இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ வெண்காட்டு நாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி
திருமுறை : ஏழாம் திருமுறை 06 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பாடல் எண் : 01
படங்கொள் நாகம் சென்னி சேர்த்திப் பாய் புலித்தோல் அரையில் வீக்கி
அடங்கலார் ஊர் எரியச் சீறி அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்
மடங்கலானைச் செற்று உகந்தீர் மனைகள் தோறும் தலைகை ஏந்தி
விடங்கராகித் திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே.
பாடல் விளக்கம்:
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், படத்தையுடைய பாம்பைத் தலையிலே வைத்து, பாய்கின்ற புலியினது தோலை அரையிற் கட்டி, பகைவரது திரிபுரங்கள் எரிந்தொழியுமாறு வெகுண்டு, அந்நாளிற்றானே அவ்வூரிலுள்ள மூவருக்கு அருள் பண்ணினீர்; கூற்றுவனை முன்னர்க் கொன்று, பின்னர் உயிர்ப்பித்து, அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர்; இன்ன பெருமைகளையுடையீராய் இருந்தும், தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?.
பாடல் எண் : 02
இழித்து உகந்தீர் முன்னை வேடம் இமையவர்க்கும் உரைகள் பேணாது
ஒழித்து உகந்தீர் நீர்முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காமவேளை அவனுடைய தாதை காண
விழித்து உகந்த வெற்றி என்னே வேலை சூழ் வெண்காடனீரே.
பாடல் விளக்கம்:
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், அரி பிரமர்க்கும் அவரது முன்னை உடம்புகளை நீக்கி, அவற்றை விரும்பித் தோள்மேற் கொண்டீர்; `என்றும் இறவாதபடி காப்பவன்` என்னும் புகழை விரும்பாது, எல்லாப் பொருள்களையும் அழித் தொழித்து, அதன் பின்னர் அவைகளை மீளத் தோன்றச் செய்தலை விரும்பினீர்; அங்ஙனமாக, நீர் முன்பு மேற்கொண்ட, மேலான தவத்தினை, தேவர் வேண்டிக் கொண்டமையால் அழித்தற்கு வந்த மன்மதனை, அவனுடைய தந்தையாகிய திருமால் ஒன்றும் செய்யமாட்டாது பார்த்துக் கொண்டிருக்க நெற்றிக்கண்ணால் எரித்து, பின் உயிர்ப்பித்த வெற்றியை விரும்பியது என்?.
பாடல் எண் : 03
படைகள் ஏந்தி பாரிடம்மும் பாதம் போற்ற மாதும் நீரும்
உடையோர் கோவணத்தராகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே
சடைகள் தாழக் கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே.
பாடல் விளக்கம்:
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், பூதகணங்கள் பலவகையான படைகளை ஏந்திக் கொண்டு உம் திருவடிகளை வணங்கித் துதிக்க. உம் தேவியுடனே. உடையைக் கோவண உடையாக உடுத்துக்கொண்டு, சடைகள் நீண்டு அசையக் கூத்தாடிக் களித்துப் பின்னர், இல்வாழ்க்கை யுடையாரைப் பெருமையாகச் சொல்லி, அவர்தம் இல்லங்களில் பிச்சைக்குத் திரிதல் என்? உமது உண்மை நிலையைச் சொல்லியருளீர்.
பாடல் எண் : 04
பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண் உளீராய்க் கருத்தில் உம்மைக் கருதுவார்கள் காணும் வண்ணம்
மண் உளீராய் மதியம் வைத்தீர் வான நாடர் மருவி ஏத்த
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே.
பாடல் விளக்கம்:
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், விண்ணுலத்தில் உள்ளோர் சூழ்ந்து போற்ற ஆங்கு உள்ளீராய் இருந்தும், இம் மண்ணுலகத்தில் பண்களாகியும், அவற்றையுடைய பாட்டுக்களாகியும், அடியார்களது உள்ளத்தில் நிறைந்தும், மக்கள் முதலிய உயிர்களின் கண்களாகியும், உம்மை உள்ளத்தில் நினைபவர், புறத்தேயும் காணும்படி உருவங் கொண்டும் இருத்தல் என்?.
பாடல் எண் : 05
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடம் எடுத்து ஒன்று ஆடிப் பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம்
வடம் எடுத்த கொங்கை மாதோர் பாகமாக வார் கடல் வாய்
விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே.
பாடல் விளக்கம்:
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, அடியார்கள் குடத்தைச் சுமந்து நீரையும் பூவையும் ஈட்டிக் கொண்டு வந்து உமக்குப் பணிசெய்ய, நீர், உம்மை என்றும் பிரியாது உடனிருத்தற் பொருட்டு, மணிவடம் அணிந்த தனங்களையுடைய மங்கை ஒரு பாகத்தில் இருக்க நடனத்தை மேற்கொண்டு, ஆடலும் பாடலும் நன்கு இயைய ஆடியும் பாடியும் அவர்கட்கு இன்பந் தருவீர்; அவ்வாறிருந்தும், நீண்ட கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் வைத்தது என்?.
பாடல் எண் : 06
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றைப்
பீறி இட்டமாகப் போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம் தோறும்
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி
வேறுபட்டுத் திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே.
பாடல் விளக்கம்:
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர் உம்மொடு மாறுபட்டு நின்ற, காட்டில் வாழப்பிறந்த, வலிய களிற்றை உரித்து, அதன் தோலை, விருப்பம் உண்டாகப் போர்த்தீர்; அன்ன வீரத்தை உடையீராயும், உமக்கு ஒரு கூறாகப் பொருந்திய மங்கையும் நீரும் எருதையே ஊர்தியாகச் செறிய ஊர்தலும், பிறர் இடுகின்ற பிச்சைக்கென்று இல்லந்தோறும் திரிதலும் செய்து, நுமது பெருமையினின்றும் வேறுபட்டு ஒழுகுதல் என்?.
பாடல் எண் : 07
காதலாலே கருது தொண்டர் காரணத்ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்
நீதியாக ஏழில் ஓசை நித்தராகிச் சித்தர் சூழ
வேதம் ஓதித் திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே.
பாடல் விளக்கம்:
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், உம்மை நினைக்கின்ற அடியார் நிமித்தமாக நின்று, பூதங்கள் பாட, உலகம் உயர்த்துக்கூறுமாறு, நடனத்தை விரும்பி ஆட வல்லீர்; அவ்வாறாகவும், உலகியல் விளங்குதற் பொருட்டு, யோகியர் சூழ, ஏழிசையின் வழி நிலைத்து நின்று, வேதத்தை ஓதித் திரிதல் என்?.
பாடல் எண் : 08
குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர் பாகமாய மங்கை அஞ்சி
வெருவ வேழம் செற்றது என்னே வேலை சூழ் வெண்காடனீரே.
பாடல் விளக்கம்:
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், `குரா மலர், கொன்றை மலர், ஊமத்த மலர்,பிறை, தனங்களையுடைய நங்கையாகிய கங்கை, பாம்பு` ஆகிய எல்லாம் தலை மயங்கிக் கிடக்கின்ற சடையினை யுடையீர்; யாவர்க்கும் மூத்தீர்; அங்ஙனமாயினும், எஞ்ஞான்றும் உம்மையே கருத்தில் வைத்துப் பாடுகின்ற என்மேல் உள்ள பாவத்தைப் போக்கீராதலோடு, உமது பாகத்தில் உள்ள மங்கை மிகவும் அச்சங் கொள்ளுமாறு, யானையை உரித்துப் போர்த்தது என்?.
பாடல் எண் : 09
மாடம் காட்டும் கச்சி உள்ளீர் நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனே தான்
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலுமாய
வேடம் காட்டி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே.
பாடல் விளக்கம்:
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், உம்மைத் தெளிந்த உள்ளத்துடன் நினைப்பவர் முன்னே, உயர்ந்த மாளிகைகளையுடைய கச்சியம்பதியில் எழுந்தருளியுள்ளீர்; என்றாலும், பேய்கள் பாடும் காட்டில் ஆடலை உடையீர்; அதுவன்றியும், அயனும் மாலும் தமது தலைமையை ஆய்ந்து காணுதற்குக் கொண்ட சான்றிடத்து, அவர்கள் உம்மை அணுகாதவாறு தீப் பிழம்பாய் நின்ற வடிவத்தையே எங்கும் காட்டித் திரிவது என்? உம்மையாங்கள் வழிபடுவது எவ்வாறு?.
பாடல் எண் : 10
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தனாய வேதன் தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன்
அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே.
பாடல் விளக்கம்:
விரிவாகச் செய்யப்பட்டுள்ள வேதங்களை ஓத வல்லவர் வாழ்கின்ற, கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள, யாவர்க்கும் மூத்தோனாகிய அந்தணனை, அவனுக்குத் தொண்டனும், அவன் அடியார்க்கு அடியனும் அகன்ற சோலையையுடைய திருநாவலூரனும் ஆகிய நம்பியாரூரன் விருப்பத்தொடு சிலவற்றை வினவிச் செய்த, தமிழ்ச்சொற்களாலாகிய மாலை பத்தினையும், அவன் தெரித்துச் சொன்ன குறிப்பில் நின்று பாட வல்லவர், கோட்டம் நீங்கிய உணர்வினையுடையராய். சிவலோகத்தில் இருப்பவராவர்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| --- திருவெண்காடு திருமுறை பதிகம் முற்றிற்று --- ||
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக