திங்கள், 20 ஜூலை, 2015

திருவெண்காடு திருமுறை பதிகம் 04

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ வெண்காட்டு நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 49 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பண் காட்டிப் படியாய தன் பத்தர்க்குக்
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும்
பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய்ம் மட நெஞ்சமே.

பாடல் விளக்கம்‬:
அறியாமையை உடைய நெஞ்சமே! பண்ணிசை காட்டி வழிபடுகின்ற, நிலவுலகிற் பொருந்திய தன் அன்பர்களுக்குத் திருக்கடைக்கண் காட்டி அருளி, கண்ணிற்கருமணி போன்றுள்ளவனும், சென்னியின்கண் பெண், பிறை ஆகியவற்றை வைத்தவனும் ஆகிய பெருமானது திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.


பாடல் எண் : 02
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்
ஒள்ளிய கணம் சூழ் உமை பங்கனார்
வெள்ளியன் கரியன் பசு ஏறிய
தெள்ளியன் திருவெண்காடு அடை நெஞ்சே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சே! கொள்ளியாகிய வெவ்விய தழலை வீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும், உமை பங்கரும், வெள்ளிய திருவெண்ணீற்றினரும், அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும், விடையேறிய தெளிவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.


பாடல் எண் : 03
ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே
வான் நோக்கும் வழி ஆவது நின்மினோ
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்
தேன் நோக்கும் திருவெண்காடு அடை நெஞ்சே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சே! தன்னால் நோக்கப்படும் அடியார்கள் நாவினில் அருள் தேன் பாயுமாறு நோக்கும் திருவெண்காட்டை அடைவாயாக! உலகீர்! உடல் நோக்கிய சிற்றின்பங்களை விரும்பி உழலாது, வான்நோக்கும் வழி எதுவோ அதில் நிற்பீர்களாக.


பாடல் எண் : 04
பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின்
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே
பெருவெண்காட்டு இறைவன் உறையும் இடம்
திருவெண்காடு அடைந்து உய்ம் மட நெஞ்சமே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! பருத்த வெள்ளிய தந்தங்களையும், பசுங்கண்களையும், மதத்தையும் உடைய வேழத்தின் உருவத்தை உமையாள் அஞ்சக் காட்டி நின்றவனும், பெரிய சாம்பலால் வெள்ளிய இடுகாட்டில் தங்குபவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாம் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.


பாடல் எண் : 05
பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள்
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால்
செற்றவன் திருவெண்காடு அடை நெஞ்சே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சே! உயிர்களாற் பற்றத்தக்கவனும், கங்கை, பாம்பு, பிறையுடன் உற்றவனும் சடையினனும், உயர்ஞானங்கள் கற்றவனும், கீழ்மைக்குணமுடையார் புரங்களை ஓரம்பாற் செற்றவனும் ஆகிய பெருமான் உறையும் திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.


பாடல் எண் : 06
கூடினான் உமையாள் ஒரு பாகமாய்
வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்
காடனார் அடியே அடை நெஞ்சமே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! உமையாளை ஒருபாகமாய்க் கூடிய வரும், விசயற்கு வேடனாய் அருள்புரிந்தவரும், உயர்ந்த சிவனாரும் ஆகிய அன்பானினைவார் சிந்தையில்மேவிய திருவெண்காடனாரின் திருவடியே அடைவாயாக.


பாடல் எண் : 07
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடையான் கயவர் புரம்
எரித்தவன் மறைநான்கினோடு ஆறு அங்கம்
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சே! கங்கை, பாம்பு, மதி ஆகியவற்றை ஒருங்கு தாங்கியவனும், முறுக்குண்ட புன்சடையுடையவனும், கீழவர் புரங்களை எரித்தவனும், நான்கு மறைகளையும், ஆறங்கங்களையும் விரித்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவெண் காட்டை அடைந்து வழிபடுவாயாக.


பாடல் எண் : 08
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள்
சிட்டன் ஆதி என்று சிந்தை செய்யவே
நட்ட மூர்த்தி ஞானச்சுடராய் நின்ற
அட்ட மூர்த்திதன் வெண்காடு அடை நெஞ்சே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சே! பட்டமும், இண்டை மாலைகளும் கொண்டு அன்பர்கள் `உயர்ந்தவனே! ஆதியே!` என்று சிந்தை செய்ய நடனமாடும் மூர்த்தியாகவும், ஞானச்சுடராய் நின்ற அட்ட மூர்த்தியாகவும் உள்ள பெருமானின் திருவெண்காடடைந்து வழிபடுவாயாக.


பாடல் எண் : 09
ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அவ்வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா
ஞானவேடன் விசயற்கு அருள்செய்யும்
கான வேடன்தன் வெண்காடு அடை நெஞ்சே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சே! பன்றி வேடம் கொண்ட திருமாலும், பிரமனும் தானவேடத்தை முன் தாழ்ந்து அறிய வலிமையில்லாத ஞானவேடனும், அருச்சுனனுக்கு அருள்செய்யும் காட்டு வேடனும் ஆகிய பெருமானின் திருவெண்காடு அடைந்து வழிபடுவாயாக.


பாடல் எண் : 10
பாலை ஆடுவர் பன்மறை ஓதுவர்
சேலை ஆடிய கண்ணுமை பங்கனார்
வேலையார் விடமுண்ட வெண்காடர்க்கு
மாலையாவது மாண்டவர் அங்கமே.

பாடல் விளக்கம்‬:
பாலை நிலத்தில் ஆடுபவரும், பல மறைகளை ஓதுபவரும், சேல்மீன் போன்று காதளவும் ஆடுகின்ற கண்ணை உடைய உமையொருபாகரும், கடலிற் பொருந்திய விடமுண்டவரும் ஆகிய வெண்காடர்க்கு இறந்தவர் உறுப்புக்களாகிய எலும்புகளே மாலையாவது.


பாடல் எண் : 11
இரா வணம் செய மாமதி பற்றவை
இரா வணம் உடையான் தனை உள்குமின்
இராவணன் தனை ஊன்றி அருள்செய்த
இராவணன் திருவெண்காடு அடைமினே.

பாடல் விளக்கம்‬:
அறிவைப்பற்றியிருக்கும் பற்று இல்லாதபடி செய்தற்பொருட்டு அயிராவணத்தை உடைய பெருமானை நினைமின். இராவணனைக் கால் விரலால் ஊன்றி அருள்செய்த அகோர முகத்தினரின் திருவெண்காட்டை அடைவீராக.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக