செவ்வாய், 14 ஜூலை, 2015

திருச்சக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை) திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : சக்கரவாகேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : தேவநாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 27 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


நீர் வளமும் நில வளமும் நிரம்பப் பெற்ற சோழ நாட்டின் முக்திப் பதிகள் பற்பல. அவற்றுள் காவிரித் தென்கரைத் தலங்கள் 128-ல் 17-ஆவது தலமாக விளங்குவது திருச்சக்கரப்பள்ளி ஆகும். இத்தலம் சக்கர மங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் சப்த ஸ்நான தலங்களும் சப்த மங்கைத் தலங்களும் பிரசித்தம். சப்த ஸ்நான தலங்களில் ஏழூர் திருவிழா நடப்பதுபோல் இந்த சப்த மங்கைத் தலங்களிலும் நடைபெறு கின்றது.

சப்த மங்கைத் தலங்களுள் இரண்டாவது தலமாகப் போற்றப்படுகிறது சக்கரப்பள்ளி. (மற்றவை - ஹரி மங்கை, சூல மங்கை, நந்தி மங்கை, பசு மங்கை, தாழை மங்கை, புள்ள மங்கை ஆகியன வாகும்.)

சப்த மங்கையர்களான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி ஆகியோர் வழிபட்ட சிவத் தலங்கள் என்பதனால் இவ்வேழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன. இவர்களுள் பிராம்மி வழிபட்ட தலமாக இந்த சக்கரப்பள்ளி சிறப்பிக்கப்படுகிறது.

மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. (இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இதை தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.)

திருமால் இங்கு வழிபட்டுச் சக்கரம் பெற்றார் என்பதனை, "வண் சக்கர மாலுறைப்பா வடி போற்றக் கொடுத்த பள்ளி" என தேவாரம் சிறப்பிக்கின்றது. சாபத்தின் விளைவாக சக்கரவாகப் பறவையாய் மாறிய பிரம்மா இங்கு வந்து தவமியற்றி, தீர்த்த நீராடி, பரமனை வழிபட்டு சுய உரு பெற்றுள்ளார். திருமால் வழிபட்டு சக்கரம் பெற்றதாலும், சக்கரவாகப் பறவை பூஜித்ததாலும் இத்தலம் சக்கரப்பள்ளி என்றானது. சக்கரவாகப் பட்சி வழிபட்ட தால் இத்தல நாதர் சக்கரவாகேஸ்வரர் எனப் போற்றப்படுகின்றார்.

இந்திரனின் மகன் சயந்தன், குபேரன் மற்றும் ஏனைய தேவாதி தேவர்களும் இத்தல ஈசனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். அநவித்யநாத சர்மா என்பவர் தனது மனைவி அனவிக்ஞையுடன் தினமும் இந்த ஏழு மங்கையர்த் தலங்களுக்கும் சென்று வழிபட்டு வீடுபேறு அடைந்ததாகத் தல புராணம் விவரிக்கின்றது.

கல்வெட்டுக்களில் இவ்வூர், "குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

திருஞான சம்பந்தர் இத்தலத்தின் மீது ஒரு பதிகம் பாடிப் போற்றியுள்ளார். அப்பர் பெருமான் தனது க்ஷேத்திரக் கோவையில் இத்தலத்தைப் புகழ்ந்துள்ளார். அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் மாலையொன்றைச் சாற்றியுள்ளார். சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல பதிகத்தை நாள் தோறும் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும் என்று திருஞானசம்பந்தர் தனது 11-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

நெடுஞ்சாலையை ஒட்டிய தெருவில் ஆலய நுழைவு வாயில் வளைவுடன் காணப் பெறுகிறது. சற்று நடந்தால் திருக்கோவில். திருக்கோவிலின் முதல் வாயில் மீது ரிஷபாரூடர் தரிசனம் தருகின்றார். உள்ளே மரங்கள் சூழ்ந்த விசாலமான இடம். அங்கே தெற்கு பார்த்த அம்பாள் சந்நிதி உள்ளது. முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பிலான இச்சந்நிதியுள் அருள்மழை பொழிகிறாள் அன்னை ஸ்ரீ தேவநாயகி. 

தேவாதி தேவர்களுக்கும் தலைவி இவள் தானே! அதனால் இப்பெயர். இவ்வம்பிகையின் எழிலில் அகிலமே மயங்கும். அவ்வளவு பொலிவினைத் தன்னுள் கொண்டு தரணியாள்கிறாள் அம்மை. அம்பாள் சந்நிதிக்கு எதிரே குங்கிலியக் குண்டம் உள்ளது. இதில் குங்கிலியப் பொடி போட்டு வழிபடும் மங்கையர் மாங்ல்ய பலம் பெறுவர் என்பது ஐதீகம்.

அன்னையை வலம் வர தாராளமான இட முள்ளது. சுற்றி வந்து, சுவாமி சந்நிதிக்குச் செல்லலாம். சுவாமி சந்நிதி மகா மண்டபம், அந்த்ராளம், மூலஸ்தானம் அமைப்பில் அமைந்துள்ளது. கருவறையுள் உயர்ந்த பாணம் கொண்டு அற்புதமாக அருள் பொழிகின்றார் ஸ்ரீ சக்கரவாகேஸ்வரர். ஆலயத்தை வலம் வருகையில் தேவ கோஷ்டங்களைக் கண்ணுறுகிறோம். கணபதி சந்நிதி தென்மேற்கு மூலையிலும்; முருகன் சந்நிதி வடமேற்கு மூலையிலும் அமைந் துள்ளன.

சண்டேஸ்வரருக்கு எதிரே காட்சி தரும் துர்க்கை சிவ துர்க்கையாக கையில் திரிசூலம் ஏந்தி அஷ்ட புஜங்கள் கொண்டு அதியற்புதமாகக் காட்சியளிக்கின்றாள். யமபயம் நீக்குவதோடு சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் வல்லமை மிக்கவள் இந்த துர்க்கை. சூரியன், சந்திரன் மற்றும் பைரவரின் சிலாரூபங்களும் காணப்படுகின்றன. மகா மண்டப வெளிச்சுவரில் புடைப்புச் சிற்பங்களாக சக்கரவாகப் பறவையும் பிராம்மியும் இறைவனைப் பூஜிக்கும் தல புராண நிகழ்ச்சி அழகுற வடிக்கப்பட் டுள்ளது.

ஆலய கட்டமைப்பு சோழர் கலை பாணியைப் பிரதிபலிக்கின்றது. இத்தலத்தின் தீர்த்தமாக பஞ்சாட்சர தீர்த்தமும் விருட்சமாக சந்தன மரமும் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் சுவாமி மலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தின் உபகோவிலாகச் செயல்படுகின்றது. தினமும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினசரி காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரையும்; மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். 

பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று சூரியன் இவ்விறைவனை வழிபடும் அற்புதக் காட்சியைக் காணலாம். பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா போன்ற விசேடங்களோடு வருடா வருடம் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவமும்; அதையொட்டி கண்ணாடிப் பல்லக்கில் சக்கரவாகேஸ்வரர் ஏழூர்கள் செல்லும் சப்த ஸ்தானப் பெருவிழாவும் சுவாமிநாத சுவாமி ஆலய நிர்வாகத்தால் சிறப்புற நடத்தப்படுகின்றன. இத்தல வழிபாடு திருட்டுப் பாவம், பிரம்மஹத்தி போன்ற தோஷத்தை நீக்குவதோடு, நவகிரக தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கையாகும்.

தஞ்சாவூரில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள அய்யம்பேட்டை என்ற ஊரில் நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது. சாலையில் திருக்கோயிலின் பெயர்ப் பலகை உள்ளது. அய்யம்பேட்டை என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் அய்யம்பேட்டை என்று கூறுகின்றனர். ஊர்ப் பெயர் அய்யம்பேட்டை. கோயிலிருக்கும் பகுதி சக்கரப்பள்ளி என்று வழங்குகிறது.


பாடல் எண் : 01
படையினார் வெண்மழு பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவு இடம் சக்கரப்பள்ளியே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் வெண்ணிற மழுவைப் படைக்கலனாக உடையவர். பாயும் புலித்தோலை அரையில் ஆடையாக அணிந்தவர். உமா தேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாகக் கொண்டவர். திருவெண்ணீற்றைப் பூசியவர். கங்கையைச் சடையிலே தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருச்சக்கரப்பள்ளி என்னும் கோயிலாகும்.


பாடல் எண் : 02
பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப்பள்ளியே. 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் அரிய நால்வேதங்களை ஓதி அருளியவர். குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். மண்டை யோட்டு மாலையுடன் எருக்கம் பூவும் அணிந்தவர். திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். தம்மை உறுதியாகப் பற்றி வழிபடும் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனைக் காலால் உதைத்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப் பள்ளி என்னும் திருக்கோயிலை உடைய ஊராகும்.


பாடல் எண் : 03
மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்
துன்னினார் உலகெலாம் தொழுது எழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப்பள்ளியே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் மின்னலைப் போன்ற சடையின் மீது, ஒளிக்கதிர்களை வீசுகின்ற சந்திரனையும், பொன் போன்ற கொன்றை மலரையும் நெருப்புப் பொறி போன்று விடத்தைக் கக்குகின்ற பாம்பையும் அணிந்தவர். உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு வேதங்களின் உட்பொருளாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 


பாடல் எண் : 04
நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழும் ஊர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப்பள்ளியே. 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்யும் பெருங்கருணையாளர். நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவர். வலிமையுடைய மழுவைப் படைக்கலனாக ஏந்தியவர். அப்பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் ஊர், வண்டுகள் ஒலிக்கின்ற, தேன் துளிகளைக் கொண்ட மலர்கள் மணம் வீச, வேகமாகப் பாயும் காவிரியாறு சலசல என ஒலிக்கும், மணிகளைக் கரையிலே ஒதுக்கும் வளமுடைய திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 


பாடல் எண் : 05
வெந்த வெண் பொடி அணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோடு அமரும் ஊர்
கந்தமார் மலரொடு காரகில் பல்மணி
சந்தினோடு அணை புனல் சக்கரப்பள்ளியே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்த வேதநாயகர். கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அவர் அழியா அழகுடைய மலைமங்கையான உமா தேவியோடு வீற்றிருந்தருளும் ஊர், நறுமணம் கமழும் மலர், அகில், பலவகை மணிகள், சந்தனமரம் இவை வந்தடைகின்ற நீர்வளமிக்க திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 


பாடல் எண் : 06 
பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலி புனல்
தாங்கினார் உறைவு இடம் சக்கரப்பள்ளியே.

பாடல் விளக்கம்‬:
உரிய தன்மையில் முப்புரங்களும் பாழ்பட்டு எரிந்து சாம்பலாகும்படி, கோபத்துடன், வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்தவர். தேவர்களும், அசுரர்களும் வணங்கும் பெருமை பெற்றவர். உமாதேவியைத் தம் உடம்பில் ஒரு கூறாகக் கொண்டவர். ஒலிக்கின்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 


பாடல் எண் : 07
பாரினார் தொழுது எழு பரவு பல்லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையம்
தாரினார் வளநகர் சக்கரப்பள்ளியே. 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் இப்பூவுலக மக்களெல்லாம் தொழுது போற்றும் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களை உடையவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். பேரொலியோடு பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். கொத்தாக மலரும் கொன்றை மலர்களை அழகிய மாலையாக அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.


பாடல் எண் : 08
முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அதிரிலா வல் அரக்கன் வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப்பள்ளியே. 

பாடல் விளக்கம்‬:
முதிர்வு அடையாத இள வெண்திங்களைச் சிவபெருமான் சடைமுடியில் சூடியவர். முன்பொருநாள் தம்மை எதிர்த்துப் போர் செய்து வெற்றி பெறுதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையில் திரிந்த அசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர். கயிலை மலையினால் வல்லசுரனான இராவணனின் வலிமையை அடக்கிய திறமையாளர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 


பாடல் எண் : 09
துணிபடு கோவணம் சுண்ண வெண் பொடியினர்
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும்
தணிவினர் வளநகர் சக்கரப்பள்ளியே. 

பாடல் விளக்கம்‬:
கிழிக்கப்பட்ட துணியைக் கோவணமாகச் சிவபெருமான் அணிந்தவர், மணம் கமழும் திருவெண்ணீற்றினைப் பூசியவர். பாம்பை மார்பில் ஆபரணமாக அணிந்தவர். குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். திருமாலும், பிரமனும் தங்களையே தலைவராகக் கருதிய செருக்கைத் தணியச் செய்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.


பாடல் எண் : 10
உடம்புபோர் சீவரர் ஊண்தொழில் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே.

பாடல் விளக்கம்‬:
உடம்பைப் போர்க்கும் சீவரம் என்று சொல்லப்படும் மஞ்சள் உடை உடுத்தும் புத்தர்களும், உண்பதையே தொழிலாகக் கொண்ட சமணர்களும் உரைப்பவை நஞ்சு போன்று கொடுமையானவை. மெய்ம்மையானவை அல்ல. அவற்றைப் பொருளாகக் கொள்ள வேண்டா. விரிந்து பரவும் புனிதநீர் கொண்டு அபிடேகம் செய்தும், மலர் மாலைகளைச் சார்த்தியும், குளிர்ந்த குளங்கள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து விளங்கும் திருச்சக்கரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் இறைவனை நாளும் வணங்குவீர்களாக.


பாடல் எண் : 11
தண்வயல் புடையணி சக்கரப்பள்ளி எம்
கண்ணுதலவன் அடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொல பறையும் மெய்ப்பாவமே.

பாடல் விளக்கம்‬:
குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய, நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் திருவடிகளை, திருக்கழுமல வளநகரில் அவதரித்த செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருச்சக்கரப்பள்ளி திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

1 கருத்து: