திங்கள், 13 ஜூலை, 2015

திருச்சாய்க்காடு திருமுறை பதிகம் 04

இறைவர் திருப்பெயர் : சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : குயிலினும் நன்மொழியம்மை

திருமுறை : ஆறாம் திருமுறை 82 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் 
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்
தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும்
தில்லை நடமாடும் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
நன்மையும் தீமையும் ஆனார் போலும்
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

பாடல் விளக்கம்‬:
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே வானத்து விளங்கிய இளமதியும் பாம்பும் தம்முள் நிலவும் பகை நீங்கி வாழ அவற்றை நீள் சடைமேல் வைத்தவரும், வண்டு தேனை உண்டு மகிழ்ந்து பாடும் தில்லையில் நடனமாடும் தேவரும், ஞானமாகிய ஒளிப்பிழம்பாய் நின்றவரும், நன்மையும் தீமையும் ஆனவரும், அடியார்க்குத் தேன் போன்று தித்திப்பவரும் ஆவார்.


பாடல் எண் : 02
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்
வியன் துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்
பண்ணார் களி வண்டு பாடி ஆடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலும் 
திண்ணார் புகார் முத்து அலைக்கும் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

பாடல் விளக்கம்‬:
மணல்செறிந்த புகாரின்கண் முத்துக்களை எறிகின்ற தெளிந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, விண்ணோர்கள் தொழுது வேண்ட நஞ்சுண்டவரும், பரந்த துருத்தியிடத்தும் வேள்விக்குடியிடத்தும் உறைபவரும், அண்ணா மலையில் உறையும் அண்ணலவரும், அதியரைய மங்கையில் அமர்ந்தவரும், மிக்குப் பொருந்திய மதுக்களிப்பையுடைய வண்டுகள் பண்ணினைப் பாடிப் பறந்துலவும் பராய்த்துறையிடத்து மேவிய பரமரும் ஆவார்.


பாடல் எண் : 03
கானிரிய வேழம் உரித்தார் போலும் 
காவிரிப் பூம்பட்டினத்து உள்ளார் போலும்
வானிரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும்
வடகயிலை மலையது தம் இருக்கை போலும்
ஊனிரியத் தலை கலனா உடையார் போலும்
உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் 
தேனிரிய மீன் பாயும் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

பாடல் விளக்கம்‬:
மலர்களிடத்துத் தேன் ஒழுகும் வண்ணம் மீன்கள் அவற்றைத் தாக்குகின்ற தெளிந்த நீர்ப் பொய்கைகள் மிக்க திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே காட்டினின்றும் மற்ற விலங்குகள் நீங்கிப்போமாறுவரும் களிற்றியானையை உரித்தவரும், காவிரிப் பூம்பட்டினத்து உள்ளவரும், தேவர்கள் கெட்டோடும் வண்ணம் வானத்தில் பறந்து வரும் திரிபுரங்களையும் எரித்தவரும், வடகயிலையைத் தம் இருக்கையாகக் கொண்டவரும், தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவரும், பிரளய காலத்து ஊழி வெள்ளத்து மேலே உயர்ந்து விளங்கும் தோணிபுரத்து உறையும் ஒப்பற்றவரும் ஆவார்.


பாடல் எண் : 04
ஊனுற்ற வெண்தலை சேர் கையர் போலும்
ஊழி பல கண்டிருந்தார் போலும்
மானுற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்
கானுற்ற ஆடல் அமர்ந்தார் போலும்
காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் 
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றும் 
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

பாடல் விளக்கம்‬:
தேன் நிறைந்த சோலைகளின் நடுவில் விளங்கித் தோன்றும் திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, தசை பொருந்தி இருந்த வெள்ளிய தலையோடு சேர்ந்த கையினரும், பல ஊழிகளைக் கண்டவரும், மான் பொருந்திய கரதலம் ஒன்றுடையவரும், திருமறைக்காட்டை அணுகியுள்ள கோடிக்கரையில் மகிழ்ந்து உறைபவரும், காட்டில் ஆடலை விரும்பியவரும், காமனைக் கண்ணிடத்துத் தோன்றிய அழலால் அழித்தவரும் ஆவார்.


பாடல் எண் : 05
கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்
காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் 
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்
ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் 
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

பாடல் விளக்கம்‬:
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே கார் காலத்தில் நிரம்பப் பூக்கும் கொன்றைப் பூவாலாகிய தாரினை உடையவரும், காலனை ஓருதையால் வீழக்கண்டவரும், நிறைந்து நின்று பூமியினுள்ளாரால் புகழப் படுபவரும், திருப்பருப்பதத்தில் எக்காலத்தும் மகிழ்ந்து நின்றவரும், மிக்க பிச்சை பெறுதற்காக ஊரின்கண் அலைபவரும், ஓத்தூரை ஒருகாலும் நீங்காதவரும், தாள அறுதியுடன் கூடிய பாடலை விரும்புபவரும் ஆவார்.


பாடல் எண் : 06
மாவாய் பிளந்து உகந்த மாலும் செய்ய
மலரவனும் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
முதுகுன்ற மூதூர் உடையார் போலும்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக் 
குரை கழலால் அன்று, குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க்கு அரியார் போலும் 
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

பாடல் விளக்கம்‬:
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, கேசி என்னும் குதிரையின் வாயைக் கிழித்து மகிழ்ந்த திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகனும் ஆகிய இருவரும் தாமேயாய் நின்றவரும், என்றும் மாறுபடாமல் ஒருபடித்தாய்த் திகழும் மேனியுடைய முதல்வரும், முதுகுன்றமாகிய மூதூரினரும், முனிவர் தலைவனாகிய மார்க்கண்டேயன் மேல் வந்த கூற்றுவனை ஒலிக்கும் கழல் அணிந்த பாதத்தால் அன்று உதைத்தழித்தவரும் தேவர்க்குத் தலைவர் ஆகிய பிரம விட்டுணு இந்திரர்க்கு அரியவரும் ஆவார்.


பாடல் எண் : 07
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்
காரோணத்து என்றும் இருப்பார் போலும்
இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்
ஏகம்பம் மேவி இருந்தார் போலும்
படி ஒருவர் இல்லாப் படியார் போலும்
பாண்டிக்கொடு முடியும் தம்மூர் போலும்
செடிபடு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

பாடல் விளக்கம்‬:
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, பெரிய ஆகாயத்தோடு கூட்டி எண்ணப்படுகின்ற ஐம்பூதங்களும் ஆனவரும், காரோணத் தலங்களில் என்றும் இருப்பவரும், இடிக்கும் குரலைக் கொண்ட வாயையுடைய பூதப்படையினரும், ஏகம்பத்தை விரும்பி அதன் கண் இருந்தவரும் பிறர் ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவரும், பாண்டிக்கொடுமுடியையும் தம் ஊராகக் கொண்டவரும் அடியாருடைய துன்பத்திற்குக் காரணமான நோயைத் தீர்ப்பவரும் ஆவார்.


பாடல் எண் : 08
விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்
வெண்ணீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் 
சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும்
சிலையினார் செங்கண் அரவர் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

பாடல் விளக்கம்‬:
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, விலையில்லாத மாலையணிந்த மார்பரும், வெண்ணீற்றை மெய்யிற் பூசிய விகிர்தரும், (மற்றையாரின் வேறுபட்டவர்) மலையரையன் மங்கையின் மணாளரும், மாற்பேற்றினைத் தம் இடமாய்க் கொண்டு மகிழ்ந்தவரும், தோல்வி அறியாத பகைவருடைய மூன்று புரங்களையும் தொலைத்தவரும், சோற்றுத்துறை, துருத்தி ஆகிய தலங்களில் உள்ளவரும், வில்லில் நாணாகப் பூட்டிய பாம்பினை உடையவரும் ஆவார்.


பாடல் எண் : 09
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்
அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகை நகையாள் பாகர் போலும்
முன்னமே தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடமாடும் தேவர் போலும் 
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

பாடல் விளக்கம்‬:
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, அடியாருடைய அல்லலை அறுப்பவரும், தம்மை அடைந்தார்க்கு அமருலக ஆட்சியை அளிப்பவரும், நல்லத்திலும் நல்லூரிலும் பொருந்தி நின்று காட்சி அளிப்பவரும், நள்ளாற்றை என்றும் பிரியா தவரும், முல்லைமொட்டுப் போன்ற பற்களை உடைய பார்வதியின் பாகரும், உயர்திணை யஃறிணைப் பொருள்கள் யாவற்றிற்கும் முன்னே தோன்றியவரும், தில்லை அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் தேவரும் ஆவார்.


பாடல் எண் : 10
உறைப்புடைய இராவணன் பொன்மலையைக் கையால் 
ஊக்கம் செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச
நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் 
நிலஞ்சேர விரல் வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்
பெண் ஆண் உருவாகி நின்றார் போலும் 
சிறப்புடைய அடியார்கட்கு இனியார் போலும் 
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

பாடல் விளக்கம்‬:
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே! எடுத்த வினையை முடிப்பதில் தீவிரம் மிக்க இராவணன் ஊக்கம் மிக்கு அழகிய கயிலை மலையைக் கையால் பெயர்த்தலும், உமையாள் அஞ்ச, வெற்றி நிறைதலையுடைய அவன் பெருந்தோள்கள் இருபதும் முடிகள் பத்தும் சோர்ந்து நிலத்தில் வீழும் வண்ணம் கால்விரலை ஊன்றிய நிமலரும், பிறைச் சந்திரனை அணியாகச் சடையிடத்துக் கொண்ட பெருமானாரும், பெண்ணுருவும் ஆணுருவும் கலந்து நின்ற அம்மையப்பரும், பதிஞானச் சிறப்புடைய அடியவர்களுக்கு இனிய வரும் ஆவார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருச்சாய்க்காடு திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக