புதன், 29 ஜூலை, 2015

திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை : இரண்டாம் திருமுறை 21 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
புனலாடிய புன்சடையாய் அரணம் 
அனலாக விழித்தவனே அழகார் 
கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய் 
உனவார் கழல் கைதொழுது உள்குதுமே.

பாடல் விளக்கம்‬:
கங்கை நீரில் மூழ்கிய சடையை உடையவனே! முப்புரங்களையும் அழலெழுமாறு விழித்து எரித்தவனே! அழகிய நெருப்பில் நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலையுள் எழுந்தருளியவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம்.


பாடல் எண் : 02
துணையாக ஒர் தூ வள மாதினையும் 
இணையாக உகந்தவனே இறைவா
கணையால் எயிலெய் கழிப்பாலை உளாய்
இணையார் கழல் ஏத்த இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
தனக்குத் துணையாகுமாறு தூய அழகிய உமையம்மையையும் உன்திருமேனியின் ஒருபாகமாக இணைத்துக் கொண்டு மகிழ்ந்தவனே! இறைவனே! முப்புரங்களைக் கணையால் எய்து கழிப்பாலையில் மேவி இருப்பவனே! உன் இரண்டு திருவடிகளை ஏத்த இடர் கெடும்.


பாடல் எண் : 03
நெடியாய் குறியாய் நிமிர் புன்சடையின் 
முடியாய் சுடுவெண்பொடி முற்று அணிவாய்
கடியார் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்
அடியார்க்கு அடையா அவலம் அவையே.

பாடல் விளக்கம்‬:
மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே! திருநீற்றைத் திருமேனி முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியிருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா.


பாடல் எண் : 04
எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ
வளி காயம் என வெளி மன்னிய தூ 
ஒளியாய் உனையே தொழுது உன்னுமவர்க்கு 
அளியாய் கழிப்பாலை அமர்ந்தவனே.

பாடல் விளக்கம்‬:
அன்பர்க்கு எளியவனே! அல்லாதார்க்கு அரியவனே! நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் வெளிப்படையாக விளங்கும் தூய ஒளியோனே! உன்னையே வணங்கி நினைப்பவர்பால் அன்பு செய்பவனே! கழிப்பாலையில் விளங்கு பவனே.


பாடல் எண் : 05
நடம் நண்ணியொர் நாகம் அசைத்தவனே
விடம் நண்ணிய தூ மிடறா விகிர்தா
கடல் நண்ணு கழிப்பதி காவலனே
உடல் நண்ணி வணங்குவன் உன்னடியே.

பாடல் விளக்கம்‬:
நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாகக் கட்டியவனே! விடம் பொருந்திய தூயமிடற்றினனே! வேறுபட்ட பல வடிவங்களைக் கொண்டவனே! கடலை அடுத்துள்ள கழியில் விளங்கும் தலத்தில் விளங்குபவனே! என் உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குவது உன் திருவடிகளையாகும்.


பாடல் எண் : 06
பிறையார் சடையாய் பெரியாய் பெரிய
மறையார் தரு வாய்மையினாய் உலகில் 
கறையார் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்
இறையார் கழல் ஏத்த இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
பிறையணிந்த சடையினனே! பெரியோனே! பெருமை பொருந்திய வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய் உள்ளவனே! மண்ணுலகில் கருநிறம் பொருந்திய பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியவனே! எங்கும் தங்கும் உன் திருவடிகளை ஏத்த இடர்கெடும்.


பாடல் எண் : 07
முதிரும் சடையின் முடிமேல் விளங்கும் 
கதிர் வெண்பிறையாய் கழிப்பாலை உளாய்
எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு 
அதிரும் வினையாயின ஆசறுமே.

பாடல் விளக்கம்‬:
முதிர்ந்த சடை முடியின்மேல் விளங்கும் வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முன்னிலைப்பரவல் என்னும் வகையில் எதிர்நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு நடுக்கத்தைத் தரும் வினைகளாகிய குற்றங்கள் அகலும்.


பாடல் எண் : 08
எரியார் கணையால் எயில் எய்தவனே
விரியார் தரு வீழ்சடையாய் இரவில் 
கரி காடலினாய் கழிப்பாலை உளாய்
உரிதாகி வணங்குவன் உன்னடியே.

பாடல் விளக்கம்‬:
தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக்கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன்.


பாடல் எண் : 09
நல நாரணன் நான்முகன் நண்ணலுறக் 
கனலானவனே கழிப்பாலை உளாய்
உனவார் கழலே தொழுது உன்னுமவர்க்கு 
இலதாம் வினைதான் எயில் எயதவனே.

பாடல் விளக்கம்‬:
நன்மைகளைப் புரியும் திருமால், நான்முகன் இருவரும் அடிமுடி காண்போம் என்று உன்னை நண்ணியபோது கனல் வடிவோடு ஓங்கி நின்றவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முப்புரங்களை எய்து எரித்தவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளையே தொழுது நினைவார்க்கு வினைகள் இல்லையாகும்.


பாடல் எண் : 10
தவர் கொண்ட தொழில் சமண் வேடரொடும்
துவர் கொண்டன நுண்துகில் ஆடையரும் 
அவர் கொண்டன விட்டு அடிகள் உறையும் 
உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே.

பாடல் விளக்கம்‬:
தவத்தினராகிய வேடங்கொண்டு திரிவதைத் தொழிலாகக் கொண்ட போலியான சமண் துறவி வேடத்தினரும் பழுப்பு நிறம் ஏற்றிய நுண்ணிய ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தர்களும் ஆகிய அவர்கள் கொண்ட கொள்கைகள் உண்மையானவை அல்ல எனவிடுத்துத் தலைமைக் கடவுளாக விளங்கும் சிவபிரான் உறைவதும், உவர் நீரையுடைய உப்பங்கழிகளை உடையதும் ஆகிய கழிப்பாலையை நாம் நினைத்துப் போற்றுவோம்.


பாடல் எண் : 11
கழியார் பதி காவலனைப் புகலிப் 
பழியா மறை ஞானசம்பந்தன சொல் 
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார்
கெழியார் இமையோரொடு கேடு இலரே.

பாடல் விளக்கம்‬:
உப்பங்கழிகள் பொருந்திய தலமாகிய கழிப்பாலைத் தலைவனாகிய சிவபிரானை, புகலிப்பதிக்குரியவனாய் மறை நெறிவளரத் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்திருப்பதிகத்தை ஓதுவதையே வழிபாடாகக் கொண்டு போற்ற வல்லவர் வானோர்களோடு பொருந்தி விளங்குவர். கேடு முதலியன இல்லாதவர் ஆவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக