இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி
திருமுறை : முதல் திருமுறை 32 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பாடல் எண் : 01
ஓடே கலன் உண்பதும் ஊர் இடு பிச்சை
காடே இடமாவது கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,
ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.
பாடல் விளக்கம்:
உண்ணும் பாத்திரம் பிரம கபாலமாகும். அவர் உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் நன்முலை நாயகியும் தானுமாய் மகிழ்ந்து பெருமையோடு விளங்கும் திருத்தலமாகிய இடைமருது இதுதானோ?.
பாடல் எண் : 02
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன்முடி தன்மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட
படம் கொண்டது ஒரு பாம்பு அரையார்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.
பாடல் விளக்கம்:
தடாகங்களிற் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில், அடியவர் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரை முகந்து சுமந்து வந்து அபிடேகிக்குமாறு, படம் எடுத்தாடும் நல்ல பாம்பை இடையிலே கட்டிய பரமன் தான் விரும்பிய இடமாகக் கொண்டுறையும் இடைமருது இதுதானோ?.
பாடல் எண் : 03
வெண் கோவணம் கொண்டு ஒரு வெண் தலை ஏந்தி
அங்கோல் வளையாளை ஒரு பாகம் அமர்ந்து
பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்
எம்கோன் உறைகின்ற இடைமருது ஈதோ.
பாடல் விளக்கம்:
வெண்மையான கோவணத்தை அணிந்து ஒப்பற்ற வெள்ளிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அழகியதாய்த் திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒருபாகமாக விரும்பி ஏற்று, பொங்கிவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது எம் தலைவனாயுள்ள சிவபிரான் எழுந்தருளிய இடைமருதூர் இதுதானோ?.
பாடல் எண் : 04
அந்தம் அறியாத அருங்கலம் உந்திக்
கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல்
வெந்த பொடிப் பூசிய வேத முதல்வன்
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.
பாடல் விளக்கம்:
அரிய அணிகலன்களைக் கரையில் வீசி மணம் கமழ்ந்து வரும் காவிரி நதியின் அழகிய கரைமீது திருவெண்ணீறு அணிந்தவனாய், முடிவறியாத வேத முதல்வனாய் விளங்கும் எம் தந்தையாகிய சிவபிரான் உறைகின்ற இடைமருதூர் இதுதானோ?.
பாடல் எண் : 05
வாசம் கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்தாய்ப்
பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகாய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ.
பாடல் விளக்கம்:
மணம் கமழும் சிறந்த மலர்களை உடைய சோலைகளில் வண்டுகளைக் கொண்டதும், உலக மக்கள் பலரும் கூடிச் செம்மையாளராய்த் தைப்பூசத் திருநாளில் நீராடி வணங்குவதும், பொலிவும் அழகும் உடையவனாய் ஈசன் எழுந்தருளி விளங்குவதுமான இடைமருது என்னும் தலம் இதுதானோ?.
பாடல் எண் : 06
வன் புற்று இளநாகம் அசைத்து அழகாக
என்பில் பலமாலையும் பூண்டு எருது ஏறி
அன்பில் பிரியாதவளோடும் உடனாய்
இன்புற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ.
பாடல் விளக்கம்:
வலிய புற்றுக்களில் வாழும் இளநாகங்களை இடையிலே அழகாகக் கட்டிக் கொண்டு, எலும்பால் இயன்ற மாலைகள் பலவற்றையும் அணிகலன்களாகப் பூண்டு, அன்பிற்பிரியாத உமையம்மையோடும் உடனாய் எருதேறிச் சிவபிரான் இன்புற்றுறையும் இடைமருது என்பது இதுதானோ?.
பாடல் எண் : 07
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி
போக்கிப் புறம் பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ.
பாடல் விளக்கம்:
தேக்கு, வேங்கை, பலா ஆகிய மரங்களைச் சுமந்து வந்து இருகரைகளிலும், அம்மரங்களை எடுத்து வீசி, ஆரவாரித்து வரும் அலைகளையுடையதாய காவிரி நதியின் அழகிய கரைமீது சிவபெருமான் பொருந்த உறையும் இடைமருது என்னும் தலம் இதுதானோ?.
பாடல் எண் : 08
பூவார் குழலார் அகில்கொண்டு புகைப்ப
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த
ஆவா அரக்கன் தனை ஆற்றல் அழித்த
ஏவார் சிலையான் தன் இடை மருது ஈதோ.
பாடல் விளக்கம்:
மலர் சூடிய கூந்தலை உடைய மங்கல மகளிர் அகில் தூபம் இட, அடியவர் இடையீடின்றித் திருவடிகளை மனம் குளிர்ந்து ஏத்த, கண்டவர் ஆஆ என இரங்குமாறு இராவணனது ஆற்றலை அழித்த, அம்பு பொருத்தற்கேற்ற மலைவில்லைக் கையில் கொண்ட, சிவபெருமானின் இடைமருது என்னும் தலம் இதுதானோ?.
பாடல் எண் : 09
முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்
நல் தாமரையானொடு மால் நயந்தேத்தப்
பொன்தோளியும் தானும் பொலிந்து அழகாக
எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ.
பாடல் விளக்கம்:
முற்றாத பால் போன்ற இளம்பிறையை முடிமிசைச் சூடிய முதல்வனாய், நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், திருமாலும் விரும்பித் தொழ, உமையம்மையும் தானுமாய்ச் சிவபிரான் அழகாகப் பொலிந்து உறைகின்ற இடைமருது என்னும் தலம் இதுதானோ?.
பாடல் எண் : 10
சிறு தேரரும் சில் சமணும் புறங்கூற
நெறியே பல பத்தர்கள் கை தொழுதேத்த
வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல்
எறியார் மழுவாளன் இடை மருது ஈதோ.
பாடல் விளக்கம்:
சிறுமதியாளராகிய தேரர்களும், சிற்றறிவினராகிய சமணர்களும், புறங்கூறித் திரிய, சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதிக்கப் பகைவரைக் கொன்றொழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான் எழுந்தருளிய, மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமேல் உள்ள இடைமருது என்னும் தலம் இதுதானோ?.
பாடல் எண் : 11
கண்ணார் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
எண்ணார் புகழ் எந்தை இடைமருதின்மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.
பாடல் விளக்கம்:
இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக