வெள்ளி, 24 ஜூலை, 2015

திருவிடைமருதூர் திருமுறை பதிகம் 09

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 15 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் 
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம் 
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில் 
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே.

பாடல் விளக்கம்‬:
பறை, பாடல், மறை ஆகிய மூன்றின் ஓசைகளும் தங்கியிருக்கும் வயற்புறங்களை உடையதும், இறைவனாகிய எங்கள் பிரான் எழுந்தருளியிருப்பதுமாகிய இடைமருதூரினில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்குகின்றது.


பாடல் எண் : 02
மனத்துள் மாயனை மாசுறு சோதியை
புனிற்றுப் பிள்ளை வெள்ளைம் மதி சூடியை
எனக்குத் தாயை எம்மான் இடைமருதனை
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே.

பாடல் விளக்கம்‬:
மனத்தினுள் மாயமாய் வந்து நிற்பவனும், குற்றமற்ற ஒளிவடிவானவனும், மிக்க இளமதியைச் சூடியவனும், எனக்குத் தாயானவனும், எம்மானும் இடைமருதூரில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய இறைவனை நினைத்திட்டு அன்பு ஊறி என் உள்ளம் நிறைந்தது.


பாடல் எண் : 03
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும் 
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனை 
எண்திசைக்கும் இடைமருதா என
விண்டுபோய் அறும் மேலை வினைகளே.

பாடல் விளக்கம்‬:
வண்டணைந்த வன்னியும், மத்தமுமாகிய மலர்களைக் கொண்டு அணைந்த சடைமுடிக் கூத்தப் பிரானை, எண்டிசைக்கும் தலைவனாகிய இடைமருதா என்று கூற, நம் பழைய வினைகள் நம்மைவிட்டுப் பிரிந்து கெட்டு நீங்கும்.


பாடல் எண் : 04
துணையிலாமையில் தூங்கு இருள் பேய்களோடு 
அணையலாவது எமக்கு அரிதே எனா
இணையிலா இடைமா மருதில் எழு 
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே.

பாடல் விளக்கம்‬:
ஊழிக்காலத்துப் புலராது தாழ்க்கும் இருளில் முதல்வன் தனக்கு உடனிருப்பார் பிறரொருவரும் ஆண்டு இன்மையின், தன் கணங்களாகிய பேய்களோடு அணைந்து காலத்தைக் கழித்தல் அரிதென்று எண்ணி ஒப்பற்றதாகிய திருவிடை மருதூரில் எழுந்த மருதமரத்தின் கீழிருந்து தன் பாங்கியாகிய உமையம்மைக்கே ஆகமம் உரைப்பாராயினர்.


பாடல் எண் : 05
மண்ணை உண்ட மால் காணான் மலரடி
விண்ணை விண்டு அயன் காணான் வியன்முடி
மொண்ணை மாமருதா என்று என் மொய்குழல் 
பண்ணையாயமும் தானும் பயிலுமே.

பாடல் விளக்கம்‬:
மண்ணுலகை உண்ட திருமால் மலரடி காணான், என்றும் விண்ணுலகைப் பிளந்து பறந்து சென்ற நான்முகன் வியன்முடி காணான் என்றும், மாமருதூரில் இருப்பவனே எனக்கருள் என்றும் என் மொய்குழலாளாகிய மகள் விளையாட்டுக்குரிய தன்தோழியர் கூட்டத்துடன் உரைத்து மகிழ்வாள். பருவம் எய்தாதாரையும் தன்பால் ஈர்ப்பவன் முதல்வன் என்றபடி.


பாடல் எண் : 06
மங்கை காணக் கொடார் மண மாலையை
கங்கை காணக் கொடார் முடிக் கண்ணியை
நங்கைமீர் இடைமருதர் இந் நங்கைக்கே 
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே.

பாடல் விளக்கம்‬:
பெண்களே, இடைமருதர் இந்த என்மகளாகிய நங்கைக்குக் கொன்றையைக் கொடுத்துள்ளார் (கொன்றை மலரின் நிறமாகிய பசலையைக் கொடுத்துள்ளார்.) ஆயின், அவர் மார்பில் தாராக உள்ள மணமாலையைக் கொடுப்பின், பக்கத்தில் இருக்கும் பார்வதி காண்பள்; ஆகலின் அதனைக் கொடுத்தல் இயலாது. இனித் தமது முடியின் கண்ணதாகிய கண்ணியையும் கங்கை ஆண்டிருந்து காண்பாள் ஆகலின் கொடுத்தல் இயலாது. மற்று எங்கிருந்து இப் பசலையாகிய கொன்றையைப் பெற்று இவளுக்கு இவர் கொடுத்தது?

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக