புதன், 8 ஜூலை, 2015

திருச்சேறை திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஞானவல்லி

திருமுறை : நான்காம் திருமுறை 73 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பால் அங்கொரு பாகமாகத்
திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

பாடல் விளக்கம்‬:
தக்கன் செய்த வேள்வியில் அவமானத்திற்கு உட்பட்ட தாட்சாயணி, தனது உடலை மாய்த்துக் கொண்டு சிவபெருமானை விட்டுப் பிரிந்த பின்னர், பெரும் செல்வங்கள் பெற்ற இமவானின் மகளாக பார்வதி என்ற பெயருடன் தோன்றிய போது, தனது உடலினை மிகவும் கடினமாக வருத்தித் தவங்கள் செய்ததால், சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் புரிந்து கொண்டார். மேலும் தனது உடலின் ஒரு பாகத்தை தேவிக்கு அளித்து, தேவி எப்போதும் அங்கே இருக்குமாறு அருள் செய்தார். இவ்வாறு பார்வதி தேவிக்கு அருள் செய்தவர், திருச்சேறையில் செந்நெறி என்று அழைக்கப்படும் கோயிலில் உறையும் சிவபெருமான் ஆவார்.


பாடல் எண் : 02
ஓர்த்து உளவாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனைப்
பேர்த்தெனை ஆளாக் கொண்டு பிறவிவான் பிணிகள் எல்லாம்
தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

பாடல் விளக்கம்‬:
ஆராய்ந்து, உண்மை நெறியாகிய சைவ சமயக் கொள்கைகளை உள்ளவாறு உணர்ந்து, உண்மை அல்லாதவற்றை ஒதுக்கி, உண்மைகளை உணர வேண்டும். அவ்வாறு செய்யாத சமணர்களின் வார்த்தையை உண்மை என்று நம்பி அவர்களது மொழிகள் தந்த மயக்கத்தில் இத்தனை காலம் ஆழ்ந்து இருந்தேன்; இவ்வாறு பொய்யான நெறியில் ஆழ்ந்து கிடந்த என்னை, சூலை நோய் தந்து, அந்த இடத்திலிருந்து பெயரவைத்து, என்னை ஆட்கொண்டவர் சிவபெருமான். சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான், எனது பிறவிப் பிணியையும், பிறப்பினால் ஏற்படும் பாசப் பிணைப்புகளையும் நீக்கி எனக்கு அருள் புரிந்தார்.


பாடல் எண் : 03
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பில் காலம்
நின்று தம் கழல்கள் ஏத்து நீள்சிலை விசயனுக்கு
வென்றிகொள் வேடனாகி விரும்பி வெம் கானகத்துச்
சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

பாடல் விளக்கம்‬:
மனம் ஒன்றி பல காலங்கள் சிவபிரானின் திருப்பாதங்களையே நினைத்து தவம் செய்த, நீண்ட வில்லினை உடைய அர்ஜுனனனுக்கு அருள் புரிவதற்காக, வெற்றி கொள்ளும் வேடுவ கோலத்தை விரும்பி ஏற்று, தான் உறையும் குளிர்ந்த கயிலாயத்தை விட்டு நீங்கி வெம்மை மிகுந்த காட்டின் இடையே சென்று அருள் செய்தவர், சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.


பாடல் எண் : 04
அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்களாகி விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை ஏற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

பாடல் விளக்கம்‬:
தனது ஐந்து புலன்களையும் அடக்கி, ஐந்து தீக்களை வளர்த்து அதனிடையே நின்று பல ஆண்டுகள், வஞ்சனை ஏதும் இல்லாமல், தனது மூதாதையர்கள் கடைத்தேற வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் தவம் செய்த பகீரதனின் தவத்தினால் தேவலோகத்திலிருந்து கீழே கங்கை நதி பாய்ந்தது. ஆனால் தேவலோகத்தை விட்டுத் தன்னை பிரித்ததால் ஏற்பட்ட கோபத்துடன், பல கிளைகளாகப் பிரிந்த கங்கை மிகுந்த வேகத்துடன், பூமியையே கரைத்து, பாதாள லோகத்திற்கு அடித்துச் செல்வது போல் கீழே இறங்கியது. இவ்வாறு மிகுந்த வேகத்துடன் இறங்கிய கங்கை நதியை தனது சடையில் ஏற்ற சிவபெருமான், கங்கை நதி சீராக மண்ணுலகில் பாயுமாறு செய்தார். இவ்வாறு எவர்க்கும் துன்பம் ஏற்படாத வண்ணம் கங்கை நதியை வழி நடத்தியவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.


பாடல் எண் : 05
நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோடு ஆவின் பாலைக்
கறந்து கொண்டாட்டக் கண்டு கறுத்த தன் தாதை தாளை
எறிந்த மாணிக்கு அப்போதே எழில்கொள் சண்டீசன் என்னச்
சிறந்த பேறு அளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

பாடல் விளக்கம்‬:
மண்ணியாற்றின் கரையில் இருத்த சிறந்த மணலை எடுத்து, இலிங்க வடிவாக குவித்து, விசாரசருமன் என்ற சிறுவன், அந்த இலிங்கத்திற்கு பசுவின் பால் கொண்டு அபிடேகம் செய்ய, அதனைக் கண்டு கோபம் கொண்ட அவனது தந்தை அந்த சிவபூஜைக்கு இடையூறு செய்யும் வகையில், பால் குடத்தை தட்டிவிட்டார். தனது தந்தை என்றும் கருதாமல், பால் குடத்தை தட்டிவிட்ட கால்களை நோக்கி கொம்பினை எறிந்த போது அந்த கொம்பு, மழுப்படையாக மாறி, அவரது தந்தையின் கால்களை துண்டித்தது. இந்த நிகழ்ச்சி நடந்த உடனே, விசாரசருமனுக்கு காட்சி தந்த சிவபெருமான், சண்டீசர் என்ற அழகான பெயரினை அளித்து, மேலும் மற்று எவரும் பெறமுடியாத சிறந்த பேற்றினையும் அளித்தார். இவ்வாறு சண்டீசருக்கு அருள் செய்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.  


பாடல் எண் : 06
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

பாடல் விளக்கம்‬:
பலவாறு விரிந்த ஒளியினை உடைய சூலத்தையும், ஓசையை உள்ளடக்கிய தமருகம் எனப்படும் உடுக்கையையும் கையில் ஏந்தி அழகிய வடிவம் கொண்ட கால பயிரவ மூர்த்தியாக கோலம் கொண்ட சிவபெருமான், தன்னை அழிப்பதற்காக தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையினை அழித்தார்; யானை சிவபெருமானை நெருங்கியதையும், அதன் தோலினை சிவபெருமான் உரித்த பின்னர் அந்த தோலினைப் போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொண்டததையும் கண்ட பார்வதி தேவி மிகவும் அச்சம் எய்தினாள். தேவியின் பயத்தைக் கண்ட சிவபெருமான் தனது பவளம் போன்று ஒளி திகழும் வாய் மலர்ந்து சிரித்தார். இவ்வாறு சிறிதும் அஞ்சாமல் வீரச்செயல் புரிந்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.


பாடல் எண் : 07
சுற்றுமுன் இமையோர் நின்று தொழுது தூமலர்கள் தூவி
மற்றெமை உயக்கொள் என்ன வான்புரங்கள் மூன்றும்
உற்றொரு நொடியில் முன்னம் ஒள்ளழல் வாயின் வீழச்
செற்று அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

பாடல் விளக்கம்‬:
ஒரு காலத்தில் தம்மைச் சுற்றி தேவர்கள் நின்று, தூய்மையான மலர்கள் தூவி தொழுது, இறைவனே நீங்கள் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்ட, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய சிவபெருமான், எதிர்த்து நின்று அழிப்பவர் எவரும் இல்லாமல் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த மூன்று வலிமையான கோட்டைகளையும், உற்று நோக்கி ஒரே நொடியில், அந்த கோட்டைகள் தீக்கு இரையாகுமாறு அழித்து தேவர்களுக்கு சிவபெருமான் அருள் செய்தார். அத்தைகைய வல்லமையும் கருணை உள்ளமும் கொண்டவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.


பாடல் எண் : 08
முந்தி இவ்வுலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்
எந்தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

பாடல் விளக்கம்‬:
முன்னொரு நாளில், உலகத்தைப் படைத்த பிரமன், திருமாலுடன் சேர்ந்து, தங்களது நாதன் ஒப்பற்ற சிவபெருமான் தான் என்பதை நெஞ்சார நினைந்து, சிவபெருமானின் அருளை வேண்டி வணங்கி, வாயால் அவரது புகழ்களைக் கூறி வாழ்த்தி நின்றபோது, முடிவில்லாத சோதியாக அவர்கள் முன்னர் தோன்றி, அவர்களால் அடிமுடி அறியாத வண்ணம் தீப்பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்தார். இவ்வாறு அவர்களுக்கு அருளியவர், சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.


பாடல் எண் : 09
ஒருவரும் நிகரிலாத ஒண்திறல் அரக்கன் ஓடிப்
பெருவரை எடுத்த திண்தோள் பிறங்கிய முடிகளிற்று
மருவியெம் பெருமான் என்ன மலரடி மெல்ல வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

பாடல் விளக்கம்‬:
தனக்கு எவரும் இணை இல்லாதவாறு வலிமையும் ஒளியும் கொண்டு விளங்கிய இலங்கை மன்னன் இராவணன், விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட போது, அவனுடைய வலிமையான தோள்களும் தலைகளும் சிதறி விழுமாறு, சிவபெருமான் தனது கால் விரலால் தான் அமர்ந்திருந்த கயிலை மலையினை மெல்ல அழுத்தினார்: அப்போது அன்புடன் இறைவனை எம்பெருமானே என்று இராவணன் வழிபட, தனது அழுந்திய கால் விரலை மெல்ல வாங்கி, அழுத்ததலைத் தவிர்த்து அரக்கனின் உயிரினைக் காத்து அருள் புரிந்தார். இவ்வாறு அருள் செய்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் திரு என். வெங்கடேஸ்வரன்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக