திங்கள், 20 ஜூலை, 2015

திருவெண்காடு திருமுறை பதிகம் 05

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ வெண்காட்டு நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை 35 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
தூண்டு சுடர்மேனித் தூ நீறாடிச் 
சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம்
பூண்டு பொறியரவம் காதில் பெய்து 
பொன்சடைகள் அவை தாழ புரி வெண்ணூலர்
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி 
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சம் கொண்டார்
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பாடல் விளக்கம்‬:
தாம் விரும்பியவாறே விரைந்தும் தாவியும் மெல்லென்றும் நடக்கும் காளையை இவர்ந்து திருவெண்காட்டை விரும்பி அடைந்த, உலகியலுக்கு வேறுபட்ட பெருமான், தூண்டப் பட்ட விளக்கினது ஒளி போன்ற பிரகாசம் உடைய திருமேனியில் வெண்ணீறணிந்து, சூலத்தைக் கையில் ஏந்திச் சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு, காதிலும் பாம்பினை அணிந்து, பொன் போன்ற சடைகள் தொங்கப் பூணூல் அணிந்தவராய் நீண்டு கிடந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி நீண்ட தெருவழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.


பாடல் எண் : 02
பாதம் தனிப் பார்மேல் வைத்த பாதர் 
பாதாளம் ஏழ் உருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் 
ஏழ் உலகுமாய் நின்ற ஏகபாதர்
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி 
ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கியபின்
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பாடல் விளக்கம்‬:
வெண்காடு மேவிய விகிர்தனார் தம் திருவடிகளை மனத்துக் கொள்ளும் அடியவர்களுக்குத் திருவடி தீட்சை செய்து, பாதலத்தையும் கடந்து, கீழ் உருவிச் சென்ற திருவடிகளை உடையவராய், யாருக்கும் தீங்கு நேராதவகையில் ஏழுலகமாய் நின்ற ஒரே திருவடியை உடையவராய், ஊழி வெள்ளத்தின் ஒலி, உலகையெல்லாம் வெள்ளம் மூழ்குவித்து அவ்வுலகமெல்லாம் அழிந்த பின்னர் அடங்கிய போது, தாம் ஒடுங்காது வேதம் ஓதி வீணையை இசைத்து அவ்வொலியில் மகிழ்வர்.


பாடல் எண் : 03
நென்னலையோர் ஓடேந்திப் பிச்சைக்கு என்று
வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன்
அந்நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் 
அருகே வருவார் போல் நோக்குகின்றார்
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ
என்றேனுக்கு ஒன்றாகச் சொல்லமாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் 
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பாடல் விளக்கம்‬:
மெல்லிய தனங்களை உடைய மகளிர் கூடி விரும்பி விளையாடும் வெண்காடு மேவிய விகிர்தனார் நேற்று ஒரு மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை பெறுவதற்காக வந்தாராக `இதோ வந்துவிட்டேன்` என்று வீட்டிற்குள் புகுந்து உணவுடன் நான் மீண்டு வர நின்ற இடத்திலேயே நின்று கொண்டு யான் இடவந்த பிச்சையை ஏற்காமல் பக்கத்தில் வருபவரைப் போல என்னைக் கூர்ந்து நோக்கினார். `உம் மன நிலை எவ்வாறு இருக்கிறது? உம்முடைய ஊர் யாது?` என்று வினவிய எனக்கு மறுமாற்றம் தாராமலே நின்று பின் சென்று விட்டார்?.


பாடல் எண் : 04
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி 
ஐவாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி
போகம் பல உடைத்தாய்ப் பூதம் சூழப்
புலித்தோல் உடையாப் புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி 
பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த 
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பாடல் விளக்கம்‬:
பார்வதியைப் பாகமாகக் கொண்டு கங்கையைத் தலையில் சூடி ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் காளையை இவர்ந்து சிவபோகத்தை நுகரும் பூதங்கள் பலவும் தம்மைச் சூழப் புலித்தோலை உடுத்து இல்லத்துப் புகுந்து நின்ற அவருக்கு உணவு வழங்க வந்த என்னை உள்ளத்தால் பற்றிக் கூர்ந்து நோக்கி என் அடக்கம் என்ற பண்பினை அழித்துத் தீ வினையை உடைய என் வளைகளை, மேக மண்டலத்தை அளாவிய சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனார் கவர்ந்து சென்றுவிட்டார்.


பாடல் எண் : 05
கொள்ளைக் குழைக் காதின் குண்டைப் பூதம்
கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல 
உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன்
கள்ளவிழி விழிப்பார் காணாக் கண்ணால்
கண்ணுள்ளார் போலே கரந்து நிற்பர்
வெள்ளச் சடைமுடியர் வேத நாவர் 
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பாடல் விளக்கம்‬:
மிக்க ஒளியை உடைய குழைகளை அணிந்த, பருத்துக் குறிய வடிவுடைய பூதங்கள் கொடுகொட்டி என்ற பறையை இசைத்துக் கூத்தாடிப்பாட, என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு போவாரைப் போல என்னைச் சுற்றி வருகிறார். நான் அவரை உள்ளவாறு அறிய இயலாதேனாய்த் திரும்பினேன். என்னை நேரில் பாராதவரைப் போல அரைக் கண்ணால் பார்க்கிறார். கண்ணுக்கு அகப் படுபவரைப் போலக் காட்டி மறைந்து நிற்கிறார். அவர் கங்கையைச் சடையில் கொண்டவர். வேதம் ஓதிய நாவினை உடையவராய் வெண்காடு மேவிய விகிர்தனார் ஆவர்.


பாடல் எண் : 06
தொட்டிலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி 
சுடர்க் கொன்றைத்தார் அணிந்து சுவைகள் பேசிப்
பட்டிவெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார்
பார்ப்பாரைப் பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால்
கட்டிலங்கு வெண்நீற்றர் கனலப் பேசிக் 
கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர் 
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பாடல் விளக்கம்‬:
காலையும் மாலையும் எப்பொழுதும் மின்னுகின்ற சடைமுடியை உடையவராய், வேதம் ஓதும் நாவினராய், வெண்காடு மேவிய விகிர்தனார், ஏவிப்பணி கொள்ளும் சூலம் மழு என்ற படைகளை ஏந்தியவராய், ஒளி வீசும் கொன்றைப் பூ மாலையை அணிந்து இருபொருள்படச் சுவையான சொற்களைப் பேசித் தொழுவத்தில் தங்கக் கூடிய வெண்ணிறக் காளையை இவர்ந்து வந்து பிச்சையையும் ஏற்காதவராய்த் தம்மை நோக்கி நிற்பவர் இயல்பினை அழிக்கின்றவர் போல, முப்பட்டைகளாகத் திருநீற்றை அணிந்து எனக்குக் காமத் தீ ஏற்படும் வகையில் பேசி என் உள்ளத்தில் அடக்கத்தை நீக்கி என் வளைகளையும் கவர்ந்து சென்று விட்டார்.


பாடல் எண் : 07
பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கைக்
கோணாகம் பூண்பனவும் நாணாம் சொல்லார்
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் 
உண்பதுவும் நஞ்சன்றேல் ஓவியுண்ணார்
பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப்
பாலைப் பரிசு அழிய பேசுகின்றார்
விண்பால் மதிசூடி வேதம் ஓதி 
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பாடல் விளக்கம்‬:
நங்காய்! வானத்தில் இயங்கும் பிறையைச் சூடி, வேதம் ஓதி, வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியைப் பாகமாகக் கொண்டு, பெண்கள் விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து கொடிய பாம்புகளைப் பூண்டு நான் வெட்கப் படும்படியாக என்னை நலம் பாராட்டுவார். உலகில் உண்பார் உறங்குவார் செயல்களோடு அவருடைய செயல்கள் ஒவ்வா. அவர் விடம் ஒன்றே உண்பார். அன்றேல் கஞ்சத்தனத்தால் உண்பதனை விடுத்து உண்ணாதே இருப்பார். அழகாக விரிந்த சடையுடையவர். என்னை நெருங்கி வந்து கூர்ந்து பார்த்துப் பாலினும் இனிமையாக என்னிடம் பேசுகின்றார்.


பாடல் எண் : 08
மருதங்களா மொழிவர் மங்கையோடு 
வானவரும் மால் அயனும் கூடி தங்கள்
சுருதங்களால் துதித்து தூ நீராட்டித் 
தோத்திரங்கள் பலசொல்லித் தூபம் காட்டிக்
கருதுங்கொல் எம்பிரான் செய் குற்றேவல்
என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி 
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பாடல் விளக்கம்‬:
வெண்ணிறக் காளையை இவர்ந்து வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியிடம் அவள் ஊடலைப் போக்கும் சொற்களைப் பேசுபவராய்த் தேவர்களும் திருமாலும் பிரமனும் கூடி வேத வாக்கியங்களால் துதித்து அபிடேகம் செய்து தோத்திரங்கள் பலவற்றைச் சொல்லி நறுமணப் பொருள்களைப் புகைத்து, ` எம்பெருமான் யாங்கள் செய்யும் குற்றேவல்களை மனத்துக் கொள்வாரோ என்று வேண்டுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்துத் தமக்கு வேறுபட்ட செயல்கள் உளவாகக் கொண்டு அவற்றிற்காக இடம் பெயர்ந்து செல்வர்.


பாடல் எண் : 09
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் 
காணார் பொறியழலாய் நின்றான் தன்னை
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை 
உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான் தன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும் 
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார்
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பாடல் விளக்கம்‬:
வெண்காடு மேவிய விகிர்தனார், கருடனை உடைய திருமாலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் கீழும் மேலும் தேடிச் சென்றும் காண இயலாதவராய்ப் பொறிகளை வெளிப்படுத்தும் அழற்பிழம்பாய் நின்றவராய் எல்லாப் பொருள்களின் உள்ளிடத்தும் இருப்பவராய், அடியார்கள் விரும்பும் பல உருவங்களையும் உடையவராய்த் தேன் நிறைந்த கொன்றைப் பூவை அருச்சித்து நீங்காமல் நன்னெறியில் நின்று தவம் செய்த ஐராவதம் என்ற வெள்ளானைக்கு அது வேண்டிய வரங்களைக் கொடுப்பவர் ஆவர்.


பாடல் எண் : 10
மாக்குன்று எடுத்தோன் தன் மைந்தனாகி 
மாவேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்கும் துணைத் தேவரெல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் தன்னைக்
காக்கும் கடல் இலங்கைக் கோமான் தன்னைக்
கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் 
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பாடல் விளக்கம்‬:
வெண்காடு மேவிய விகிர்தனார் கோவர்த்தனத்தைக் குடையாக உயர்த்திய கண்ணனாகிய திருமாலின் மகனாய்க் கரும்பையே வில்லாகக் கொண்ட மன்மதனுக்குத் துணையாக வந்த தேவர்களெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற போதே ஒரே நொடி நேரத்தில் அவன் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் நோக்கியவர். கடலே அரணாகப் பாதுகாக்கப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய ஒளிவீசும் மகுடம் தாங்கிய தலைகளும் கண்களும் நசுங்கி வெளிப்புறம் தோன்றுமாறு தம் திருவடி விரலை ஊன்றி அவனுடைய செருக்கினை அடக்கியவர் ஆவர்.


தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

1 கருத்து:

  1. இப்படிப்பட்ட சிறந்த திருப்பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் காலத்தால் சிறப்படையும் அய்யனே - சிவயநம

    பதிலளிநீக்கு