ஞாயிறு, 12 ஜூலை, 2015

திருச்சாய்க்காடு திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : குயிலினும் நன்மொழியம்மை

திருமுறை : நான்காம் திருமுறை 65 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன்
வீடுநாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன்
பாடு தான் செலலும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே.

பாடல் விளக்கம்‬:
அன்று பூத்த, இதழ்கள் நெருங்கி அமைந்த மலர்கள் கொண்டு, தினமும், இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்த மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிவுடைந்த நிலையில், பொய்யான உடலிலிருந்து அந்த சிறுவனின் உண்மையான, நிலையான உயிரினைப் பிரித்து எடுத்துச் செல்வதற்காக, காலன் சிறுவனை நெருங்கினான். காலன் தனது அருகில் வருவதைக் கண்டு அச்சம் கொண்ட சிறுவன், சிவபிரானது திருப்பாதமே சரணம் என்று அவரது உருவத்தைத் தழுவிக் கொண்டார். உடனே, காலன் மாய்ந்து கீழே விழுமாறு அவனை உதைத்து, சிறுவனைக் காப்பாற்றியவர், சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.


பாடல் எண் : 02
வடங்கெழு மலை மத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையராகித்
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.

பாடல் விளக்கம்‬:
வாசுகி பாம்பினை கயிறாக நெருக்கி கட்டப்பட்ட மந்திர மலையை மத்தாக பயன்படுத்தி, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்த போது, கடலிலிருந்து கொடிய கரிய நஞ்சு எழுந்தது. அவ்வாறு எழுந்த நஞ்சினைக் கண்டு, திருமால், பிரமன் உட்பட பல தேவர்களும் மிகவும் பயந்து, சிவபெருமானை அணுகி, நீரே எங்களுக்கு அடைக்கலம் தரவேண்டும் என்று வேண்டிய போது, அவர்களுக்கு அருள் புரிய வேண்டி, பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அனைவரையும் காப்பாற்றியவர், சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.


பாடல் எண் : 03
அரணிலா வெளிய நாவல் அரு நிழலாக ஈசன்
வரணியலாகித் தன் வாய் நூலினால் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்னனாக்கித்
தரணி தான் ஆளவைத்தார் சாய்க்காடு மேவினாரே.

பாடல் விளக்கம்‬:
காவல் சுவர் ஏதும் அற்ற வெட்ட வெளியில் வளர்ந்த வெண்ணாவல் மரத்தின் கீழே, அதன் குறுகிய நிழலில் அமர்ந்திருந்த இறைவனின் மேனியின் மேல் மரத்தின் இலைகளும் தழைகளும் படுவதை தடுக்கும் வகையில், சிலந்தி நாவல் மரத்தினைச் சுற்றி, தனது வாயில் இருந்து வரும் நூலினைக் கொண்டு ஒரு பந்தல் போன்று அமைத்தது. இவ்வாறு தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் எந்த விதமான முரண் பாடும் இல்லாமல், சிலந்தி செய்த தொண்டினுக்கு பரிசாக, அந்த சிலந்தியை அடுத்த பிறவியில் முடிசூடும் மன்னனாக்கி, உலகை ஆளுமாறுச் செய்தவர் சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபிரான் ஆவார்.


பாடல் எண் : 04
அரும்பெரும் சிலைக்கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று
உரம் பெரிது உடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே
வரம் பெரிது உடையனாக்கி வாளமர் முகத்தின் மன்னும்
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.

பாடல் விளக்கம்‬:
போர்த் திறமை மிக்க அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சிவபெருமான் வேடுவக் கோலம் தாங்கி, வல்லமை வாய்ந்த பெரிய வில்லினைக் கையில் ஏந்தியவாறு வந்தார். அவ்வாறு வந்தவர் தம்முடைய பேராற்றலை அர்ஜுனனுக்கு வெளிப்படுத்திய பின்னர், இருவரது வீரமும் வெளிப்படும் வகையில் அர்ஜுனனுடன் போர் புரிந்தார். அர்ஜுனன் கேட்ட அரிய வரமாகிய, ஒளி பொருந்திய பாசுபத அத்திரத்தை அவனுக்கு அருளி, மேலும் எப்போதும் அம்புகள் நிறைந்து இருக்கக்கூடிய அம்பறாத்தூணியையும் வழங்கி அவனுக்கு அருள் புரிந்தவர் சாய்க்காடு தலத்தில் உறையும் பெருமான் ஆவார்.


பாடல் எண் : 05
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
மந்திரம் மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே.

பாடல் விளக்கம்‬:
இந்திரன், பிரமன், அக்னி, எண்வகை வசுக்கள், மற்றும் பல தேவர்கள் வேத மந்திரங்களை ஓதி, தக்கனை வாழ்த்திய போதும், அந்த வாழ்த்துக்கள் பலன் ஏதும் அளிக்கவில்லை. செய்யவேண்டியது என்ன, செய்யத்தகாதது என்ன என்பதனை உணர்ந்து கொள்ளாமல், சிவபிரானை புறக்கணித்து, அவரை நிந்தனை செய்து நடத்தப்பட்ட வேள்வியினை அழித்து, அந்த தக்கனால் சந்திரனுக்கு விதிக்கப்பட்ட சாபத்தை மாற்றி அருள் புரிந்தவர், சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.


பாடல் எண் : 06
ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக்
கூர் மழு ஒன்றால் ஓச்சக் குளிர் சடைக் கொன்றை மாலைத்
தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.

பாடல் விளக்கம்‬:
வெண்ணெய்ப் பசை மிகுந்து காணப்பட்ட பாலினால் இறைவனை நீராட்டி, மென்மையான கொன்றைக் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்ட விசாரசருமரின் (சண்டீசர் என்பது பின்னர் இறைவன் வழங்கிய திருநாமம்) செய்கையை பொறுக்காத அவரது தந்தை, சிவபூஜைக்கு இடையூறு செய்யும் வகையில் பால் குடங்களைத் தனது காலால் உதைத்தார்: தனது தந்தை செய்த இடையூற்றைத் தடுக்கும் பொருட்டு, அருகில் இருந்த கொம்பு ஒன்றினை, தனது தந்தையின் கால்களில் படுமாறு விசாரசருமர் வீசினார். சிவ அபராதம் எத்தகைய கடுமையான பாவம் என்பதை உணர்த்தும் வகையில், அந்த கொம்பு மழுவாளாக மாறி, எச்சதத்தரின் கால்களை வெட்டியது: தந்தையென்றும் பாராமல் சிவ அபராதம் செய்தவரை தண்டித்த விசாரசருமரின் செய்கையை பாராட்டி, தான் அணிந்திருந்த கொன்றை மாலையை அணிவித்து, சண்டீசர் என்ற நாமமும் அளித்து சிறப்பித்தவர் சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.


பாடல் எண் : 07
மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகமதாகி
வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே.

பாடல் விளக்கம்‬:
குற்றமற்ற மனத்தினை உடைய பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்பதற்காக சிவபிரான் ஒப்புக்கொண்டார்: மிகவும் வேகமாக, ஆயிரம் கிளைகளுடன் கங்கை நதி கீழே இறங்கி வந்த போது, உலகத்தையே புரட்டி பாதாளத்திற்கு கொண்டு செல்வது போல் வேகமாக வந்தது. ஆனால் சிவபெருமானின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டிருந்த தேவர்கள் ஐயம் ஏதும் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப கங்கை நதியைத் தனது சடையில் அடக்கிய சிவபிரானை தேவர்கள் வாழ்த்தினார்கள்: அத்தகைய ஆற்றல் படைத்தவர் தான் சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.


பாடல் எண் : 08
குவப் பெரும் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துவர்ப் பெரும் செருப்பால் நீக்கித் தூய வாய்க் கலசம் ஆட்ட
உவப் பெரும் குருதி சோர ஒரு கணை இடந்து அங்கப்பத்
தவப் பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே.

பாடல் விளக்கம்‬:
திரண்ட தோளினை உடைய வேடன் கண்ணப்பனார், வளைந்த வில்லினை ஒரு கையிலும் மற்றொரு கையில் இறைச்சியையும் வைத்திருந்ததால், செருப்பு அணிந்திருந்த கால்களால் இறைவனின் சன்னதியில் இருந்த காய்ந்த மலர்களை (முதல் நாள் இறைவனுக்கு சூட்டப்பட்ட மலர்கள்) நீக்கினார்: இறைவனை நீராட்டுவதற்காக நீரினைத் தனது வாயில் கொண்டு வந்த காரணத்தால், அவரது வாய் புனித நீர் அடங்கிய கலசமாக மாறியது: இறைவனது கண்களில் இரத்தம் வடிந்ததைக் கண்ட கண்ணப்பர், மிகுந்த விருப்பத்துடன் தனது கண்ணினை நோண்டி இலிங்கத்தில் பொருத்தினார்: அப்போது கண்ணப்பரின் கண்ணிலிருந்து இரத்தம் ஒழுகியது: அவர் தனது இரண்டாவது கண்ணினையும் நோண்ட முயற்சி செய்தபோது, கையினைப் பிடித்து அவரைத் தடுத்து நில்லு கண்ணப்ப என்று குரல் கொடுத்து,  கண்ணப்பரைத் தனது வலது பக்கத்தில் என்றும் இருக்குமாறு ஏற்றுக் கொண்டவர் சிவபிரான். சிவபிரானிடம் தான் கொண்ட அன்பினை வெளிப்படுத்திய வேடனை சிறந்த தெய்வமாக மாற்றியவர் சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.


பாடல் எண் : 09
நக்குலா மலர் பன்னூறு கொண்டு தன் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான் மென்மலர் ஒன்று காணாது
ஒக்கு மென்மலர்க் கண் ஒன்று அங்கு ஒரு கணை இடந்தும் அப்பச்
சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே.

பாடல் விளக்கம்‬:
விரிந்து மணம் வீசும் பல நூறு பூக்களைக் கொண்டு, சிவபெருமான் தான் உயர்ந்த மெய்ப்பொருள் என்ற உணர்வுடன் திருமால் சிறப்பான வழிபாடு செய்தபோது, ஒரு பூ குறைந்ததை உணர்ந்தார்: தனது கண்கள் தாமரைப் பூக்களை ஒக்கும் என்பதால், ஒரு அம்பினால் தனது கண் ஒன்றினை பேர்த்து எடுத்து, அதனை மலராக பாவித்து சிவபிரானுக்கு அர்ச்சனை செய்தார். திருமாலின் செயற்கரிய செய்கையைக் கண்ட சிவபிரான், அவருக்கு சக்கரம் அளித்து அருள் செய்தார். இவ்வாறு அருள் செய்தவர் சாய்க்காடு தலத்தில் உறையும் இறைவன் ஆவார்.


பாடல் எண் : 10
புயங்கள் ஐஞ்ஞான்கும் பத்தும் ஆய கொண்ட அரக்கன் ஓடிச்
சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.

பாடல் விளக்கம்‬:
இருபது தோள்களும் பத்து தலைகளும் கொண்ட அரக்கன் இராவணன், ஓடிச் சென்று, சிவபெருமான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயற்சி செய்த போது, கயிலை மலை அசைந்தது. அந்த அசைவினால் அழகிய மலர்கள் அணிந்த கூந்தலைக் கொண்ட பார்வதி தேவி அச்சம் கொண்டதைக் கண்ட சிவபெருமான் நகைத்தவாறே, அரக்கன் இராவணன் தனது முயற்சியை கைவிடுமாறு, தனது கால் விரலை சற்றே ஊன்றினார்; மலையின் கீழ் நெருக்குண்ட இராவணன், தான் செய்த தவற்றினை உணர்ந்து, தனது முயற்சியைக் கைவிட்டு, இறைவன் சிவபிரானை புகழ்ந்து சாமவேத கீதங்கள் பாட, அந்த பாடல்களால் மனம் மகிழ்ந்த சிவபிரான் தனது விரலை தளர்த்த இராவணன், சிவபிரான் அருளால் சந்திரகாசம் என்ற வாளும், நூறுகோடி வாழ்நாட்களும் பெற்றான். இதனால் அவனது கயிலை மலையை பேர்த்தேடுக்கும் முயற்சி தோல்வியுற்றாலும், அவனுக்கு சிவபிரான் அளித்த வரங்கள் மூலம் வெற்றி கிட்டியது. இவ்வாறு இராவணனின் தோல்வியையும் வெற்றியாக மாற்றி அருள் புரிந்தவர் சாய்க்காடு தலத்தில் உறையும் இறைவன் ஆவார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் திரு என். வெங்கடேஸ்வரன்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக