இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ வெண்காட்டு நாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி
திருமுறை : இரண்டாம் திருமுறை 48 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பாடல் எண் : 01
கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.
பாடல் விளக்கம்:
வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக் கண் கொண்டவன்: கையில் கனல் ஏந்தியவன்: உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன்: பிறையணிந்த சடைமுடியினன்: பண்ணில் இறை வடிவானவன்: பயிரை வளர்க்கும் மேகமானவன்: விடை ஏந்திய கொடியை உடையவன்.
பாடல் எண் : 02
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயன தோளுமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே.
பாடல் விளக்கம்:
மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டா.
பாடல் எண் : 03
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமா பேராளன்
விண்ணவர்கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.
பாடல் விளக்கம்:
மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, எண்ணற்றன வாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை எண்திசை, பெண் ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகழாளனாகிய சிவபிரான், இந்திரன் வழிபடத் திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டு எழுந்தருளியுள்ளான்.
பாடல் எண் : 04
விடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடம்மண்டு துறைக் கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.
பாடல் விளக்கம்:
நஞ்சுண்ட கண்டனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில் மடல் விரிந்த வளைந்த தாழை மலர் நிழலைக் குருகு என்றெண்ணி நீர்நிலையில் வாழும் கெண்டை மீன்கள் தாமரைப் பூவின் அடியில் மறைய அதனைக் கண்ட கடல் முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுகிறது.
பாடல் எண் : 05
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேலடர் வெங்காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே.
பாடல் விளக்கம்:
கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேத கேதுவின் உயிரைக் கவர வந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர்.
பாடல் எண் : 06
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறு உகந்தான் உறை கோயில்
பண்மொழியால் அவன் நாமம் பல ஓத பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.
பாடல் விளக்கம்:
தனது சடை முடியோடு தண்மதியையும் வெய்ய அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான், உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால் இறைவன் திருப்பெயர்களை ஓதிக்கொண்டு வெண்முகில் சேரும் உயரிய கரியபனை மீது வீற்றிருக்கும் வெண்காடாகும்.
பாடல் எண் : 07
சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரை மேலசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய
மிக்கதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கணுடை இறையவனே.
பாடல் விளக்கம்:
திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவனும், சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும், இடையில் எலும்பு மாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், வினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய இறையவனே ஆவான்.
பாடல் எண் : 08
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.
பாடல் விளக்கம்:
பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும் கோயில், கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வானளாவிய பொழிலில் வரிவண்டுகள் இசைபாடவும் விளங்கும் திருவெண்காடாகும்.
பாடல் எண் : 09
கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.
பாடல் விளக்கம்:
தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிக உயர்ந்தும் ஆழ்ந்தும் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபிரான் வெள்ளானை தவஞ்செய்து வழிபடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம்.
பாடல் எண் : 10
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர் பிரிமின் அறிவுடையீர் இது கேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்திரு வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீதுலர் என்று உணருமினே.
பாடல் விளக்கம்:
போதி மரத்தின் அடியில் தவம் செய்யும் புத்தர்கள், அசோக மரநிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும் வன்புரைகளைப் பொருளாகக் கருதும் பேதையர்களைப் பிரிவீர்களாக. அறிவுடையவரே! இதனைக் கேளுங்கள். வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை ஓதியவர் ஒரு தீங்கும் இலராவர் என்று உணருமின்.
பாடல் எண் : 11
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.
பாடல் விளக்கம்:
குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த் தலைவனாகிய தமிழ் ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறைமதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப் பண்ணிசை பொலியப் பாடிய இச்செந்தமிழ் மாலை பத்தையும் வல்லவர், மண்பொலிய வாழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
அருமையான அற்புதம்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குSuperb
பதிலளிநீக்குதிருச்சிற்றம்பலம் ��
பதிலளிநீக்குதிருஞானசம்பந்தர் பாடலுக்கு பொருள் தேடிய எனக்கு தங்கள் அருளால் ஆனந்த அமுதினை அருந்தினேன். நன்றி ஐயா.
பதிலளிநீக்குமூலம் பட பழ
அருமையான விளக்கம் இந்த பாடல் புத்தகம் எங்கள் வீட்டில் இருந்தது அதில் விளக்கம் இல்லை . பொருள் தெரியாததால் நான் படிக்கவில்லை.இங்கு பொருளோடு பதிவு செய்திருப்பது மிகவும் பிடித்திருக்கிறது ..பதிவிட்டவர்களுக்கு நன்றி .ஓம் நமசிவாய
பதிலளிநீக்கு🙏
பதிலளிநீக்கு