வெள்ளி, 31 ஜூலை, 2015

திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர்

இறைவியார் திருப்பெயர் : முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை

திருமுறை : முதல் திருமுறை 101 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு கட்டைக் கோபுர வாயிலும் இரண்டு பிராகாரங்களும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கோவிலுக்கு வெளியே எதிரில் இந்திர தீர்த்தம் உள்ளது. தீர்த்தக் கரையில் விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கட்டைக் கோபுர வாயிலின் முகப்பின் மேல் ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் சுதை வடிவில் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 

உள் நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் அழகாகவுள்ளது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. 2 வது வாயில் வழியே உள்ளே சென்றால் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி பலிபீடங்கள் உள்ளன. உள் மண்டபத்தில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியை அடுத்தாற்போல் சித்தி விநாயகர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பிராகாரத்தில் நால்வரையடுத்து, கன்னி விநாயகர் உள்ளார். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி உள்ளது. அதனால் எதிரில் மண்டபத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. 

பிராகாரத்தில் தொடர்ந்து பைரவர், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தின் வலதுபுறம் பள்ளியறையும், பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் உரிய கட்டமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன.

கருவறையில் மூலவர் கண்ணாயிரநாதர் கிழக்கு நோக்கி சுயம்புத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். பாணப்பகுதி சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. மூலவர் மண்டபத்தில் சந்திரசேகர் திருமேனி உள்ளது. அடுத்து நடராஜர் சபை உள்ளது. பிரதோஷ நாயகர், அஸ்திரதேவர், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், விநாயகர் முதலிய உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சுவாமிக்குத் தீபாராதனை செய்து அடுத்து அம்பாளுக்கும் தீபாராதனை செய்து அதற்குப்பிறகே திருநீறு, குங்குமம் வழங்கும் மரபு இக்கோயிலில் இருந்து வருகின்றது.

தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன், கெளதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு, முனிவரின் வேடத்தில் அகலிகையுடன் சந்தோஷமாக இருந்தான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய அகலிகையும் சம்மதித்தாள். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் எங்கும் பெண் குறிகள் உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க, "ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர். 


இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மாவிடம் சென்றான். அதற்கு பிரம்மா குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் பெண் குறிகளும் ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்தார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்" என்று பெயர் பெற்றார். வாமன அவதாரம் எடுத்த திருமாலும் இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட, அவருக்கும் அருள் செய்ததால் இத்தலத்திற்கு குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று.


திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

"திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது, நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும், இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை, இத்தல இறைவனை வழிபடுகவர்கள் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர், இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்." என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் கூறியுள்ளார்.

சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் உள்ளது. சிதம்பரம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள கதிராமங்கலம் என்னும் இடத்தில் இருந்து 5 கி. மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு

பாடல் எண் : 01
தண்ணார் திங்கள் பொங்கரவம் தாழ்புனல் சூடிப்
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழுவோர்கட்கு இடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாய நணுகுமே.

பாடல் விளக்கம்‬:
குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத்திலிருந்து தாழ்ந்து வந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும்.


பாடல் எண் : 02
கந்தமர் சந்தும் கார் அகிலும் தண்கதிர் முத்தும்
வந்தமர் தெண்ணீர் மண்ணி வளஞ்சேர் வயல் மண்டி
கொந்தலர் சோலைக் கோகிலமாடக் குளிர் வண்டு
செந்திசை பாடும் சீர்திகழ் கண்ணார் கோயிலே.

பாடல் விளக்கம்‬:
மணம் பொருந்திய சந்தனம், கரிய அகில், குளிர்ந்த ஒளி பொருந்திய முத்து ஆகியன பொருந்தியதாய் வரும் தெளிந்த நீரையுடைய மண்ணியாற்றால் வளம் பெறும் வயல்களால் சூழப்பட்டு, கொத்துக்களாக விரிந்த மலர்களை உடைய சோலைகளில் குயில்கள் ஆடச்செவிகளைக் குளிர்விக்கும் வண்டுகள் செவ்வழிப் பண்பாடும் சீரோடு திகழ்வது, சிவபிரானது திருக்கண்ணார் கோயிலாகும்.


பாடல் எண் : 03
பல்லியல் பாணிப் பாரிடம் ஏத்த படுகானின்
எல்லி நடஞ்செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர்
கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி
கல்லியலிஞ்சி மஞ்சமர் கண்ணார் கோயிலே.

பாடல் விளக்கம்‬:
பலவாக இயலும் தாளங்களை இசைத்துப் பூதகணங்கள் ஏத்த, பிணங்கள் இடப்படும் சுடுகாட்டில் நள்ளிராப்போதில் திருநடம்புரியும் ஈசனாகிய எம்பெருமானது இடம், காடுகளில் முல்லையும், மல்லிகையும் காட்டு மல்லிகையோடு பின்னி விளங்குவதும், கல்லால் இயன்ற வானளாவிய மதில்களில் மேகங்கள் அமர்ந்திருப்பதுமாகிய கண்ணார்கோயில் என்னும் தலமாகும் என்பர்.


பாடல் எண் : 04
தருவளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
மருவளர் கோதையஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
உருவளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கருவளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே.

பாடல் விளக்கம்‬:
மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழ்ந்த உயர்ந்த பெரிய யானையை, மணம் பொருந்திய மலர் மாலையை அணிந்துள்ள உமையம்மை அஞ்சுமாறு உரித்தவரும், அடர்ந்த பசுமை நிறம் பொருந்தி உயர்ந்து வளர்ந்துள்ள கல்லால மர நிழலில் அமர்ந்து வேதங்களின் உட்பொருளைச் சனகாதி முனிவர்க்கு இவ்வுலகத்தே உரைசெய்து உணர்த்தியவருமாகிய சிவபெருமான் கருவறையில் தங்கியிருக்கின்ற கோயிலை அடைந்தவர்கள் முழுமையான கல்வியறிவின் பயனை அடைந்தோராவர்.


பாடல் எண் : 05
மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறுமாவலிபாற் சென்று உலகுகெல்லாம் அளவிட்ட
குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயது கண்ணார் கோயிலே.

பாடல் விளக்கம்‬:
வஞ்சகம் பொருந்திய மனத்தோடு பெரிய உருவம் உடையவனாய், தனக்கு ஒப்பார் இல்லாதவனாய், தேவர்களைத் துன்புறுத்திய மாவலி என்ற அரக்கர் குல மன்னனிடம் சென்று அவனிடம் மூன்றடி மண் கேட்டு எல்லா உலகங்களையும் தனக்கே உரியவாய் அளவிட்டு அளந்த குள்ளமான பிரமசாரிய வடிவுடைய வாமனன், சிவபெருமானது வடிவாகத் தாபித்து வழிபட, அவனுக்கு அருள் செய்த நீல மறுப் பொருந்திய கண்டனாகிய சிவபிரான் மேவிய ஊர், கண்ணார் கோயிலாகும்.


பாடல் எண் : 06
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பாக
உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எவ்வுலகிற்கும்
கண்ணவனை கண்ணார் திகழ் கோயில் கனிதன்னை
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்பால் நடலையே.

பாடல் விளக்கம்‬:
விண்ணவர்களைக் காத்தற் பொருட்டுக் கடலுள் தோன்றிய நஞ்சினை விருப்போடு உண்டவனை, தேவர்களுக்கு அமுதம் அளித்து எவ்வுலகிற்கும் பற்றுக்கோடாய் விளங்குபவனை, விளக்கமான கண்ணார் கோயிலுள் விளங்கும் கனிபோல்பவனை நண்ணி வழிபட வல்லவர்கட்கு, நமனால் வரும் துன்பங்கள் இல்லை.


பாடல் எண் : 07
முன்னொரு காலத்து இந்திரன் உற்ற முனிசாபம்,
பின்னொரு நாள் அவ்விண்ணவர் ஏத்த பெயர்வெய்தித்
தன்னருளால் கண்ணாயிரம் ஈந்தோன் சார்பென்பர்
கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே.

பாடல் விளக்கம்‬:
முன்னொரு காலத்தில் கௌதம முனிவரால் விளைந்த சாபத்தால் உடல் எங்கும் பெண் குறிகளோடு வருந்தித் தன்னை வழிபட்ட இந்திரனுக்குப் பின்னொரு நாளில் தேவர்கள் புகழ்ந்து போற்றுமாறு தண்ணருளோடு அச்சாபத்தைப் போக்கி அவற்றை ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்த சிவபிரான் எழுந்தருளிய இடம், கன்னியர்கள் நாள்தோறும் கூடி வந்து வழிபடும் தலமாகிய கண்ணார் கோயில் என்பர்.


பாடல் எண் : 08
பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணா தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர் வாள் தேர் முன்னீந்த
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே.

பாடல் விளக்கம்‬:
அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ் அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று விரிந்த புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால் நினைந்து போற்றிய அளவில் அவனுக்கு அழிக்க முடியாத, ஒளியினை உடையவாளையும் தேரையும் முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான் வீற்றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில் என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.


பாடல் எண் : 09
செங்கமலப் போதில் திகழ் செல்வன் திருமாலும்
அங்கமலக்கண் நோக்கரும் வண்ணத்து அழலானான்
தங்கமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளத்து
அங்கமலத்தோடு ஏத்திட அண்டத்து அமர்வாரே.

பாடல் விளக்கம்‬:
செந்தாமரைப் போதில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் அழகிய தங்கள் கமலம் போன்ற கண்களால் நோக்கிக் காணுதற்கரிய அழலுருவாய் நின்ற பெருமான் தன் கருணை நிறைந்த கமலக் கண்களோடு வீற்றிருக்கும் தலமாகிய கண்ணார் கோயிலை அடைந்து அங்குத் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் ஏத்திடுவோர் வானுலகில் இனிது உறைபவராவர்.


பாடல் எண் : 10
தாறிடுபெண்ணைத் தட்டுடையாரும் தாமுண்ணும்
சோறுடையார் சொல்தேறன்மின் வெண்ணூல் சேர் மார்பன்
ஏறுடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேலோர்
ஆறுடை அண்ணல் சேர்வது கண்ணார் கோயிலே.

பாடல் விளக்கம்‬:
குலைகளை ஈனும் பனை மரத்தின் ஓலைகளால் வேயப்பட்ட தடுக்கை உடையாக உடுத்தித் திரியும் சமணரும், தாம் உண்ணும் சோற்றையே பெரிதெனக் கருதும் புத்தரும் கூறும் அறிவுரைகளைக் கேளாதீர். வெண்மையான பூநூல் அணிந்த மார்பினனும், ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், மேலானவனும், என்பு மாலை அணிபவனும், நீண்ட சடைமுடி மேல் கங்கையை அணிந்துள்ளவனுமாகிய தலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் தலம் கண்ணார் கோயிலாகும். அதனைச் சென்று தொழுமின்.


பாடல் எண் : 11
காமரு கண்ணார் கோயில் உளானைக் கடல் சூழ்ந்த
பூமரு சோலைப் பொன்னியன் மாடப் புகலிக்கோன்
நாமரு தொன்மைத் தன்மை உள் ஞான சம்பந்தன்
பாமரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே.

பாடல் விளக்கம்‬:
அழகிய திருக்கண்ணார் கோயில் என்னும் தலத்துள் விளங்கும் சிவபெருமானை, கடல் ஒரு புடைசூழ்ந்ததும், பூக்கள் நிறைந்த சோலைகளை உடையதும் அழகியதாய் அமைந்த மாட வீடுகளைக் கொண்டதுமான புகலிப் பதியின் தலைவனும், பழமையான இறைபுகழை, நாவினால் மருவிப் போற்றுபவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிப் பரவிய ஓசையோடு திகழும் இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கண்ணார்கோவில் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

1 கருத்து:

  1. ஐயா சிவ தொண்டர்களுக்கு வணக்கம் 7நபர் கொண்ட குடும்பம வருமானம் ஒருவர் முதியவர் மூன்று பேர்படிப்பவர் இருவர்இப்போது ஒருவர் வருமானம் நின்றது கஷ்டம் தொழில் நஷ்டம் இடரினும் தளரினும் பதிகம்45 நாட்களாகபடித்து வருகிறேன் உணவுக்கு கஷ்டம் தொழில் அமைந்து சிரப்பாக நடக்க அனைத்து சிவதொண்டர்களும் எனது குடும்த்திற்க்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ள வேண்டுகிறேன் நமசிவய பிரகாஷ்

    பதிலளிநீக்கு