் எவ்விடத்தான் என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக.
பாடல் எண் : 02
திரைபொரு திருமுடி திங்கள் விம்மும்
அரைபொரு புலியதள் அடிகளிடம்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே.
பாடல் விளக்கம்:
ஒளியால் விம்மித் தோன்றும் பிறைமதி, அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும் கங்கை ஆகியவற்றை உடைய திருமுடியை உடையவரும், இடையில் புலித்தோலைப் பொருந்த அணிந்தவருமாகிய அடிகள் எழுந்தருளிய இடம், அலைகளோடு நுரைகள் பொருந்திய தெளிந்த சுனை நீர் கரைகளில் வந்து மோதும் வளநகராகிய கடை முடியாகும்.
பாடல் எண் : 03
ஆலிள மதியினொடு அரவு கங்கை
கோல வெண்ணீற்றனைத் தொழுது இறைஞ்சி
ஏல நன்மலரொடு விரைகமழும்
காலன வளநகர் கடைமுடியே.
பாடல் விளக்கம்:
கல்லால மர நீழலில் இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடை முடியுடனும், அழகிய திருவெண்ணீற்றுடனும், நறுமலர் ஆகியனவற்றால் மணம் பொருத்தமாகக் கமழும் திருவடிகளை உடையவனாக விளங்கும் இறைவனைத் தொழுது இறைஞ்சுதற்குரிய வளநகராக விளங்குவது கடைமுடியாகும்.
பாடல் எண் : 04
கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி அரவொடு மான் மழுவாள்
கை அணிபவன் இடம் கடைமுடியே.
பாடல் விளக்கம்:
கொய்யப் பெற்ற அழகிய மணம் கமழும் கொன்றை மலர்மாலை அணிந்தவனாய் விடம் பொருந்திய கண்டத்தை உடையவனாய், படம் பொருந்திய பாம்பையும், மான் மழுவாள் ஆகியவற்றையும் கையின்கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும்.
பாடல் எண் : 05
மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் எனவுலகு ஏத்தும் கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியே.
பாடல் விளக்கம்:
வேதங்களை அருளியவனும், அனைத்துலகங்களும் ஆகியவனும், மாயை வடிவினனும், சடைமுடியில் பிறை கங்கை ஆகியவற்றை அணிந்தவனும், கையில் அனல் ஏந்தியவனும் உலக மக்கள் இறைவன் எனப் போற்றும் நீல கண்டனுமான சிவபிரானது வளநகர் கடைமுடியாகும்.
பாடல் எண் : 06
படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவரலாளையொர் பாகம் வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள் தன் வளநகர் கடைமுடியே.
பாடல் விளக்கம்:
அரவின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாக வைத்து, மேற்குத் திசையில் தோன்றும் பிறைமதியைச் சூடிய சடைமுடியினனாய் விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்.
பாடல் எண் : 07
பொடிபுல்கு மார்பினில் புரிபுல்கு நூல்
அடிபுல்கு பைங்கழல் அடிககளிடம்
கொடிபுல்கு மலரொடு குளிர் சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே.
பாடல் விளக்கம்:
திருநீறு அணிந்த மார்பின்கண் முறுக்கேறிய பூணூலை அணிந்தவராய், திருவடிகளில் பொருந்திய அழகிய கழல்களை உடையவராய் விளங்கும் அடிகள் இடம் கொடிகளில் பூத்த மலர்களோடு குளிர்ந்த சுனை நீரின் மணம் கமழும் வளநகராகிய கடை முடியாகும்.
பாடல் எண் : 08
நோதல் செய்து அரக்கனை நோக்கழியச்
சாதல் செய்து அவனடி சரண் எனலும்
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர்
காதல் செய் வளநகர் கடைமுடியே.
பாடல் விளக்கம்:
இராவணனைத் துன்புறுமாறு செய்து, அவன் மீது முதலில் கருணை நோக்கம் செய்யாமல் வலிமை காட்டிப்பின் அவன் திருவடியே சரண் எனக் கூறிய அளவில் அவனுக்கு ஆதரவு காட்டி அருள் செய்த அடிகளாகிய சிவபிரானார் விரும்பும் வளநகர் கடைமுடியாகும்.
பாடல் எண் : 09
அடிமுடி காண்கிலர் ஓர் இருவர்
புடைபுல்கி அருளென்று போற்றிசைப்பச்
சடைஇடைப் புனல் வைத்த சசதுரனிடம்
கடைமுடி அதன் அயல் காவிரியே.
பாடல் விளக்கம்:
அடிமுடி காணாதவராகிய திருமால் பிரமர் அருகிற்சென்று அருள்புரிக எனப்போற்றி செய்து வழிபடுமாறு, சடைமிசையே கங்கையை அணிந்த சதுரப்பாடுடைய சிவபிரானது இடமாக விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள கடைமுடியாகும்.
பாடல் எண் : 10
மண்ணுதல் பறித்தலும் மாயமிவை
எண்ணிய காலவை இன்பமல்ல
ஒண்ணுதல் உமையையொர் பாகம் வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.
பாடல் விளக்கம்:
நீரிற் பல கால் மூழ்கலும் மயிர் பறித்தலும் ஆகிய புத்த சமண விரத ஒழுக்கங்கள் பொய்யானவை; ஆராயுமிடத்து இவை இன்பம் தாரா. ஒளி பொருந்திய நுதலினளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ள கண்ணுதலோனின் வளநகர் கடைமுடியாகும்.
பாடல் எண் : 11
பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன்தமிழ் இவை சொல இன்பமாமே.
பாடல் விளக்கம்:
பொன்துகள் திகழும் காவிரியாற்றின் அலைகளின் நீர் முறையாகச் சென்று அடையும் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப் பெருமைகளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| --- திருக்கடைமுடி திருமுறை பதிகம் முற்றிற்று --- ||
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக