செவ்வாய், 14 ஜூலை, 2015

திருவாஞ்சியம் திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வாஞ்சியநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : வாழவந்தநாயகி, மங்களநாயகி

திருமுறை : ஏழாம் திருமுறை 76 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
பொருவனார் புரிநூலர் புணர் முலை உமையவளோடு 
மருவனார் மருவார் பால் வருவதும் இல்லை நம் அடிகள்
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திருவாஞ்சியத்து உறையும் 
ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.

பாடல் விளக்கம்‬:
நம் இறைவர், தீயவரோடு மாறுபடுபவர்; முப்புரி நூலை அணிபவர்; நெருங்கிய தனங்களையுடைய உமையோடு கூடியிருத்தலை உடையவர்; தம்மை அடையாதவரிடத்தில் வருவதும் இல்லை; திருமகளை உடைய திருமால் வணங்கித் துதிக்கின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவராகிய அவர், தம் அடியவரை ஊழ்வினை வந்து நலிய ஒட்டாது ஒரு தலையாகக் காப்பர்.


பாடல் எண் : 02
தொறுவில் ஆனிள ஏறு துண்ணென இடிகுரல் வெருவிச் 
செறுவில் வாளைகள் ஓடச் செங்கயல் பங்கயத்து ஒதுங்க
கறுவிலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள் 
மறுவிலாத வெண்ணீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.

பாடல் விளக்கம்‬:
பசுக் கூட்டத்துள், இளைய ஆனேறு, கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி, வயல்களில் உள்ள வாளை மீன்கள் ஓடவும், செவ்வரிகளையுடைய கயல் மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும், பகையில்லாத மனத்தை உடைய சான்றோர் அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், குற்றமற்ற வெள்ளிய நீற்றைப் பூசுதல், சிறந்ததொரு கருத்தை உடையது.


பாடல் எண் : 03
தூர்த்தர் மூவெயில் எய்து சுடு நுனைப் பகழி அது ஒன்றால்
பார்த்தனார் திரள் தோள் மேல் பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்தமாம் மலர்ப் பொய்கைத் திகழ் திருவாஞ்சியத்து அடிகள் 
சாத்து மாமணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.

பாடல் விளக்கம்‬:
தீர்த்தமாகிய, சிறந்த பூக்களையுடைய பொய்கைகளையுடைய, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், நெறி பிறழ்ந்தவரது மூன்று மதில்களை சுடுகின்ற முனையையுடைய ஓர் அம்பினால் அழித்து, ஒருவனாகிய அருச்சுனனது திரண்ட தோள்மீது பல கூரிய அம்புகளை அழுத்தி, தாம் கட்டுகின்ற பெரிய மாணிக்கத்தை உடைய கச்சு, ஒரு பக்கத்திலே பல தலைகளையுடையதாய் இருக்கின்றது; இது வியப்பு!.


பாடல் எண் : 04
சள்ளை வெள்ளையம் குருகு தானது ஆம் எனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் 
துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் 
வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே.

பாடல் விளக்கம்‬:
சள்ளை என்னும் மீன், வள்ளைக் கொடியின் வெண்மையான மலரை, வெண்மையான குருகு என்று கருதி அஞ்சிச் சுழன்று, பின், வாளை மீனின் வாயிலே சென்று துள்ளுகின்ற, தெளிவாகிய நீரையுடைய பொய்கைத் துறைகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், வெள்ளிய, நுண்ணிய சாம்பலைப் பூசுகின்ற வேறுபாடொன்றனை எஞ்ஞான்றும் ஒழியாதே உடையர்.


பாடல் எண் : 05
மைகொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கைக் 
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்
பைதல் வெண் பிறையோடு பாம்புடன் வைப்பது பரிசே.

பாடல் விளக்கம்‬:
கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மலைமகளோடு உடன் உறைகின்ற வாழ்க்கையையும், பறிக்கப்பட்ட கூவிளை இலையால் ஆகிய மாலை விளங்குகின்ற சடை முடியையும் உடைய அழகராகிய, நெய்தற் பூக்களையுடைய அழகிய கழனிகளில், தாழம்பூக்கள் மணம் வீசுகின்ற, புகழையுடைய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர்க்கு, இளைய வெண்பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிவதுதான் இயல்பு.


பாடல் எண் : 06
கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையும் சூடிப்
பரந்த பாரிடம் சூழ வருவர் நம்பரமர் தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு திகழ் திருவாஞ்சியத்து உறையும் 
மருந்தனார் அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.

பாடல் விளக்கம்‬:
தம் இயல்பு காரணமாக, கரந்தைப் பூவினாலும், கூவிள இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிக்க பூதகணங்கள் புடைசூழ வருபவரும், நம் இறைவரும் ஆகிய, திருத்தமான மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் அமுதம் போல்பவர், தம் அடியாரை, வலிய வினைகள் வந்து துன்புறுத்த ஒட்டாது காப்பவரேயாவர்.


பாடல் எண் : 07
அருவி பாய்தரு கழனி அலர் தரு குவளையம் கண்ணார்
குருவியாய் கிளி சேர்ப்பக் குருகினம் இரிதரு கிடங்கில்
பருவரால் குதி கொள்ளும் பைம்பொழில் வாஞ்சியத்து உறையும் 
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.

பாடல் விளக்கம்‬:
மலர்ந்த குவளைப் பூப்போலும் கண்களையுடைய மகளிர், நீர்த் திரள் பாய்கின்ற கழனிகளில் கதிர்களை ஆராய்கின்ற குருவிகளையும், கிளிகளையும் அங்கு நின்றும் நீங்கிச் சென்று சேரப் பண்ணுகையால், குருகுகளின் கூட்டம் அஞ்சி நீங்குகின்ற கால்வாய்களில் பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற, பசிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், `மால், அயன்` என்பார்க்கு அறிய ஒண்ணாத இறைவரது, ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளே நமக்குப் புகலிடம்.


பாடல் எண் : 08
களங்களார் தரு கழனி அளிதரக் களிதரு வண்டு 
உளங்களார் கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி
குளங்களால் நிழல் கீழ் நல்குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் 
விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே.

பாடல் விளக்கம்‬:
ஏர்க்களம் நிறைதற்கு ஏதுவாகிய வயல்கள் அன்பைத் தர, அதனால் மகிழ்வுற்ற வண்டுகள், கேட்போர் உள்ளம் இன்பம் நிறைதற்குரிய ஆரவாரமான இசை, மேற்சென்று ஒலிக்கின்ற கேள்வியை, குளக்கரைகளில் உள்ள ஆலமரத்தின் கீழ்க்கிளையில் இருந்து நல்ல குயில்கள் பழகுகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவரது, ஒளி வீசுகின்ற, தாமரை மலர்போலும் திருவடிகளை நினைப்பவர் வினையால் துன்புறுத்தப்படுதல் இலராவர்.


பாடல் எண் : 09
வாழையின் கனி தானும் மது விம்மி வருக்கையின் சுளையும்
கூழை வானரம் தம்மில் கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள்
ஏழை பாகனை அல்லால் இறையெனக் கருதுதல் இலமே.

பாடல் விளக்கம்‬:
வாழைப் பழங்களையும், சாறு மிக்கொழுகுகின்ற பலாப் பழத்தின் சுளைகளையும், `எனக்கு வைத்த இப்பங்கு சிறிது` என்று இகழ்ந்து, அறிவு குறைந்த குரங்குகள் தமக்குள் கலாய்த்து, தாழை மட்டையும், வாழை மட்டையுமாகிய கோல்களால் போர் செய்து செருக்குக் கொள்கின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் மங்கை பங்காளனை யல்லது வேறொருவரை, யாம் `கடவுள்` என்று நினைத்தல் இலம்.


பாடல் எண் : 10
செந்நெல் அங்கு அலங்கு கழனித் திகழ் திருவாஞ்சியத்து உறையும் 
இன்னலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும் 
பொன்னலங்கல் நன் மாடப் பொழிலணி நாவல் ஆரூரன் 
பன்னலங்கல் நன் மாலை பாடுமின் பத்தர் உளீரே.

பாடல் விளக்கம்‬:
செந்நெற்களையுடைய அழகிய மரக்கலம் போலும் கழனிகளையுடைய புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், இனிய மாலைகளையணிந்த சடையையுடைய எம் இறைவனது, ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைத் துதித்த, பொன்னரி மாலைகள் தூக்கப்பட்ட நல்ல மாடங்களையுடைய, சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரனது, பல அழகுகளையுடைய, கற்கத் தகுந்த நல்ல பாமாலையை, அடியராய் உள்ளவர்களே, பாடுமின்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருவாஞ்சியம் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக