புதன், 29 ஜூலை, 2015

திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் 05

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை : நான்காம் திருமுறை 106 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று 
கைதை மடல் புல்கு தென்கழிப்பாலை அதின் உறைவாய்
பைதல் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசு அறியோம்
எய்தப் பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே.

பாடல் விளக்கம்‬:
நெய்தல் நிலத்திலுள்ள நாரை தன் பார்ப்பு என்று கருதி அணுகி வெண்தாழை மடலைத் தழுவும் அழகிய கழிப்பாலையில் உறைபவனே! இளைய பிறைச் சந்திரனோடு தலையில் பாம்பையும் அருகில் வைத்த திறம் பற்றி யாம் அறியோம். தன் அருகே பிறைவரினும் பிறை அருகே தான் அணுகப் பெறினும் பாம்பு இரக்கமின்றி பிறையை விழுங்கிவிடும் என்பதனை நம் தலைவனாகிய நீ அறிவாய் அல்லையோ?.


பாடல் எண் : 02
பருமா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை 
பொருமால் கரைமேல் திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும் 
கருமா மிடறு உடைக் கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை
பெருமான் அவன் என்னை ஆளுடையான் இப்பெருநிலத்தே.

பாடல் விளக்கம்‬:
மலையை ஒத்த உயர்ந்த கடற்கரை மீது பெரிய மணி பவளம் முத்து என்பனவற்றைப் பரவிச் செலுத்தி அலைகள் கொண்டு வந்து சேர்ப்பதனால் விளங்கித் தோன்றும் கழிப்பாலை என்ற திருத்தலத்தில் உறையும் எம் தலைவன், எந்தை பெருமான் ஆகிய நீல கண்டன் இப்பேருலகில் அடியேனை அடிமையாகக் கொண்டவன் ஆவான்.


பாடல் எண் : 03
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தல் உற்று இங்கு நமன்தமரால் 
கோட்பட்டு ஒழிவதன் முந்து உறவே குளிரார் தடத்துத் 
தாள்பட்ட தாமரைப் பொய்கையம் தண் கழிப்பாலை அண்ணற்கு 
ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இவ்வகலிடத்தே.

பாடல் விளக்கம்‬:
இப்பரந்த உலகில் பல காலம் உயிர்வாழ்ந்து சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொள்ளப்பட்டு அழிவதன் முன்னம், குளிர்ந்த நீர் நிலைகளையும், தண்டு நீண்ட தாமரைப் பொய்கைகளையும் உடைய அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி வல்லமை உடையோமாய் யமபயத்திலிருந்து விடுபட்டோம்.


இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின


தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக